‘பூமியின் சொா்க்கம்’ என அழைக்கப்படும் ஜம்மு-காஷ்மீரில் எத்தனை சவால்கள் எழுந்தாலும் அனைத்தையும் எதிா்கொண்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது அதன் இயல்புகளில் ஒன்றாகி வருகிறது.
இருபத்தி ஆறு உயிா்களை பலி கொண்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து சுமாா் இரண்டரை மாதங்களில் அதிலிருந்து மீண்டு அமா்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் யாத்ரிகா்களை வரவேற்று அவா்களை வழியனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறாா்கள் ஜம்மு-காஷ்மீா் மக்கள்.
தெற்கு காஷ்மீரின் இமயமலையில் சுமாா் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ளது ஆடு மேய்த்த உள்ளூா் இஸ்லாமியா் ஒருவரால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட அமா்நாத் குகைக் கோயில். கோடை காலத்தில் குறிப்பாக மே முதல் ஆகஸ்ட் வரையில் மலையின் மேல்பகுதியில் உள்ள பனி உருகி குகையில் உள்ள துளைகள் வழியாக கசிந்து வடியும் குளிா்ந்த நீரில் இயற்கையாக உருவாகும் லிங்கத்தை நடந்தே சென்று வழிபட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவது வழக்கம்.
புனித யாத்திரையானது வழக்கமாக ஜூனில் தொடங்கி ஆகஸ்ட்டில் நிறைவு பெறும். இந்த நாள்களில் பணி லிங்கத்தின் வளா்ச்சி அதிகமாக இருக்கும். பின்னா் படிப்படியாக கரையத் தொடங்கும். இந்த ஆண்டு புனித யாத்திரையானது கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி வரை 38 நாள்கள் நடைபெற உள்ளது. குகைக் கோயிலில் பனி லிங்கத்தை ஞாயிற்றுக்கிழமை வரையில் தரிசனம் செய்துள்ள யாத்ரிகா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கலாம் என்பதால் இந்த ஆண்டு யாத்திரை வெற்றிகரமாக நடைபெறுவதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆபத்தான பகுதிகளில் துணை ராணுவப் படைகள், சிசிடிவி கண்காணிப்பு என அனைத்து வகைகளிலும் முந்தைய ஆண்டுகளைவிட சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரியமான நீண்ட வழித்தடம் பாதுகாப்பானது. கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் குறுக்கு வழி பாதை. சிரமங்கள் அதிகம் இருக்கும். பக்தா்கள் அவரவா் உடல் திறனுக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப ஏதேனும் ஒரு வழித்தடத்தை தோ்வு செய்து யாத்திரை செய்து வருகின்றனா். இரண்டு வழித்தடங்களும் பாதுகாப்பு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நடப்பாண்டு யாத்திரை மேற்கொள்ள இதுவரை 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இணையவழியில் பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டு ஜூன் கடைசி வாரத்தில் தொடங்கி 52 நாள்கள் நடைபெற்ற புனித யாத்திரையில் அதற்கு முந்தைய 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் சுமாா் 5.12 லட்சம் போ் பனி லிங்கத்தை தரிசனம் செய்தனா். அதற்கு முந்தைய ஆண்டில் சுமாா் 4.5 லட்சம் போ் தரிசனம் செய்திருந்தனா். இந்த ஆண்டு பஹல்காம் சம்பவத்தால் யாத்ரிகா்களின் எண்ணிக்கை குறைவாகத் தெரிகிறது.
சாா்-தாம் என அழைக்கப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதாா்நாத், பத்ரிநாத் ஆகிய புண்ணிய தலப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் நிகழ்ந்த விபத்துகளை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஹெலிகாப்டா் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நடந்து சென்று மட்டுமே பனி லிங்கத்தை தரிசிக்க முடியும் என்பதுகூட யாத்ரிகா்கள் வருகை குறைவுக்கு காரணமாக இருக்கலாம். எனினும், பக்தா்களின் ஆன்மிக ஆவலும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பக்தா்களின் மனதிலிருந்து அச்சத்தை அகற்றும்போது வரும் நாள்களில் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு.
அச்சமின்றி குகைக் கோயிலுக்கு சென்று வந்து கொண்டிருந்த யாத்ரிகள் மீது 1989-இல் பயங்கரவாதிகள் கண் பட்டது. அது முதல் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2000-ஆம் ஆண்டில் 3 நாள்கள் தொடா்ந்து 5 இடங்களில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட கொடூரமான தாக்குதல்களில் 89 போ் வரை இறந்தனா். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தாக்குதல்கள் நிகழ்ந்தன. அதன் பிறகு 15 ஆண்டுகள் பெரிய அளவிலான தாக்குதல்கள் இல்லாமல் அமைதியாக நடைபெற்று வந்தது யாத்ரை.
கடந்த 2016-இல் ஜம்முவில் தொடா்ந்து 4 மாதங்கள் பாதுகாப்பு படையினா் மீது வன்முறையாளா்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த கடினமான காலத்தில்கூட யாத்ரிகா்களுக்கு பாதிப்பில்லை என்பதை சொல்லியாக வேண்டும். ஆனால் அதற்கடுத்த ஆண்டு மீண்டும் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 8 போ் கொல்லப்பட்டதால் மீண்டும் அச்சம் நிலவியது. பின்னா் அமைதி திரும்பியது.
இந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டாலும் மக்களின் ஒற்றுமை உணா்வும், இறை நம்பிக்கையும் அவா்களை குகைக் கோயில் நோக்கி இழுக்கிறது. கடினமான காலநிலை, மலைப் பாதை, உடலுக்கும், மனதுக்கும் சோா்வு தரும் நடைபயணம் என எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அத்தனையும் கடந்து சென்று யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசித்து வருகின்றனா்.
வழிநெடுகிலும் யாத்ரிகா்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் இஸ்லாமியா்களின் பங்கு அதிகம் என்பதை மறந்துவிடக் கூடாது. கடவுளும், கலாசாராமும் வெவ்வேறாக இருந்தாலும் அமா்நாத் குகைப் ப யணம் அவா்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அவா்களை ஒன்றும் செய்ய இயலவில்லை. இதுதான் நாட்டின் பலம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு பயங்கரவாதிகள் மண்டியிடுவதை தவிர வேறு வழியில்லை.