ச 
தலையங்கம்

‘அகல்விளக்கு’ ஓர் ஒளிவிளக்கு!

பள்ளி மாணவிகளுக்கு இணையம் தொடர்பான குற்றங்களை அறிவுறுத்த, "அகல்விளக்கு' என்ற பெயரிலான கையேடு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்

இணையப் பயன்பாடு அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஏராளமான ஆக்கபூர்வ பயன்கள் இருந்தாலும், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளைக் குறிவைத்து நடைபெறும் இணையக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இணையக் குற்றவாளிகள் மிக எளிதாக அப்பாவிகளை ஏமாற்றி விடுகின்றனர். அதனால், இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக, தமிழக பள்ளிக் கல்வித் துறை எடுத்திருக்கும் நடவடிக்கை கவனம் பெறுகிறது.

பள்ளி மாணவிகளுக்கு இணையம் தொடர்பான குற்றங்களை அறிவுறுத்த, "அகல்விளக்கு' என்ற பெயரிலான கையேடு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இணையத்தில் ஒருவரின் அடையாளத்தை மறைத்து மிரட்டி பணம் பறித்தல், ஆபாசமாக சித்தரிப்பது, வெறுப்பு பேச்சு, சட்டவிரோத தகவல்களைப் பரப்புவது போன்ற இணையவழி மோசடிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை வைத்துள்ள மாணவ, மாணவிகளைக் குறிவைத்து, பல்வேறு தனிப்பட்ட தகவல்களைப் பெற்று இணையக் குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும், அதுதொடர்பான குற்றங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பாதிக்கப்பட்டோர் பலர் மனமுடைந்து தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதைத் தடுக்கவும் இணையக் குற்றவாளிகளின் பிடியில் சிக்கிக் கொள்வோர் அதிலிருந்து மீண்டுவர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பள்ளி அளவிலேயே கற்றுத் தரப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அதன்படி, தற்போது வெளியிடப்பட்ட "அகல்விளக்கு' கையேட்டில் இதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

தனிப்பட்ட தகவல்கள், முகவரி, பள்ளியின் பெயர், கடவுச் சொற்களை பிறருக்குப் பகிரக் கூடாது; அவற்றை அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும் போன்ற அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொண்டாலே இணையக் குற்றவாளிகள் விரிக்கும் வலையில்

சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம். மேலும், மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் தயங்காமல் ஆசிரியர் அல்லது பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

ஆபாசப் படங்களை யாரேனும் அனுப்புதல், சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட நபர் குறித்து தவறான செய்தி, புகைப்படங்களைப் பகிர்தல் போன்றவற்றை எதிர்கொள்வது குறித்தும், இணையக் குற்றங்களின் வகைகள் குறித்தும் "அகல்விளக்கு' கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள 10 கட்டளைகளை மாணவிகள் பின்பற்றினால் பாதுகாப்பான இணையப் பயன்பாட்டைப் பெறலாம்.

இணையம் சார்ந்த கல்வி மிகவும் அவசியம் என்ற நிலையில், பள்ளி மாணவிகளுக்கு இணையக் குற்றங்கள் தொடர்பான புரிதல் இருக்க வேண்டும். இதை அவர்கள் பள்ளி அளவிலேயே பெறும்போது போதிய விழிப்புணர்வும் பெறுவர்.

தமிழகத்தில் பெண்கள் அதிகம் கல்வியறிவு பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். 5 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் தமிழகத்தில்தான் பெண்கள் தொடர்பான குற்றங்கள் குறைந்த அளவில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கோவை மாவட்டக் காவல் துறையால் கொண்டுவரப்பட்ட "புராஜெக்ட் பள்ளிக்கூடம்' திட்டம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும், தற்காப்புக் கலை, பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு போன்றவை இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் தமிழக காவல் துறையால் தொடங்கப்பட்ட "போலீஸ் அக்கா' என்ற திட்டம் கல்லூரி மாணவிகளிடம் வரவேற்பைப் பெற்றது. இந்தத் திட்டத்திலும் இணையம் தொடர்பான குற்றங்களே அதிகம் விசாரிக்கப்பட்டன.

பெண் காவலர்களின் கைப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்களைத் தொடர்பு கொண்டு தீர்வு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண் காவலர்கள் குறிப்பிட்ட காலஇடைவெளியில் கல்லூரிகளுக்குச் சென்று மாணவிகள் மத்தியில் இணையக் குற்றம் உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இணையம் தொடர்பான பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளும் மாணவிகள், அதுகுறித்து வெளியே சொல்லாமல் தாங்களாகவே அதைத் தீர்க்க முற்படும்போதுதான் அதன் தீவிரம் அதிகரிக்கிறது. புது தில்லியில் நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு நீதிபதி வர்மா ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், மத்திய அரசால் மகளிருக்கான கட்டணமில்லா உதவி தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் "181' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளது.

நாட்டிலேயே பெண்கள், மாணவிகளுக்கான பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையைத் தக்கவைக்க இதுவரை ஆட்சி செய்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளன. தற்போது, இணைய வடிவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகவும் அறிவுக்காகவும் பயன்படுத்த முடியும். ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் அதே வேளையில் அதன் எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்ளவும் இன்றைய இளைய சமுதாயம் தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில், "அகல்விளக்கு' ஓர் ஒளிவிளக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லாவரம்,குரோம்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

Dinamani வார ராசிபலன்! | Aug 24 முதல் 30 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தெய்வ தரிசனம்... கோபம் போக்கும் திருஇடும்பாவனம் சற்குணநாதேசுவரர்!

இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகிறார்!

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கிறார் விஜய்: ஆா்.பி.உதயகுமாா்

SCROLL FOR NEXT