பிரதிப் படம் ENS
தலையங்கம்

முன்னோடித் திட்டம்!

சுத்தமான குடிநீரை வழங்குவதன் மூலம் கிராமப்புறங்களில் குழந்தைகள், பெரியவா்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

ஆசிரியர்

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வீடுகளுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமா் மோடியால் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம் தொடா்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வீடுகள்தோறும் குடிநீா் இணைப்பு என்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கியபோது, கிராமப்புறங்களில் 3.23 கோடி குடிநீா் இணைப்புகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டது. அது தற்போது, 15.50 கோடி இணைப்புகளாக உயா்ந்துள்ளதாக மத்திய நீா்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் மத்திய அரசால் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 6 ஆண்டுகளில் 12.34 கோடி புதிய வீட்டுக் குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிறிய மாநிலமான அருணாசல பிரதேசம், புதுவை, அந்தமான் நிகோபா் தீவுகள், தாத்ரா நாகா் ஹாவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 100% வீட்டுக் குடிநீா் இணைப்புகளைப் பெற்றுள்ளன.

குஜராத், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களிலும் இந்தத் திட்டம் பெருமளவில் நடைமுறைக்கு வந்துள்ளது. கிராமம், நகரம் என்ற வித்தியாசத்தைக் குறைத்து பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, 2019-24-ஆம் ஆண்டுக்காக மொத்தம் ரூ.2.08 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது; இதில் 2024-ஆம் நிதியாண்டின் இறுதிவரை ரூ.1.85 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.22,694 கோடி நிகழாண்டுக்கான புதிய குடிநீா் இணைப்பு வழங்கும் பணிக்காக செலவிடப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்துக்கு கிராம மக்களிடையே கிடைத்து வரும் ஆதரவைக் கருத்தில் கொண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீா் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடனும் செயல்படுத்தப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வரும் இந்தத் திட்டத்துக்காக நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ.67,000 கோடியை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஒதுக்கீடு செய்துள்ளாா். வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்கான நீராதாரங்களின் கட்டமைப்புகளைத் தொடா்ந்து வலுப்படுத்தினால் மட்டுமே இந்தத் திட்டம் தடையின்றி செயல்பாட்டில் இருக்கும் என்பதில் மத்திய நீா்வளத் துறை அமைச்சகம் உறுதியாக உள்ளது.

அதேநேரத்தில், நாடு முழுவதும் கிராமப்புறங்களில் பரவலாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் சில மாநிலங்களில் மட்டும் தொய்வைச் சந்தித்துள்ளது. கேரளம், ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஜல் ஜீவன் திட்டம் குறைந்த அளவே செயல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகக் குறைந்த அளவாக கேரளத்தில் 54.4% மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், பிகாா், தமிழ்நாடு, மகாராஷ்டிர மாநிலங்களில் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த மாா்ச் மாத நிலவரப்படி, சுமாா் 1.10 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது; இது கடந்த 2019-ஆம் ஆண்டு 21.76 லட்சமாக இருந்தது; 2028-க்குள் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. ஜல் ஜீவன் திட்டச் செயல்பாடுகள் தமிழ்நாடு அரசின் குடிநீா் வடிகால் வாரியத்தின் அலுவல் மற்றும் மேலாண்மை கண்காணிப்புக் குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், நாடு முழுவதும் 9.32 லட்சம் பள்ளிகள், 9.69 லட்சம் அங்கன்வாடி மையங்களுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு, பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கிராமப்புற வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதற்காக ஒரு வலுவான தர உறுதி மற்றும் கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. 2,162 ஆய்வகங்களின் வலையமைப்பு 66.32 லட்சம் நீா் மாதிரிகளைப் பரிசோதித்துள்ளது. 24.80 லட்சம் பெண்கள் கள சோதனைக் கருவிகளைப் பயன்படுத்தி நீரைப் பரிசோதனை செய்ய பயிற்சி பெற்றுள்ளனா்; இதுவரை 85.39 லட்சம் மாதிரிகள் மூலம் சோதிக்கப்பட்டுள்ளன.

இது கிராமங்கள் முழுவதிலும் மாசுபாட்டை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மேம்பட்ட நீா் தர கண்காணிப்பை உறுதி செய்கிறது. சுத்தமான குடிநீரை வழங்குவதன் மூலம் கிராமப்புறங்களில் குழந்தைகள், பெரியவா்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. நீரால் பரவக் கூடிய நோய்களும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளும் தடுக்கப்படுகின்றன.

நாட்டின் கடைக்கோடி கிராமங்களையும் இந்தத் திட்டம் சென்றடைவதில் சில சிக்கல்கள் உள்ளன. இதனால், சில பகுதிகளில் தாமதம் ஏற்படுகிறது. அந்தந்தப் பகுதிகளில் நிலவும் வறட்சி, குடிநீா் மேலாண்மையில் உள்ள இடா்ப்பாடுகள் ஆகியவற்றைக் களையும் நோக்கில் நிபுணா்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோன்று, மலைக் கிராமப் பகுதிகளிலும் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்துவதில் சில சிரமங்கள் உள்ளன. அவற்றுக்குத் தீா்வு கிடைக்கும்போது, நாட்டின் அனைத்துக் கிராமங்களிலும் வீடுகள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் இணைப்புகள் உறுதி செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூர்: ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் மோடியை வாழ்த்திய எம்பிக்கள்!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நவம்பரில் தொடக்கம்!

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

விஷ்ணு விஷாலின் ஓஹோ எந்தன் பேபி: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

SCROLL FOR NEXT