தினந்தோறும் எகிறும் தங்கத்தின் விலை!  
தலையங்கம்

தங்கத்தில் பங்கம்!

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், நகைகளின் விற்பனை குறைந்து வருவதைப் பற்றி...

ஆசிரியர்

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், நகைகளின் விற்பனை குறைந்து வருகிறது. கரோனா கொள்ளைநோய்த் தொற்றுக்குப் பிறகு, நிகழ் ஆண்டில் கடந்த ஜூன் மாதம் தங்க நகைகளின் விற்பனை 60% குறைந்தது.

எனவே, தங்க வியாபாரிகள் மற்றும் நகைத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய நுகர்வோர் விவகாரத்துக்கான அமைச்சகம், 9 காரட் தங்க நகைகளுக்கும் ‘ஹால்மார்க்' முத்திரை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஜூலையில் நடைமுறைக்கு வந்துவிட்டாலும் எல்லா நகரங்களிலும் 9 காரட் தங்க நகைகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. முன்னணி நகைக் கடைகளில்கூட இன்னமும் 22 காரட், 18 காரட் நகைகள் மட்டுமே விற்பனையில் உள்ளன. பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளதால் விரைவில் 9 காரட் நகைகள் சந்தைக்கு வந்து விற்பனை சூடுபிடிக்கும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய தர நிர்ணயக் கழகமானது தங்க நகைகளுக்கு அளித்து வரும் "ஹால்மார்க்' முத்திரை பட்டியலில் தற்போதுள்ள 18, 20, 22, 23, 24 காரட்டுடன் புதிதாக 9 காரட்டும் சேர்ந்துள்ளது.

24 காரட் சுத்தமான (99.99%) தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது. அப்படி செய்தால் அது வளையும், நெளியும். அதில் 8.33% தாமிரம், வெள்ளி அல்லது துத்தநாகம் சேர்த்தால் கிடைக்கும் 22 காரட் (91.67%) தங்கத்தில் செய்தால்தான் திடம் கிடைக்கும். அதுவே சந்தையில் பிரதானமாக கிடைக்கும் 916 (22 காரட்) நகைகள் ஆகும். அதில் 91.67% தங்கம் என்பது அதன் பொருள்.

ஒன்பது காரட் நகைகளில் 37.5% மட்டுமே தங்கம் இருக்கும். எஞ்சிய 62.5% தாமிரம், வெள்ளி அல்லது துத்தநாகம் இருக்கும். 24 காரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ.10, 000 விற்கும் நிலையில், 9 காரட் தங்கத்தின் விலை கிராம் சுமார் ரூ. 3,700 எனக் கொண்டால் ஒரு பவுன் சுமார் ரூ.30 ஆயிரமாக இருக்கும். இது நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் நகை வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்கும். சந்தையானது இழந்த வாய்ப்பைப் பெறும் என்பது கணிப்பு.

ஒன்பது காரட் தங்க நகைகளை எல்லோராலும் வாங்க முடியும்; திடமாக இருக்கும்; நீண்ட நாள்கள் பயன்படுத்தலாம்; தினமும் அணிந்து கொள்ளலாம்; திருட்டு, சேதம் போன்ற ஆபத்துகள் குறைவு என்பதால் இந்த நகைகளுக்கு வரவேற்பு இருக்கலாம். ஆனால், முன்னணி நகைக் கடைகளில் இவற்றை விற்பனை செய்யத் தயங்குவார்கள். அவற்றின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அபாயம் உண்டு. புதிய நிறுவனங்கள் தோன்றலாம்.

தங்கத்தில் செய்யப்படும் முதலீடு பாதுகாப்பானது எனக் கருதி சிலர் கட்டிகளாகவோ, நகைகளாகவோ வாங்குவதுண்டு. அந்த முதலீடு எல்லாமே 24 காரட் அல்லது 22 காரட்டில்தான். 9 காரட் நகையை வாங்கினால் அதைப் பாதுகாப்பான முதலீடாக கருத முடியாது. மறுவிற்பனை மதிப்பும் குறைவுதான். எளிதில் விற்க முடியாது.

