வர்த்தகம்-விளையாட்டு-சூதாட்டம்!
கிரிக்கெட் போட்டிகளின்போது, இந்தியாவில் 34 கோடி பேர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக மதிப்பிடப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் (18-ஆவது) ஐபிஎல் கிரிக்கெட் சீசன், மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரை மொத்தம் 65 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஐபிஎல் போட்டியை முன்னிலைப்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வர்த்தகமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் 11 விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகளை தொலைக்காட்சி, கைப்பேசி செயலிகள் வாயிலாக நேரலையில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்து ரசிக்கின்றனர். தங்களுக்கு விருப்பமான அணிகள் விளையாடும் ஆட்டங்களை நேரடியாக மைதானத்துக்குச் சென்று காண விரும்புவோர் பிற மாநிலங்களுக்குச் செல்ல விமானப் பயணங்களை மேற்கொள்வதால், விமான சேவை நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து போட்டிகளைக் காண வருவோருக்கு உதவும் நுழைவு இசைவு ஒப்புதல் உள்பட விமான முன்பதிவு செய்து கொடுக்கும் நிறுவனங்கள், நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்கள், மருத்துவமனை சார்ந்த தொழில்களில் இந்த 65 நாள்களில் கூடுதல் வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளது.
வீடுகளில் தொலைக்காட்சியில் நேரலையாகப் போட்டியை குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து காணும் ரசிகர்களில் பலரும், இணையவழி உணவு விநியோக நிறுவனத்தின் வாயிலாக, உணவை ஆர்டர் செய்து வாங்குவதால் அந்த நிறுவனங்களும் பலன் பெறுகின்றன. முக்கியப் போட்டிகளின்போது, இணையவழி உணவு விநியோக நிறுவனங்களின் வர்த்தகம் பன்மடங்கு அதிகரிக்கிறது. இதன்மூலம் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பிரபல உணவு விநியோக நிறுவனப் பங்குகள், ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து லாபம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
விளம்பரங்கள் வாயிலாக கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 18-ஆவது ஐபிஎல் சீசனில் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள், போட்டியின் நடுவே விளம்பரங்களை ஒளிபரப்பும் கட்டணத்தை கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் அதிகரித்துள்ளன.
பிரபலங்களைக் கொண்டு சமூக ஊடகங்கள் வாயிலாக சந்தைப்படுத்தும் உத்தி அதிகரித்துவரும் நிலையில், நிகழாண்டு ஐபிஎல் சீசனில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் விளம்பரங்களுக்காக ரூ.550 கோடி முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எஃப்எம்சிஜி எனப்படும் நுகர்வோர் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் பொருள்கள் சார்ந்த துறை 25 சதவீதமும், மின்னணுப் பொருள்கள் விற்பனைத் துறை, எண்ம வர்த்தகம் தலா 15 சதவீதமும், ஆட்டோ மொபைல் துறை 10 சதவீதமும் விளம்பரங்களுக்காக செலவிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது, பிரபலங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் மொத்தம் 3.15 லட்சம் பதிவுகள் கிரிக்கெட் சார்ந்தவையாக இருந்தன. இது நிகழாண்டில் மேலும் அதிகரிக்கும். இதைப் பயன்படுத்தி பாரம்பரிய ஊடகங்களுக்கு இணையான விளம்பர வாய்ப்புகளை சமூக ஊடகப் பிரபலங்கள் பெறுகின்றனர். குறிப்பாக, விளையாட்டுத் தொடர்பான காலணி, உபகரணங்கள், உடைகள் போன்ற விளம்பரங்கள் உச்சத்தைத் தொடுகின்றன.
வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களான கூகுள், மெட்டா, எக்ஸ் போன்றவற்றின் மூலம் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கான வரி ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் ரத்து செய்யப்படும் என மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி மார்ச் 25-ஆம் தேதி மக்களவையில் அறிவித்தார். இதன்மூலம் அந்த நிறுவனங்கள் வாயிலாக விளம்பரம் செய்யும் உள்நாட்டு நிறுவனங்களும் பயன்பெறும். இணையவழி நிறுவனங்களும் விளம்பரக் கட்டணங்களைக் குறைக்கும். இதனால், விளம்பரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புண்டு.
மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஐபிஎல்லை மையப்படுத்தி இணையவழி சூதாட்ட நிறுவனங்களும் தங்களது வணிகத்தைப் பெருக்க களத்தில் குதித்துள்ளன. இணையவழி சூதாட்டம் சில மாநிலங்களில் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், முக்கிய அணிகள் விளையாடும்போது சூதாட்டமும் சூடுபிடிக்கிறது.
இணையவழி விளையாட்டு செயலிகள் அதிகரிப்பு, அதிக வருமானம் கொண்ட இளைஞர்கள், அறிதிறன்பேசி பயன்பாடு ஆகியவற்றால் இணையவழி சூதாட்டச் சந்தை இயக்கப்படுகிறது. கிரிக்கெட் போட்டிகளின்போது, இந்தியாவில் 34 கோடி பேர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக மதிப்பிடப்படுகிறது. இதில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது.
பெரும்பாலான இணையவழி விளையாட்டுச் செயலி நிறுவனங்கள் சூதாட்டத்தை திறன் சார்ந்த விளையாட்டாக சந்தைப்படுத்துகின்றன; தங்களின் செயலிகளை திரைத் துறை, விளையாட்டு உள்ளிட்ட துறை பிரபலங்களைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்துகின்றன. தெலங்கானாவில் சூதாட்டம் சட்டவிரோதம் என்பதால், விளையாட்டுச் செயலி விளம்பரங்களில் பங்கேற்று சூதாட்டத்தை ஊக்குவித்ததாக 25 திரைப்பட நடிகர்கள் மீது அந்த மாநில அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.
சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், வர்த்தகம் முதன்மை பெறுவதில் தவறில்லை. ஆனால், அது இணையவழி சூதாட்டத்துக்கு வழிகோலுமானால் ஏற்புடையதல்ல!