தலையங்கம்

இமயம் விடுக்கும் எச்சரிக்கை!

ஜம்மு - காஷ்மீரில் நேரிட்டுவரும் தொடர் மழை வெள்ளம், நிலச்சரிவு குறித்து...

ஆசிரியர்

வெள்ளத்தில் தத்தளிக்கிறது ஜம்மு-காஷ்மீர். கடந்த மூன்று நாள்களாக பெய்துவரும் அடைமழையில் 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடு வாசலை இழந்து அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். முதியவர்களும் குழந்தைகளும் பெண்களும் கால்நடைகளும் வளர்ப்புப் பிராணிகளும் சந்திக்கும் சொல்லொணாத் துயரத்தை எழுத்தில் வடித்துவிட முடியாது.

பலத்த மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு ஜம்மு, சம்பா, தோடா, ரியாஸி மாவட்டங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, கடந்த ஐந்து நாள்களாக ஏற்பட்டிருக்கும் இழப்பு

ஈடுசெய்ய முடியாதது. ரியாஸி மாவட்டத்தில் வைஷ்ணவ தேவி கோயில் செல்லும் மலைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து அந்தக் கோயிலுக்கான யாத்திரை இடைக்காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

ஜீலம் நதியில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஸ்ரீநகரின் சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இதுவரையில் இல்லாத அளவிலான கோடை

வெப்பத்தை ஜம்மு-காஷ்மீர் இந்த ஆண்டு எதிர்கொண்டது என்றால், இப்போது வரலாறு காணாத அளவிலான அடைமழையில் மூழ்கித் தத்தளிக்கிறது.

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை உலகம் எதிர்கொள்கிறது என்பதன் வெளிப்பாடுதான் ஜம்மு-காஷ்மீரில் காணப்படும் பெருமழை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த ஆண்டு பருவமழைக் காலத்தின்போது இமயமலைப் பகுதியில் 14 நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றிருக்கின்றன. இதுவரையில் இல்லாத அளவிலான பெருமழையால் வடகிழக்கு மாநிலங்கள், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மத்திய தரைக் கடல் பகுதியில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய ஆசியா வழியாக இந்தியாவின் வடக்குப் பகுதிகளுக்கு பருவமழைக் காலத்தில் வந்தடைகிறது. சமீப ஆண்டுகளாக இந்தப் போக்கு கோடைக் காலத்திலும், மழைக் காலத்திலும் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.

தென் மேற்குப் பருவமழைக் காலத்தில் அதன் தாக்கம் ஏற்படும்போது அதிக அளவிலான மழைப்பொழிவு, திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்டவை இமயமலையை ஒட்டிய பகுதிகளில் ஏற்படுகின்றன. இமயமலையும் அதன் அடிவாரத்தில் உள்ள பகுதிகளும் இயற்கை இந்தியாவுக்குத் தந்திருக்கும் கொடைகள். அவற்றுக்கு எந்தவிதப் பாதகமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு உண்டு.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது ஆஸ்திரேலிய கண்டம் இருக்கும் பகுதியிலிருந்து, ஒரு மிகப் பெரிய நிலப்பரப்பு நகரத் தொடங்கி ஆசிய கண்டத்தில் மோதியதால் உருவானதுதான் உலகிலேயே மிக நீளமான மலைத் தொடர் என்று அறியப்படும் இமயமலை. அது ஓர் அரண்போல், வடதுருவப் பகுதியிலிருந்து வரும் குளிர் காற்றைத் தடுத்து நிறுத்தி இந்தியாவைப் பாதுகாக்கிறது. வடதுருவத்தில் இருந்துவரும் பனிக்காற்றை உள்வாங்கு

வதால்தான் இமயமலையில் பனி படர்கிறது. பருவமழைக் காலங்களில் மேகங்களைத் தடுத்து மழைப்பொழிவைத் தருவது இமயம். பனிச் சிகரங்கள் உருகி உருவாகும் ஓடைகள் இணைந்து கங்கையாகவும், சிந்துவாகவும், பிரம்மபுத்திராவாகவும் ஜீவ நதிகளாக இந்தியாவை வளப்படுத்துகின்றன. இமயமலை இல்லையென்றால், இந்தியா தார் பாலைவனம்போல் வறட்சியான பகுதியாக இருந்திருக்கக்கூடும்.

மிகப் பழைமையான மேம்பட்ட நாகரிகம் இந்தியாவில் தோன்றி நிலைபெற்றதற்கும், இந்த அளவிலான மக்கள்தொகையுடன் கூடிய தேசமாக உருவானதற்கும் இமயமலைதான் காரணம்என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. காடுகள், விலங்கினங்கள், ஆறுகள், அருவிகள், புனல் மின்சாரம், இயற்கை எழில் என்று இமயம் அள்ளித் தந்திருக்கும் கொடைகள் ஏராளம் ஏராளம். வரலாறு, சமயம், இதிகாசங்கள், இலக்கியங்கள் என அனைத்துக்கும் ஆதாரம் இதுதான்.

அண்மைக்காலமாக இந்த மலை இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்கிறது. பெருமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் ஜம்மு, ஹிமாசல பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள்ஆகியவை பாதிக்கப்படுவது இமயமலை நமக்கு விடுக்கும் எச்சரிக்கை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. உலகின் மிகவும் இளமையான மலைத் தொடர் எனக் கருதப்படும் இமயமலையின் மீதான தாக்குதல்கள் தடுக்கப்படாவிட்டால் அதன் பின்விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.

இமயமலையின் முக்கியத்துவத்தையும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் நமது முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். அது வீடானாலும் தெய்வங்கள் உறையும் கோயில்கள் ஆனாலும் அவை மண்ணாலும், மரத்தாலும்தான் கட்டப்பட்டன. நாமோ இமயமலைப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டிச் சாய்க்கிறோம்; நதிக் கரைகளின் ஓரமாக கான்கிரீட் கட்டடங்களையும், உல்லாச விடுதிகளையும் எழுப்புகிறோம்; பலவீனமான நிலப்பரப்பில் அடுக்குமாடிக் கட்டடங்களை உயர்த்துகிறோம். அதன் விளைவைத்தான் சந்திக்கிறோம்.

ஜம்மு-காஷ்மீர் அடைமழையும், ஏனைய மேக வெடிப்புபேரழிவுகளும் இமயமலை நமக்குச் சொல்லாமல் சொல்லும் செய்தி- இயற்கையை மதிக்காவிட்டால் அதற்கான விலையைத் தந்தாக வேண்டும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

SCROLL FOR NEXT