முகப்பு
தலையங்கம்

ஐபிஎல் திருவிழா!

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஜவேந்திர சஹல், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பிடித்தனர்.

Updated On : 31 மார்ச், 2026 at 12:40 AM
ஐபிஎல் 2026 அணிகளின் கேப்டன்கள் - ஐபிஎல்
பகிர்:

சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டி கடந்த சனிக்கிழமை (மார்ச் 28) தொடங்கி உள்ளது. 19-ஆவது முறையாக நடைபெறும் இந்தப் போட்டி மே 31-ஆம் தேதி நிறைவடைகிறது.

அப்போதைய பிசிசிஐ துணைத் தலைவர் லலித் மோடியால் ஐபிஎல் போட்டி 2008-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை நடைபெற்ற 18 போட்டிகளில் அதிகபட்சமாக மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் தலா ஐந்து முறை வாகை சூடியுள்ளன.

பல அணிகளில் இருந்து அவியல் போன்று ஆட்டக்காரர்களைச் சேர்த்து விளையாடப்படும் ஐபிஎல் போட்டி சோபிக்காது என்றே தொடக்கத்தில் கருதப்பட்டது. ஆனால், சென்னை அணியையும், அதன் கேப்டன் தோனியையும் தங்களது என்று கொண்டாடும் அளவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள். இதேபோன்று பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல அணிகளுடனும் ரசிகர்கள் ஆழமாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதில் போட்டியை நடத்தும் நிர்வாகத்தின் வெற்றி அடங்கி உள்ளது.

இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத சூழலிலும் நிர்வாகம் அசராமல் வெளிநாடுகளில் நடத்தி வெற்றிக் கொடி நாட்டியது. பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை அணியினர் மீது 2009 மார்ச் 3-இல் பயங்கரவாதிகள் தாக்குதல், இந்திய மக்களவைத் தேர்தல் போன்ற காரணங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்றபோது முழுப் போட்டியும் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது.

2014 மக்களவைத் தேர்தலின்போது முதல் 20 ஆட்டங்களும், 2020-இல் கரோனா ஒட்டுமொத்த பாதிப்பால் முழுப் போட்டியும், 2021-இல் சில ஆட்டக்காரர்களுக்கு பாதிப்பு என்றபோது 31 ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ.) நடத்தப்பட்டன. இந்தியாவில் நடத்தினால் எப்படி உற்சாகம் இருக்குமோ, அதேபோன்ற உற்சாகம் அப்போதும் இருந்தது என்பது நிர்வாகத்தின் திறமைக்கு மற்றொரு சான்று.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளை (ஆடவர், மகளிர்) இந்தியாவில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் ரூ.16,600 கோடிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்கவாழ் இந்திய தொழிலதிபரின் தனியார் நிறுவனம் ரூ.15,240 கோடிக்கும் அண்மையில் வாங்கி உள்ளது என்பதில் இருந்தே ஐபிஎல் போட்டிகளின் வணிகரீதியான வெற்றியைப் புரிந்துகொள்ள முடியும். சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளில் வருவாய் அடிப்படையில் முதல் இடத்திலும், ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளில் 11-ஆவது இடத்திலும் ஐபிஎல் போட்டி உள்ளது.

ஐபிஎல் போட்டிகளுக்கேற்பவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அட்டவணை தயாரிக்கப்படுகிறது. பெரிய அணிகளின் ஆட்டக்காரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதால் ஏப்ரல், மே மாதங்களில் பெரும்பாலும் தங்களுக்குள் விளையாடுவதில்லை.

இந்த ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டதில் இருந்து பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றே கூற வேண்டும். அதிகம் அறியப்படாத இளம் ஆட்டக்காரர்களுக்கு இது நல்ல களமாக அமைகிறது. சர்வதேச ஆட்டக்காரர்களுடன் விளையாடும் அனுபவத்தை அளிக்கிறது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஜவேந்திர சஹல், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பிடித்தனர். ஐபிஎல் காரணமாகவே ஆஷிஷ் நெஹரா 36 வயதிலும், தினேஷ் கார்த்திக் 37 வயதிலும் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.

நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடும் கலையை இந்திய ஆட்டக்காரர்களுக்கு இது கற்றுக் கொடுத்துள்ளது. அதனால், சர்வதேச ஆட்டங்களில் வேறெந்த அணியையும்விட அதிகமாக 250 ரன்களுக்குமேல் இந்தியா பல முறை குவித்துள்ளது. பல ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறது.

ஐபிஎல் போட்டி மாபெரும் வெற்றி பெற்றாலும் இதுகுறித்து விமர்சனங்களும் உள்ளன. சில நேரங்களில் ஆட்டக்காரர்கள் தேசிய அணிகளுக்கு விளையாடுவதைவிட அதிக ஊதியம் காரணமாக ஐபிஎல் போட்டிக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். தொடர்ச்சியாக அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்பதால் ஆட்டக்காரர்களின் உடல் தகுதி பாதிக்கப்படுகிறது.

தோனி, கோலி, ரோஹித் போன்ற தனிப்பட்ட ஆட்டக்காரர்களை ரசிகர்கள் ஆதரிப்பதால் அவர்களுக்கு முன் களமிறங்கும் ஆட்டக்காரர்கள் ரசிகர்களால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். கடந்த ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பெங்களூரில் 11 ரசிகர்கள் உயிரிழந்தது ஐபிஎல் போட்டி வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும்.

கிரிக்கெட் அதன் நளினத்தை இழந்து வெறும் பொழுதுபோக்காகவும் வர்த்தகமயமாகவும் ஆகிவிட்டது என்பதை மறுக்க இயலாது. எது எப்படியோ, அடுத்த இரண்டு மாதங்கள் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு கொண்டாட்டம்தான் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.