ஈரம், வியர்வை, சிலவகை வேதிப்பொருள் படுதல் போன்றவற்றால் 9 காரட் நகைகள் விரைவில் வெளிறிப்போகும் அபாயம் உண்டு. அதிக அளவு தாமிரம், துத்தநாகம் போன்ற உலோக கலப்பால் சிலருக்கு தோலில் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பும் உண்டு. தங்க நகைகளை உரசிப் பார்க்கும் மனநிலை கொண்ட சிலருக்கு, இதுமாதிரியான 9 காரட் நகைகள் சந்தையில் விற்பனைக்கு வரும்போது கூடுதல் சந்தேகம் ஏற்படுவதையும், அதனால் உறவுகள் சீர்கெடுவதையும் தவிர்க்க முடியாது.

தங்கத்தின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல், வரதட்சிணை மற்றும் அன்பளிப்பாக தங்க நகைகளை கொடுக்க விரும்புவோர், மேல்பூச்சில் (ஸ்கின் டச்) 22 காரட் இருக்குமாறும், உள்ளே (மெல்ட்டிங் டச்) 20 அல்லது 18 காரட் இருக்குமாறும் நகைகளைச் செய்து தரும்படி தங்க நகைகளை செய்வோரையும், விற்பனையாளர்களையும் கேட்கும் போக்கு அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது. 9 காரட்டில் தங்க நகை கிடைக்கும் என்றால் பணம் மிச்சமாகலாம்; ஆனால், நம்பகத்தன்மையில் பாதிப்பு ஏற்படும்.

22 காரட் நகைகள் எனக் கூறி விற்பனை செய்யும் முன்னணி நகைக் கடைகளில் வாங்கும் நகைகளில்கூட தங்கத்தின் அளவு குறைவாக உள்ள போலி நகைகள் இருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. சேதாரம் குறைவு என்றுகூறி விற்பனை செய்யும் நகை விற்பனை நிறுவனங்கள் மீதுகூட புகார்கள் கூறப்படுகின்றன.

தங்கத்தின் விலை உயர்வு உலகளாவிய காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், உள்ளூர் விற்பனையாளர்கள் நகைகளுக்கு செய்கூலி தவிர, "சேதாரம்' என்றுகூறி வசூலிக்கும் பணத்துக்கு எந்த வரைமுறையும் இல்லை. நகையின் வடிவமைப்புக்கு ஏற்ப அதிகபட்சமாக தங்கத்தின் விலையில் ஏறத்தாழ கால்பங்கு அளவுக்கு சேதாரம் வசூலிப்பதால் மொத்த விலை வானுயரச் சென்றுவிடுகிறது. புரியாத சேதார நடைமுறையை ஒழுங்குபடுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்தாலே விற்பனைக் குறைவை ஓரளவு தடுக்க முடியும்.

அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் 10 காரட்டுக்கும் குறைவானதை தங்கம் என்று அங்கீகரிப்பதில்லை. ஒன்பது காரட்டுக்கு அங்கீகாரம் என்பது, போலி நகைகளுக்கான அதிகாரபூர்வ அனுமதியாக மாறிவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் வாங்கி சேமிப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது, ஆனால், ஒரு சில பவுன் தங்க நகைகள் வாங்கும் சாமானியர்கள் ஏமாற்றப்படக்கூடும் என்று எச்சரிக்கத் தோன்றுகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிமாசலில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சுதர்சன் ரெட்டி மீதான விமர்சனம்! அமித் ஷாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம்!

ஏற்றத்தில் பங்குச் சந்தை! ஐடி பங்குகள் விலை உயர்வு!

வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவைகள்: தொடக்கி வைத்தார் மேயர் பிரியா!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT