உள்நாட்டு விமான சேவையில் ஏற்பட்ட பெரும் குழப்பத்தால் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்தியாவுக்குள் இயக்கப்படும் விமானங்களில் சுமார் 65 சதவீதத்தை தன்வசம் வைத்துள்ள இண்டிகோ விமான நிறுவனத்தின் நிர்வாகக் குளறுபடிகளால் இந்த அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 நாள்களில் மட்டும் 4,000'க்கும் அதிகமான உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திருமணம், இறுதிச்சடங்கு, வேலைவாய்ப்புக்கான நேர்காணல், பணி நிமித்தமான அலுவல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய, அவசரக் காரணங்களுக்காக விமானப் பயணங்களை மேற்கொள்ளவிருந்தவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
விமானங்களை இயக்கும் விமானிகள், துணை விமானிகளுக்கு வாரந்தோறும் கட்டாய ஓய்வளிப்பது உள்ளிட்ட அவர்களது பணி நேரத்தை வரையறை செய்து, இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககம் கடந்த 18 மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட்டு, இந்த விதிகளை விமான நிறுவனங்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதேபோல, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள "ஏர்பஸ் 320' போன்ற பெரிய ரக விமானங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய கணினி மென்பொருளை உள்ளீடு செய்து மேம்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த இரு முக்கிய அம்சங்களையும் செயல்படுத்துவதற்கு போதிய அவகாசம் அளித்தும், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இண்டிகோ நிறுவனம் தவறியதால்தான், உள்நாட்டு விமான சேவையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இத்தகைய பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தான் வகுத்த விதிகளை உறுதியுடன் அமல்படுத்த வேண்டிய விமானப் போக்குவரத்து இயக்ககம், இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய நெருக்கடிக்கு அடிபணிந்து, விமானிகளுக்கான கட்டாய ஓய்வு விதியை அவசரகதியில் தளர்த்தியுள்ளது. இது, பாதுகாப்பான விமானப் பயணத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, பயணிகள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகை தற்போது 146 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், இதற்கு ஏற்றவாறு விமானப் போக்குவரத்து மேம்படவில்லை என்பதுதான் உண்மை நிலவரம். ஒரு காலத்தில் ஆடம்பரம் எனக் கருதப்பட்ட விமானப் பயணம், தற்போதைய நவீன யுகத்தில் விரைவான போக்குவரத்துக்கு அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் பதிவு பெற்ற விமானங்களின் எண்ணிக்கை 839 மட்டுமே. இவற்றில் 680 விமானங்கள் மட்டுமே இயக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன.
அதேநேரத்தில், கடந்த 2019'இல் 14 கோடியாக இருந்த உள்நாட்டுப் பயணிகள் எண்ணிக்கை 2025'இல் 40 கோடியாக அதிகரித்துள்ளது. பயணிகளின் இந்த எண்ணிக்கை உயர்வுக்கு ஏற்ப கூடுதலாக விமானங்கள் இயக்கப்படவில்லை.
இந்தியாவில் இண்டிகோ நிறுவனத்திடம் 417 விமானங்களும், டாடாவின் ஏர் இந்தியா குழுமத்திடம் 187 விமானங்களும் உள்ளன. இதேபோல, இண்டிகோ நிறுவனத்திடம் 5,500 விமானிகளும், ஏர் இந்தியா குழுமத்திடம் 3,500 விமானிகளும் உள்ளனர். இந்தியாவுக்குள் இயக்கப்படும் விமான சேவைகளில் 65.6 சதவீதத்தை வைத்துள்ள இண்டிகோ நிறுவனம், இதற்கு ஏற்றவாறு விமானிகள், துணை விமானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தவறிவிட்டது. இதுதான் தற்போதைய நெருக்கடிக்கு மூல காரணம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கடந்த 2014'ஆம் ஆண்டுக்கு முன்னர் கோ'ஏர், ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா, விஸ்தாரா, இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமான சேவையை அளித்து வந்தன. ஆனால், தற்போது உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ, ஏர் இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே மேலாதிக்கம் செலுத்துகின்றன.
எந்த ஒரு துறையிலும் சமச்சீரான போட்டிக்கு ஊக்கமளித்தால் மட்டுமே நுகர்வோராகிய மக்களுக்கு உரிய பலன் கிடைக்கும். ஒன்று அல்லது இரு நிறுவனங்கள் மட்டுமே மேலாதிக்கம் செலுத்துவதற்கு அனுமதித்தால், அவை அரசின் விதிகளுக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தடுக்க முடியாது என்பதற்கு இண்டிகோ நிறுவனம் முன்னுதாரணமாகி விட்டது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள இண்டிகோ நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு திரும்பத் திரும்பக் கூறுகிறார். ஆனால், உள்நாட்டு விமான சேவை இந்த அளவுக்கு மோசமான பிறகும், இண்டிகோ நிறுவனத்துக்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்கவோ, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தரவோ விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதியான நடவடிக்கையை எடுக்கத் தவறிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
கைப்பேசி சேவை, இணைய வழியிலான பொருள்கள் விற்பனை, வாடகை கார்கள், ஆட்டோக்கள் சேவை, வீடு தேடி வரும் உணவு விநியோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஓரிரண்டு நிறுவனங்கள் மட்டுமே மேலாதிக்கம் செலுத்துகின்றன. இவற்றைக் கண்காணித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ நிறுவனம் செய்த குழப்பத்தைப் போல, இந்த நிறுவனங்களும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும். இதுவிஷயத்தில் ஆட்சியாளர்கள் தீவிர கவனம் செலுத்தி, முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழ முடியும். எந்தத் துறையிலும் ஏகபோகம் என்பது மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.