சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப் படை போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, ஒரு மாநிலம், தனது குடிமகனைக் கொலை செய்திருக்கிறது என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஏ.டி.மரிய கிளாட் ஆகியோர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்னர் காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவங்கள் பலவற்றை சுட்டிக்காட்ட முடியும். எனினும், நகைத் திருட்டு தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் போலீஸாரால் இந்த அளவுக்கு கொடூரமாகத் தாக்கப்பட்டது முன்னெப்போதும் நிகழ்ந்ததில்லை.
சிறப்பு வாய்ந்த மடப்புரம் கோயிலுக்கு மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை நிகிதா காரில் தனது தாயுடன் ஜூன் 27-ஆம் தேதி வழிபடச் சென்றார். அவரது காரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, அதை ஓரமாக நிறுத்துமாறு கோயில் பணியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, கோயில் காவலாளியான அஜித்குமாரிடம் கார் சாவியைக் கொடுத்து, அதை ஓரமாக நிறுத்துமாறு நிகிதா கேட்டுக் கொண்டார். ஆனால், அஜித்குமாருக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதால், தனது நண்பர் ஒருவர் மூலம் அதை ஓரமாக நிறுத்தச் செய்து, சாவியை அந்தப் பெண் பக்தையிடம் மீண்டும் கொடுத்துவிட்டார். கோயிலில் வழிபட்ட பிறகு காருக்குத் திரும்பிவந்து பார்த்த போது, அதில் வைத்திருந்த தங்க நகைகளைக் காணவில்லை என்று திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அந்தப் பெண்மணி.
ஜூன் 28-ஆம் தேதி மானாமதுரையிலிருந்து மடப்புரத்துக்கு வந்த தனிப் படை போலீஸார் அஜித்குமாரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, மடப்புரம் கோயில் செயல் அலுவலர் அலுவலகம் பின்புறமுள்ள இடத்தில் அஜித்குமாரை போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். திருட்டுச் சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் ஜூன் 28-ஆம் தேதி இரவு எப்ஐஆர் பதிவு செய்தனர். அதில், விசாரணையின்போது அஜித்குமார் வலிப்பு வந்து உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாமல், காவல் நிலையத்துக்கும் அழைத்துச் செல்லாமல் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று அஜித்குமாரைக் கடுமையாகத் தாக்கி உள்ளனர். அஜித் குமாரின் உடற்கூறு அறிக்கையில், அவரது உடலின் வெளிப்புறத்தில் 44 இடங்களில் காயம் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சிகரெட்டால் சுட்டதற்கான அடையாளங்களும் இருந்துள்ளன. உடலின் எந்த உறுப்பையும் விட்டுவைக்காமல் தாக்கி உள்ளனர்.
போலீஸார் தாக்குதல் நடத்திய போது, அஜித்குமாரின் நண்பர் ஒருவர் மறைந்திருந்து அதை தனது கைப்பேசியில் விடியோவாக பதிவு செய்தார். அந்த விடியோ சமூகவலைதளங்களில் வெளியான பிறகே, இந்தத் தாக்குதல் சம்பவம் வெளியே தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து, கொலை வழக்கு என எப்ஐஆரில் மாற்றம் செய்து, 6 போலீஸார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புகார் அளித்த பேராசிரியை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நிர்பந்தம் அளித்ததால்தான் அஜித்குமாரை தனிப் படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. காரிலிருந்த நகை திருடு போனதாகப் பேராசிரியை புகார் அளித்ததும் உடனடியாக எப்ஐஆர் ஏன் பதிவு செய்யப்படவில்லை என்பது முதல் கேள்வி.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட நீதிபதி கடந்த சில நாள்களாக மடப்புரம், திருப்புவனம் பகுதிகளில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
மாவட்ட நீதிபதி பலரிடம் விசாரணை நடத்தியுள்ளபோதிலும், அஜித்குமார் மீது புகார் அளித்த பேராசிரியைக்கு அழைப்பாணை அனுப்பி ஏன் விசாரிக்கவில்லை என்பது இரண்டாவது கேள்வி.
அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு, மோசடி செய்ததாக பேராசிரியை நிகிதா மீது காவல் நிலையங்களில் 2011-ஆம் ஆண்டே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? அவர் பணியாற்றும் திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ஒன்றரை ஆண்டுக்கு முன்பே பேராசிரியை நிகிதா மீது அளித்த புகார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையே ஏன்?
போலீஸாரால் தேடப்பட்டு வரும் இந்தப் பேராசிரியை கோவை மாவட்டத்தில் உள்ள தேநீர்க் கடையில் இருந்த போது அதுகுறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தும் அவரைப் பிடித்து விசாரிக்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை. மானாமதுரை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். வழக்கு இப்போது சி.பி.ஐ. க்கு மாற்றப்பட்டிருக்கிறது.
எல்லாம் சரி... எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடைதான் என்ன ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.