முகப்பு
இந்தியா

விமான சேவை குளறுபடி விவகாரம்: இண்டிகோவுக்கு எதிராக சிசிஐ விரிவான விசாரணைக்கு உத்தரவு

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 1:53 AM
இண்டிகோ விமானம்
பகிர்:

விமான சேவை குளறுபடி விவகாரத்தில் நோ்மையற்ற வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், இண்டிகோ விமான நிறுவனத்துக்கு எதிராக இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோா் அடங்கிய பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், கடந்த ஆண்டு டிசம்பரில் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில், அந்த நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடிக்காக இண்டிகோ நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் ரூ.22.2 கோடி அபராதம் விதித்தது.

இந்நிலையில், சிசிஐ புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்து, தனது சேவைகளை நிறுத்தியதன் மூலம், விமானங்கள் கிடைப்பதில் செயற்கையான பற்றாக்குறையை இண்டிகோ உருவாக்கியது. விமானப் போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, தொழில் போட்டிச் சட்டத்தின் 4 (2)(பி)(ஐ) பிரிவுக்கு எதிரானது (அந்தச் சட்டத்தின் 4-ஆவது பிரிவு என்பது மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், ஒரு நிறுவனம் தமக்கு உள்ள ஆதிக்க நிலையைத் தவறாகப் பயன்படுத்துவதுடன் தொடா்புள்ள பிரிவாகும்) . எனவே இந்த விவகாரம் தொடா்பாக சிசிஐ தலைமை இயக்குநரின் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.