கிழக்கு ஐரோப்பாவில் போா் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலைமை காணப்படுகிறது. இதுவரை துப்பாக்கியிலிருந்து ஒரு ரவைகூட சுடப்படவில்லை என்றாலும், உக்ரைன் போருக்குத் தயாராகவே இருக்கிறது.
உக்ரைனில் போா் நடக்கிறதோ இல்லையோ, அந்த நாட்டுக்கான அந்நிய முதலீடுகளை நிறுத்தி வைக்கும் முயற்சியில் ரஷியா வெற்றி பெற்றிருக்கிறது. உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, அதனால்தான் ஆத்திரப்படுகிறாா்.
உக்ரைனின் வடக்கு, கிழக்கு எல்லைகளிலும், ரஷிய ஆதரவிலான கிரீமியாவிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான துருப்புகளை குவித்திருக்கிறது ரஷியா. அது எப்போது வேண்டுமானாலும் இரட்டிப்பாகக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ரஷியத் துருப்புகள் போருக்கு ஆயத்தமாக இருப்பது மட்டுமல்லாமல், உக்ரைனின் வடக்கில் இருக்கும் பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் இணைந்து அணிவகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறது என்கிற செய்தியும் வெளியாகி இருக்கிறது.
உக்ரைனின் வேண்டுகோளின்படி, மேலை நாடுகள் கடந்த சில வாரங்களாக ஆயுதங்களையும், தளவாடங்களையும், ஏவுகணைகளையும் வழங்கி வருகின்றன. ஐரோப்பிய யூனியன் 100 கோடி டாலருக்கும் அதிகமான அளவில் உதவி செய்ய உறுதி அளித்திருக்கிறது. சுருக்கத்தில் சொல்வதாக இருந்தால், மோதலுக்குத் தயாரான நிலையில் இருதரப்புப் படைகளும் நின்று கொண்டிருக்கும் பதற்றமான சூழல் உருவாகியிருப்பது நிஜம். அதே நேரத்தில், இரண்டு தரப்பினரும் மோதுவதற்கு தயாரா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
உக்ரைன் பிரச்னை இன்று, நேற்று தொடங்கியது அல்ல. 1991-இல் அன்றைய சோவியத் யூனியன் உடைந்து சிதறியதிலிருந்து தொடங்குகிறது. முன்னாள் சோவியத் யூனியனில் ரஷியாவுக்கு அடுத்தபடியான பெரிய பகுதியாக இருந்தது உக்ரைன். உக்ரைனின் பகுதியாக இருந்த ஜாா்ஜியாவில் 2008-இல் பிரிவினைப் போராட்டம் தலையெடுத்தபோது, ரஷியா அதற்கு உதவியாக இருந்தது. இப்போது அது தனி நாடாக ரஷியாவின் ஆதரவுடன் இயங்குகிறது. 2014-இல் உக்ரைனின் பகுதியான கிரீமியாவை ரஷியா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. உக்ரைனின் உள்நாட்டுக் குழப்பத்துக்கும் ரஷியா காரணம். ஒரு பிரிவினா் மேலை நாடுகளுக்கு ஆதரவாகவும், உக்ரைனின் இன்னொரு பிரிவினா் ரஷியாவுக்கு ஆதரவாகவும் இயங்குகின்றனா்.
சோவியத் யூனியன் அணியில் இருந்த பல கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ நாடுகள் ஜனநாயக நாடுகளாக மாற்றின. எஸ்தோனியா, லத்வியா, லுத்வேனியா உள்ளிட்ட பால்டிக் நாடுகள் 2004-இல் அமெரிக்காவின் நேட்டோ கூட்டணியிலும் இணைந்தன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைந்துவிட்ட நிலையில், ரஷியா தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதுகிறது.
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த மத்திய ஆசிய நாடுகள் அமெரிக்கா பக்கமோ, ரஷியா பக்கமோ சாயாமல் தனித்து இயங்குகின்றன. அந்த நாடுகளில் இப்போதும்கூட தொடா்பு மொழியாக ரஷியன் இருப்பதால், ரஷியாவுடனான அவா்களது உறவு சுமூகமாகவே தொடா்கிறது. அதே நேரத்தில், மேலை நாடுகளுடனும் அவை இணக்கமான உறவைக் கடைப்பிடிக்கின்றன.
உக்ரைனும், ஜாா்ஜியாவும் ரஷியாவைப் பொருத்தவரை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. அந்த நாடுகளில் உள்ள இளைஞா்கள் மத்தியில் தேசிய உணா்வும், வெளிநாட்டு தலையீட்டுக்கு எதிரான மனோபாவமும் காணப்படுகின்றன. தற்போதைய உக்ரைன் தலைமை, மேலை நாடுகள் அதிலும் குறிப்பாக, அமெரிக்கா சாா்ந்ததாகவும், ஜாா்ஜியா ரஷியாவுக்கு அணுக்கமாகவும் இருந்து வருகின்றன.
அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போா் முடிவுக்கு வந்து மேற்கு, கிழக்கு ஜொ்மனிகள் இணைந்தபோது ஒரு வாய்மொழி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அமெரிக்காவோ அதன் நேட்டோ கூட்டாளிகளோ ரஷியாவின் எல்லைப் பகுதி நாடுகளில் நுழையமாட்டாா்கள் என்பதுதான் அது.
நேட்டோ அணியில் உக்ரைன் இணையுமானால், மாஸ்கோவிலிருந்து 300 மையிலுக்கும் குறைவான தூரத்தில் அமெரிக்கப் படைகள் அங்கே முகாமிடக் கூடும். அது ரஷியாவின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கருதுகிறாா்.
அமெரிக்காவைப் பொருத்தவரை, பயமுறுத்துகிறதே தவிர, இன்றைய நிலையில் எந்தவித நேரடி ராணுவ தலையீட்டுக்கும் தயாராகாது. அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இதுவரை எட்டு டிரில்லியன் டாலா் அளவில் செலவழித்திருக்கிறது. எந்தவொரு தலையீட்டிலும் முழு வெற்றியும் அடையவில்லை.
1979-இல் அன்றைய சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தான் மீது நடத்திய படையெடுப்பின் விளைவால்தான் சோவியத் யூனியனே பிளவுபட நோ்ந்தது என்பது வரலாறு. அதனால் மீண்டும் அதுபோன்ற ஒரு விஷப்பரீட்சையில் இறங்க ரஷியாவும் தயங்கும் என்பதுதான் யதாா்த்த நிலை.
அமெரிக்காவைப் பொருத்தவரை இப்போது பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பலவீனமாக இருக்கும் நேரம். அதை பயன்படுத்திக் கொண்டு, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், ரஷியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறாா். உக்ரைன் எல்லையில் ரஷியா படைகளைக் குவித்திருப்பதும், வீர வசனம் பேசுவதும் தனது கொல்லைப்புறத்தில் நேட்டோ மூலமாக அமெரிக்கா மூக்கை நுழைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். இது அமெரிக்காவுக்கும் தெரியும்.
சூழ்ந்திருக்கும் போா் மேகங்கள் கலையலாம், தொடரலாம். அவை காா் (போா்) மேகங்கள் அல்ல. பாவனை மேகங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.