தலையங்கம்

வானம் வழி திறந்தது! | விமானப்போக்குவரத்துத் துறை தளர்வுகள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

வெளிநாட்டுப் பயணிகள் விரைவிலேயே வழக்கம்போல இந்தியாவுக்கு சுற்றுலா வரலாம் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு, சுற்றுலாத் துறைக்கு மட்டுமல்லாமல் விமான போக்குவரத்துத் துறைக்கும் ஹோட்டல் துறைக்கும் மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது. மாநில அரசுகளும் சுற்றுலாவுடன் தொடர்புடைய துறையினரும் மத்திய அரசுக்கு தொடர்ந்து கொடுத்துவந்த அழுத்தத்தின் காரணமாக அறிவிப்பு வெளிவந்திருக்கிறதே தவிர, அதுகுறித்த அடுத்தகட்ட நகர்வை மத்திய அரசு ஏனோ தவிர்த்து வருகிறது. அதனால், சில குழப்பங்களும் ஏமாற்றங்களும் காணப்படுகின்றன.

அரசு அறிவிப்பின்படி, அக்டோபர் 15 முதல் வழக்கமாக ரஷியாவிலிருந்தும் பிரிட்டனிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை கோவாவுக்குத் தனி விமானங்களில் அழைத்து வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் வெளிநாட்டுப் பயணிகள் முன்புபோல இந்தியாவுக்கு வருவதற்கு நவம்பர் 15-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். அதற்கு புதிதாக நுழைவு அனுமதி (விசா) பெறுவதும் அவசியம் என்று அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே நுழைவு அனுமதி பெற்றிருக்கும் பயணிகளும்கூடப் புதிதாக மீண்டும் நுழைவு அனுமதி பெற்றாக வேண்டும். 

வெளிநாட்டுப் பயணிகளுக்கான அனுமதி சற்றுத் தாமதிக்கப்பட்டாலும், உள்நாட்டுப் விமானப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. அக்டோபர் 15 முதல் பண்டிகைக் காலத்தையொட்டி விமானங்களில் இருக்கைக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டிருக்கின்றன. மே 25 முதல் மீண்டும் இயங்கத் தொடங்கிய விமானங்கள் இதுவரையிலும் இருக்கைக் கட்டுப்பாடுகளுடன்தான் பறந்து கொண்டிருந்தன. இனிமேல் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர்ந்து பயணிக்க முடியும். 

2020 பிப்ரவரியில் (நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தொடங்குவதற்கு முன்னர்) காணப்பட்டதைவிட கடந்த சில நாள்களாக விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. நாள்தோறும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் விமானப் பயணம் மேற்கொள்கின்றனர். வரும் நாள்களிலும் வாரங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் முடக்கப்பட்டிருந்த முனையங்களை (டெர்மினல்) இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய விமான நிலையங்களான தில்லியும் மும்பையும் மீண்டும் இயக்கத் தொடங்கியிருக்கின்றன. தில்லியின் முதலாவது முனையம் அக்டோபர் 31 முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும். நிர்ணயிக்கப்பட்டதற்கு ஒரு வாரம் முன்பாகவே மும்பையின் முதலாவது முனையம் இயக்கப்படுகிறது.

சர்வதேச அளவிலும் விமானங்கள் உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் பறக்கத் தொடங்கிவிட்டன. கொள்ளை நோய்த்தொற்றைத் தொடர்ந்து இயல்புநிலை திரும்பிவிட்டதன் அறிகுறியாக எல்லைகளைக் கடந்து பயணிகள் எல்லா நாடுகளுக்கும் பயணிப்பது பார்க்கப்படுகிறது. 
"ஹென்லே பாஸ்போர்ட் இன்டெக்ஸ்' உலகிலுள்ள விமானப் பயணிகள் குறித்த எல்லா விவரங்களையும் சேகரிக்கும் முனைப்பு, கடந்த வாரம் தனது குறியீட்டு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டின் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) எந்த அளவுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துகொள் முடியும். 

சமீபத்தில் வெளியான ஹென்லே பாஸ்போர்ட் இன்டெக்ஸ்படி, தரவுப்பட்டியலில் இந்திய கடவுச் சீட்டு  கடந்த ஆண்டைவிட  ஆறு இடங்கள் குறைந்து 90-வது இடத்தில் காணப்படுகிறது. ஒரு நாட்டின் கடவுச்சீட்டை வைத்துக்கொண்டிருப்பவர் எத்தனை நாடுகளுக்கு முன்கூட்டிய "நுழைவு அனுமதி'யில்லாமல் (விசா) செல்ல முடியும் என்பதன் அடிப்படையில் ஹென்லே பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தயாரிக்கப்படுகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்ச்சியடையும் பொருளாதாரங்களுக்கும் இடையேயான வேறுபாட்டை வெளிச்சம் போடுகிறது இந்தக் குறியீடு. 

ஹென்லே பாஸ்போர்ட் இன்டக்ஸ் பட்டியலில் ஜப்பானும் சிங்கப்பூரும் முன்னிலை வகிக்கின்றன. அந்த நாடுகளின் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் நுழைவு அனுமதியில்லாமல் 192 நாடுகளுக்கு பயணிக்க முடியும். அதைத்தொடர்ந்து தென்கொரியாவும் ஜெர்மனியும் இடம்பெறுகின்றன. பெரும்பலான ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் குறியீட்டுப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இந்திய கடவுச்சீட்டுடன் 58 நாடுகளுக்குத்தான் முன் நுழைவு அனுமதியில்லாமல் பயணிக்க முடியும் என்பதால் நாம் 
90-வது இடத்தில் இருக்கிறோம்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளுக்குப் போவதைவிட, வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்கு வருவதுதான் முக்கியம். அதன்மூலம் அந்நியச் செலவாணி கிடைக்கும் என்பது மட்டுமல்லாமல் உள்நாட்டுப் பொருளாதாரமும் ஊக்கம் பெறும். இந்தியாவுக்கு வருகை தருவற்கு இப்போதும்கூட வெளிநாட்டுப் பயணிகள் தயங்குகிறார்கள். இந்தியாவின் கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் பற்றிய தவறான கண்ணோட்டத்தை நூறு கோடி தடுப்பூசிகள் போடப்பட்ட சாதனை சற்று மாற்றியிருக்கிறது என்றாலும் சர்வதேசப் பயணிகள் வழக்கம்போல இந்தியாவுக்கு வருவதை ஊக்குவிக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம். 

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு முழுமையான அனுமதி வழங்கியிருக்கும் அதேவேளையில் விமான நிறுவனங்கள் கடந்த ஒன்றரை ஆண்டு இழப்பை ஈடுகட்ட பயணிகளிடமிருந்து அதிகக் கட்டணம் வசூலிக்கும் முயற்சியில் ஈடுபடாமல் இருப்பதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உண்டு என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT