நாடாளுமன்றத்தின் 19 நாள் குளிர்காலத் தொடர் முடிந்திருக்கிறது. 19 நாள்களில் 15 அமர்வுகளுடன் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையில் நீண்டு நின்ற கூட்டத் தொடரில் பத்து மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் 8 மசோதாக்கள் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
மக்களவை 111%, மாநிலங்களவை 121% செயல்பட்டிருப்பதாக வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரம் ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், எந்த அளவுக்கு மசோதாக்கள் விவாதிக்கப்பட்டன என்கிற கேள்வி எழுப்பப்படும்போது சற்று ஆதங்கம் எழாமல் இல்லை. வேலை நேரத்தைவிட அதிகமாக அமர்ந்து உறுப்பினர்கள் விவாதித்தனர் என்றாலும், அவை மசோதாக்கள் தொடர்பான விவாதங்கள் அல்ல என்பதைக் குறிப்பிடத் தோன்றுகிறது.
மசோதாக்கள் தொடர்பான விவாதங்கள் என்று எடுத்துக் கொண்டால், முந்தைய குளிர்காலத் தொடர்கள் போலவே மக்களவை 36%, மாநிலங்களவை 30% நேரம் மட்டுமே விவாதித்தன. 40% நேரத்துக்கும் அதிகமாக மசோதாக்கள் தொடர்பில்லாத விவாதங்கள் நடைபெற்றன. அந்த விவாதங்கள் அவசியமானவை என்றாலும்கூட, மசோதாக்கள் விவாதமில்லாமல் நிறைவேற்றப்படுவது சரியான நாடாளுமன்ற நடைமுறையாகாது.
தொடக்கத்தில் சில நாள்கள் கூச்சல்-குழப்பம், அவை முடக்கம் என்று இருந்தாலும், அரசுத் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருவித சமரசம் ஏற்பட்டு, விவாதம் நடைபெறுவது என்பது உறுதிப்பட்டது. சமூக ஊடகப் பொய்ப் பிரசாரங்கள், வெளிப்படையான தரவுக் கொள்கையை வகுக்கும் டிஜிட்டல் (எண்ம) ஈக்கோ சிஸ்டம், பான் மசாலா மீதான கூடுதல் வரி உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
இரண்டாவது வாரத்தில் முக்கியமான (அவசியமான அல்ல) இரண்டு பிரச்னைகள் விரிவான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று வாக்காளர் வரைவு பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதத்துக்கு ஆளுங்கட்சி சம்மதித்தது. அதற்கு முன்னால், தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' குறித்த விவாதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆளும் கட்சியின் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டன.
'வந்தே மாதரம்' விவாதத்தின் மூலம், இந்திய விடுதலைக்கு முன்னால் தேசிய கீதமாக ஏற்றுக்கொண்ட பாடலை முஸ்லிம் சிறுபான்மையினரின் மதவாத வற்புறுத்தலுக்கு அடிபணிந்து காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது என்றும், அதன் வரிகள் மாற்றப்பட்டன என்றும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்ததில் ஆளும் கூட்டணி வெற்றிபெற்றது என்றுதான் கூற வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதத்தில், தங்களது 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைக்க முடிந்ததே தவிர, அதை ஆணித்தரமான தரவுகளுடன் நிரூபிக்க முடியவில்லை. தேர்தல் சீர்திருத்தம் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உரையில் அதை விட்டுவிட்டு வேறு பல பிரச்னைகள் குறித்துப் பேசியது. அவருக்கு உறுதியான நிலைப்பாடு இல்லாததை வெளிப்படுத்தியது.
நாடாளுமன்றம் கூடிய இரண்டாவது வாரத்தில் பல முக்கியமான மசோதாக்களை அமைச்சரவை நிறைவேற்றி, மூன்றாவது வாரத்தில் தாக்கலும் செய்தது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மாற்றி அமைக்கும் மசோதா, அணுசக்திச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தும் 'சாந்தி 2025' மசோதா, உயர் கல்வியில் கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தும் மசோதா, காப்பீட்டில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் மசோதா உள்ளிட்டவை அதிகம் விவாதம் நடத்தப்படாமலேயே நிறைவேற்றப்பட்டது என்பது எதிர்க்கட்சிகளின் சாதுர்யமின்மையின் வெளிப்பாடு அல்லாமல் வேறென்ன!
அணுசக்தி உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது மட்டுமல்லாமல், விபத்து ஏற்படும்போது அதற்கான இழப்பீட்டில் தளர்வு வழங்குவது வரை அந்த மசோதாவில் உள்ளடக்கம்.
ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை அகற்றியதன் மூலம், எதிர்க்கட்சிகளின் கவனத்தை முழுவதுமாக அந்தப் பிரச்னைக்கு மடை மாற்றம் செய்து, அணுசக்தித் திருத்த மசோதாவை நிறைவேற்றிக் கொண்டது ஆளுங்கட்சியின் சாமர்த்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
வந்தே மாதரம் விவாதம் மக்களவையில் 11 மணி நேரமும், மாநிலங்கள் அவையில் 13 மணி நேரமும் நடந்தது. கீழவையில் 65 உறுப்பினர்களும் மேலவையில் 81 உறுப்பினர்களும் கலந்து கொண்டு பேசினார்கள். இதற்குப் பதிலாக, நாடாளுமன்றம் ஒரு மனதாக 'வந்தே மாதரம்' தேசியப் பாடலின் 150-ஆவது ஆண்டை பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றி முடித்துக் கொண்டிருக்கலாம். எதிர்க்கட்சிகள் வாய்ப்பைத் தவறவிட்டன.
அதேபோலத்தான், தேர்தல் சீர்திருத்த விவாதத்தில் மக்களவையில் 62 உறுப்பினர்கள் 13 மணி நேரமும், மாநிலங்கள் அவையில் 57 உறுப்பினர்கள் 11 மணி நேரமும் கருத்துப் பதிவு செய்தனர். கட்சி மனமாச்சரியங்களை மறந்து இந்தியத் தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்த ஆக்கபூர்வமான விவாதம் நடக்கவில்லை. இதற்குப் பதிலாக அணுசக்தி, ஊரக வேலை வாய்ப்பு, உயர் கல்வி உள்ளிட்டவற்றில் விவாதம் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கேள்வி நேரமும், அவசரப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் பூஜ்ய நேரமும் நடந்தன என்பது ஆறுதல்.
புதிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட மசோதா குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடியும் சரி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சரி வெளிநாட்டில் இருந்தனர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.