உலகிலேயே முதன்முறையாக சிறுவர் சிறுமியர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா தடை விதித்து சட்டம் இயற்றியிருக்கிறது. கடந்த புதன்கிழமை (டிச. 10) முதல் அமலுக்கு வந்துள்ள இந்தச் சட்டத்தின்படி, 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர், சிறுமியர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், த்ரெட்ஸ், டிக்டாக், எக்ஸ், யூடியூப், ரெடிட், கிக், டிவிட்ச் ஆகிய 10 சமூக ஊடகத் தளங்களில் கணக்கு உருவாக்கவோ, வைத்திருக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது.
16 வயதுக்கு கீழ் உள்ள பயனாளர்களின் கணக்குகளை செயலிழக்கச் செய்ய வேண்டும்; பெற்றோர் அனுமதித்தாலும் அதைத் தொடர அனுமதிக்கக் கூடாது; செயற்கை நுண்ணறிவு (ஏஐ), முக அடையாளம், பயனாளர் நடத்தை பகுப்பாய்வு போன்றவற்றைப் பயன்படுத்தி வயதை சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை மீறும் நிறுவனங்களுக்கு 4.95 கோடி ஆஸ்திரேலிய டாலர் (சுமார் ரூ.296 கோடி) அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஸ்னாப்சாட் போன்றவை சிறுவர், சிறுமியர்களின் கணக்குகளைச் செயலிழக்கச் செய்வதற்கான அமைப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளன.
'சிறுவர், சிறுமியர் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காகத் தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வரக்கூடிய விடுமுறை நாள்களைப் பயனுள்ளதாக்கிக் கொள்ளுங்கள், கைப்பேசி மூலம் சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பதைக் காட்டிலும், மைதானத்துக்கு நேரில் சென்று ஏதாவது ஒரு புதிய விளையாட்டில் ஈடுபடுங்கள். புதிய கருவியை இசைப்பதைக் கற்றுக் கொள்ளுங்கள், புத்தகத்தைப் படியுங்கள், இவற்றைவிட முக்கியமாக நண்பர்கள், குடும்பத்தினருடன் நேருக்கு நேர் அதிக நேரம் செலவிடுங்கள்' என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி கூறியிருப்பது ஆக்கபூர்வ சிந்தனை.
ஆஸ்திரேலியாவைப் போன்றே மலேசியாவும் வரும் 2026-ஆம் ஆண்டிலிருந்து 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகள் வைத்திருப்பதை தடை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. டென்மார்க், நார்வே மற்றும் அமெரிக்காவின் சில மாகாணங்களும் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வது குறித்துப் பரிசீலித்து வருகின்றன.
சமூக ஊடகங்கள் வரமா சாபமா என்பது பயன்படுத்துவதைப் பொருத்தே அமைகிறது. அமெரிக்காவில் 8 முதல் 12 வயது வரை உள்ளவர்களில் 40 சதவீதத்தினரும், 13 முதல் 17 வயது வரை உள்ளவர்களில் 95 சதவீதத்தினரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. சிறுவர், சிறுமியர்கள் மீது சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கம் அளவிட இயலாதது. இவர்களில் 11 முதல் 15 வயது வரை உள்ள 33 சதவீதம் சிறுவர், சிறுமியர் தாங்கள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகிவிட்டதாகவே ஒப்புக் கொள்கின்றனர்.
மூன்று மணி நேரத்துக்கும்மேல் சமூக வலைதளங்களைப் பார்வையிடும் சிறுவர், சிறுமியர் மனஅழுத்தத்துக்கும் பதற்றத்துக்கும் உள்ளாகின்றனர். 'கைப்பேசியை சிறிது நேரம் கீழே வை' என்று சொல்லும் பெற்றோர்களால் அவர்கள் எரிச்சலடைகின்றனர். ஒன்று பெற்றோர்களை எதிர்த்துப் பேசுகின்றனர் அல்லது அவர்களுக்குத் தெரியாமல் செயல்படுகின்றனர்.
சமூக வலைதளங்களில் காணப்படுபவர்கள் போன்று தங்களது உடல் அமைப்பு இல்லை என்று 46 சதவீத சிறுமியருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மோசமான, ஆபாசமான மொழிப் பயன்பாடு. காட்சிகள், விடியோக்கள் போன்றவை அவர்களது நடத்தையையே மாற்றிவிடுகின்றன.
சமூக வலைதளங்களை மணிக்கணக்கில் பயன்படுத்தும்போது, உண்ணும் உணவில் கவனம் இல்லாததாலும் சரியாகத் தூங்காததாலும், உடற்பயிற்சியில் ஆர்வம் இல்லாததாலும் இளம் வயதிலேயே உடல்ரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். 5 வயதுக்குள் பார்வைக் குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் சில சமூக விரோதிகள் சிறுவர், சிறுமியரை நேரில் வரவழைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல், பணம் பறித்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுகின்றனர். அவர்களைப் பயமுறுத்தி போதைப் பொருள் விற்பனை போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் ஆண்களை நம்பி பாலியல் ரீதியாக ஏமாறும் சிறுமியர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சிறுவர், சிறுமியருக்குப் பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், எந்த அளவுக்கு இது சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 'இது அவசரகதியான சட்டம், குழந்தைகளை இது பாதுகாக்காது' என்று யூடியூப் விமர்சனம் செய்துள்ளது.
தடைப் பட்டியலில் இல்லாத சமூக வலைதளங்களுக்கு சிறுவர்கள் மாறவும் போலி முகவரி கொடுத்து பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் வேறு பெயரில் செயல்படக் கூடும். அதை எப்படித் தடுப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித் தடுக்க முடியுமா என்பது குறித்து யோசிக்கலாம்.
சமூக ஊடகங்களுக்குப் பதிலாக நண்பர்களுடன் அளவளாவுவது, விளையாட்டு, இசை, படிப்பு, ஆன்மிகம் என ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கு தங்கள் குழந்தைகளை ஊக்குவிப்பது பெற்றோரின் கடமை. அதற்கு முன்னால், அவர்கள் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.