தலையங்கம்

முடிவுகள் சொல்லும் முடிவுகள்! | குஜராத், ஹிமாசல் தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம் 

ஆசிரியர்

குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பதையும், ஹிமாசல பிரதேசத்தில் வழக்கம்போல ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடும் என்பதையும் அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால், குஜராத்தில் இந்த அளவிலான வெற்றியையும், ஹிமாசலில் நூலிழை தோல்வியையும் யாருமே கணிக்கவில்லை.

குஜராத் சட்டப்பேரவைக்கான 182 இடங்களில் 156 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்பது வரலாற்று சாதனை. இதற்கு முன்னால், 1985-இல் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து நடந்த அனுதாப அலைத் தேர்தலில்கூட, அன்றைய ஆளுங்கட்சியான காங்கிரஸால் 149 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. 1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பூபேந்திர படேல் வெற்றி பெற்றிருப்பது, நரேந்திர மோடி உள்ளிட்ட முந்தைய முதல்வர்கள் யாரும் நிகழ்த்தியிராத சாதனை.

பாஜக - காங்கிரஸ் என்ற இருதுருவ அரசியல் மாறி, மூன்றாவது சக்தியாக ஆம் ஆத்மி கட்சி நுழைந்தபோது, எதிர்க்கட்சி வாக்குகள் பிளவுபட்டு அதனால் பாஜக வெற்றி பெறும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டதே தவிர, இந்த அளவிலான வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை.

முந்தைய 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜகவால் இப்போது 156 இடங்களில் வெற்றி பெற முடிந்ததற்குக் காரணம், எதிர்க்கட்சி வாக்குகள் ஆம் ஆத்மி கட்சியால் பிளவுபட்டது அல்ல, பாஜகவின் வாக்கு வங்கி 52.5%-ஆக உயர்ந்ததுதான். வாக்கு விகிதத்தைப் பார்க்கும்போது, ஆம் ஆத்மி கட்சி இல்லாமல் இருந்திருந்தாலும் இதே அளவிலான அல்லது இதைவிட அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்கும் என்று தோன்றுகிறது.

குஜராத் வெற்றியில், பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கூட்டணியும் பெரும் பங்கு வகித்ததை மறுப்பதற்கில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம். அவர் முதல்வராக இருந்து கட்டமைத்த திட்டங்களால் பலனடைந்த மக்கள். சொந்த மாநிலத்தில் பிரதமர் மோடி தலைமையிலான கட்சி தோல்வி அடைவதை மக்கள் விரும்பவில்லை என்பதுதான் இந்த அளவிலான வெற்றிக்குக் காரணமாக இருக்க முடியும். 

2017-இல் 49.5% வாக்குகள் பெற்று 99 இடங்களை வென்ற பாஜக, இப்போது 52.5% வாக்குகளுடன் 156 இடங்களைப் பெற்றிருக்கிறது. 41.44% வாக்குகள் பெற்று 77 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் இப்போது 27.3% வாக்குகள் பெற்று வெறும் 17 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது.

குஜராத்திலுள்ள பெரும்பாலான வாக்காளர்கள், அதாவது 70%-க்கும் அதிகமானோர், அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை மட்டுமே பார்த்தவர்கள். அப்படி இருந்தும், ஆறு தடவையாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் கட்சியின் மீது அவர்களுக்கு ஏன் சலிப்போ, வெறுப்போ ஏற்படவில்லை என்பது சிந்தனைக்குரிய கேள்வி. மக்களின் நாடித்துடிப்பை கட்சித் தலைமையும், கட்டமைப்பும் தொடர்ந்து கண்காணித்து வருவதுதான் அதற்குக் காரணம்.

மாநில அரசுக்கு எதிரான மனநிலை குஜராத்தில் இருக்கத்தான் செய்தது. மக்களின் அதிருப்திக்கு ஆளாகி இருந்த 40-க்கும் அதிகமான எம்.எல்.ஏ-க்களுக்குத் துணிந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன்மூலம் ஆட்சிக்கு எதிரான மனநிலையை திசைதிருப்பி, அந்தத் தொகுதிகளில் தனது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டது பாஜகவின் அரசியல் சாதுரியம்.

கடந்த 2017 தேர்தலில், ராகுல் காந்தியின் தலைமையில் காணப்பட்ட உற்சாகமும், வேகமும் இந்தமுறை காங்கிரஸில் காணப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சி களத்தில் இறங்கி வேலை செய்த அளவுக்குக்கூட காங்கிரஸ் பல தொகுதிகளில் பணியாற்றவில்லை என்று ஊடகங்களில் செய்தி வந்தும்கூட சுறுசுறுப்படையவில்லை. 

தொடர்ந்து தோல்வி முகத்தில் இருந்த காங்கிரஸுக்கு ஹிமாசல் வெற்றி மிகப் பெரிய ஆறுதல். ஹிமாசல சட்டப்பேரவையில் 68 இடங்களுக்கு 40 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது என்றாலும், அதை மிகப் பெரிய வெற்றி என்று கூறிவிட முடியவில்லை.

ஆப்பிள் விவசாயிகளின் அதிருப்தி, 'அக்னிபத்' அறிவிப்பால் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் எதிர்ப்பு, நீர்மின் நிலையங்களுக்கு எதிரான ஆதிவாசிகளின் மனநிலை என்று ஆட்சியிலிருந்த பாஜகவுக்கு சவாலான நிலை ஹிமாசல பிரதேசத்தில் காணப்பட்டது. அப்படி இருந்தும் 40 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கும் (43.9%), 25 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாகி இருக்கும் பாஜகவுக்கும் (43%) இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 0.9% மட்டுமே. 21 பாஜக போட்டி வேட்பாளர்கள்தான் காங்கிரஸின் வெற்றியை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை, ஹிமாசல பிரதேசத்தில் வெறும் 1.1% வாக்குகள் மட்டுமே பெற முடிந்திருக்கிறது. குஜராத்தில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 5 இடங்களில் வெற்றியும், 12.9% வாக்குகளும் பெற்றிருக்கிறது. ஊடகங்கள் கணித்ததுபோல, காங்கிரஸுக்கு மாற்று சக்தியாகவோ, பாஜகவுக்கு சவாலாகவோ உருவெடுக்க முடியாவிட்டாலும், தேசிய கட்சி அந்தஸ்து பெறுகிறது என்பதில் மகிழ்ச்சி அடையலாம், அவ்வளவே!

விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இடையிலும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன. காங்கிரஸ் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்கேதாட்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை: காவிரி ஆணையத்தில் தமிழகம் எதிர்ப்பு

பொது வாழ்க்கையில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

தமிழகத்தின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்

இன்று எலிமினேட்டர்: ராஜஸ்தான் - பெங்களூரு பலப்பரீட்சை

SCROLL FOR NEXT