கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து  
தலையங்கம்

அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்து!

கடலூர் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்

கடலூர் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர்-ஆலப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள செம்மங்குப்பம் கடவுப்பாதையை பள்ளி வேன் ஜூலை 8-ஆம் தேதி காலை 7.16 மணிக்கு கடந்த போது, அந்த வழியாக வந்த விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேன் ஓட்டுநரும், அதிலிருந்த மற்றொரு மாணவரும் பலத்த காயமடைந்தனர். மீட்புப் பணியில் ஈடுபட முயன்ற அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்தார்.

ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ரயில்வே தடுப்புக் கதவை அதன் காப்பாளர் மூடிவிட்டதாகவும், வேன் ஓட்டுநர் நிர்பந்தம் செய்து அதை மீண்டும் திறக்கச் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடவுப்பாதை தடுப்புக் கதவு திறந்திருந்ததால்தான் அதைக் கடந்து சென்றதாக பள்ளி வேன் ஓட்டுநரும், விபத்தில் காயமடைந்த மாணவரும் கூறியுள்ளனர். இவர்களின் கூற்று சரிதான் என்பதை விபத்தை நேரில் பார்த்த பொதுமக்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கடவுப்பாதை அமைந்துள்ள பகுதியில் ரயில் தண்டவாளங்களின் இருபுறங்களிலும் புதர்கள் மண்டிக் கிடந்ததாகவும், இதனால் ரயில் வருவதை தொலைவிலிருந்து பார்க்க இயலாது என்றும், விபத்துக்குக் காரணமான ரயில் ஒலி எழுப்பாமல் வந்ததாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், செம்மங்குப்பம் கடவுப்பாதை காப்பாளர் விபத்து நிகழ்ந்த போது அந்த இடத்தில் இல்லை என்றும், விபத்து நிகழ்ந்த பிறகு பொதுமக்கள்தான் அவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர் என்றும் கூறப்படுகிறது. கவனக்குறைவாக செயல்பட்டதாக காப்பாளர் பங்கஜ் சர்மா உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதோடு, அவர் கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

ரயில் கடவுப்பாதை தடுப்புக் கதவுகளை அந்தப் பகுதியில் உள்ள ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து மூடி, திறக்கும் நவீன கட்டமைப்பு வசதி (இன்டர்லாக்கிங் சிஸ்டம்) பெரும்பாலான இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன கட்டமைப்பு மூலம் கடவுப்பாதை தடுப்புக் கதவு மூடப்பட்டுவிட்டால், ரயில் அந்தப் பகுதியை கடந்து சென்ற பிறகே மீண்டும் திறக்க முடியும்.

ஆனால், செம்மங்குப்பம் கடவுப் பாதை தடுப்புக் கம்பி கதவை மூடி, திறப்பதற்கு இந்த நவீன வசதி இல்லை. இதனால், இந்தக் கடவுப்பாதை காப்பாளர்தான் கைகளால் தடுப்புக் கதவை மூடி திறக்க வேண்டும். மேலும், அந்தப் பகுதி ரயில் நிலைய பொறுப்பு அலுவலர் (ஸ்டேஷன் மாஸ்டர்) ரயில்வே தொலைபேசி மூலம் கடவுப்பாதை காப்பாளரைத் தொடர்பு கொண்டு, இரட்டை இலக்க ரகசிய எண்ணைக் குறிப்பிட்டு, தடுப்புக் கதவை மூடுவதற்கு அறிவுறுத்த வேண்டும். இதேபோல, தடுப்புக் கதவை மூடிய பிறகு, காப்பாளரும் பதிலுக்கு இரட்டை இலக்க எண்ணைக் குறிப்பிட்டு, ரயில் நிலைய அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த நடைமுறையின் போது தெரிவிக்கப்படும் ரகசிய எண்களை ரயில்வே குறிப்பேட்டில் இருவரும் பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறை முடிந்த பிறகே, கடவுப்பாதையை ரயில் கடந்து செல்வதற்கு ரயில் நிலைய அலுவலர் சமிக்ஞை (சிக்னல்) கொடுக்க வேண்டும். செம்மங்குப்பம் கடவுப்பாதையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்திய பிறகே உண்மையான தகவல்கள் வெளிவரும்.

முழுமையான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே, தெற்கு ரயில்வே சார்பில் அவசரகதியில் குழப்பமான அறிக்கைகள் வெளியிடப்பட்டன. விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்ட தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர், செம்மங்குப்பம் கடவுப்பாதை தடுப்புக் கதவு மூடப்பட்டிருந்ததாகவும், பள்ளி வேன் ஓட்டுநரின் நிர்பந்தத்தால்தான் தடுப்புக் கதவை திறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மூடப்பட்ட கதவை நிர்பந்தம் காரணமாக திறந்துவிடுவதும் மிகப்பெரிய தவறுதான் என்பதை அவர் ஏன் உணரவில்லை?

இதேபோல, செம்மங்குப்பம் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டு ஓராண்டாகியும் அதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கவில்லை என்றும் ரயில்வே அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து தமிழக முதல்வர் அல்லது தலைமைச் செயலர் கவனத்துக்கு கொண்டு சென்று, சுரங்கப்பாதை அமைப்பதற்கு ரயில்வே தரப்பில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது.

பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மேம்படுத்துவதிலும், அதிக வசதிகளுடன் கூடிய வந்தேபாரத் ரயில்களை அறிமுகப்படுத்துவதிலும் ரயில்வே அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. இதேபோல, சாமானிய மக்கள் பயன்படுத்தும் சாதாரண ரயில்களின் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் ரயில்வே உரிய கவனம் செலுத்த வேண்டும்.

ரயில்வே கடவுப்பாதை தடுப்புக் கதவுகளை ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து மூடி, திறக்கும் கட்டமைப்பு வசதி இன்னும் பல இடங்களில் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, அனைத்து ரயில்களிலும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான அதி நவீன 'கவச்' கருவிகளைப் பொருத்துவதற்கும், கடவுப்பாதை தடுப்புக் கதவுகளை தானியங்கி முறையில் மூடி, திறப்பதற்கான 'இன்டர்லாக்' வசதியை ஏற்படுத்துவதற்கும் ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயில் தடங்களை அதிகரிப்பதும், பயணிகளின் வசதிகளை அதிகரிப்பதும் தேவைதான். அதைவிட முக்கியம் பயணிகளின் பாதுகாப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்க நாணம்... சுதா!

மணிப்பூரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு

வாழ்நாள் கொண்டாட்டம்... பரமேஸ்வரி!

நடிகரின் பாதுகாவலருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம்! ரூ.100 கோடி சொத்து?

உடல் எடையைக் குறைத்த நிவேதா தாமஸ்!

SCROLL FOR NEXT