ANI
நடுப்பக்கக் கட்டுரைகள்

பாதுகாப்பும் பயணமும்...

ரயிலில் பயணிப்போரின் பயணம் இனிதாக அமைவதற்கு உத்தரவாதம் அளிப்பது ரயில்வே துறையின் தலையாய கடமையாகும்.

இரா. சாந்தகுமார்

உலகில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது பெரிய ரயில்வே துறையாக இந்திய ரயில்வே திகழ்கிறது. சுமார் 1,35,200 கி.மீ. நீள தண்டவாளத் தடங்களைக் கொண்டது. நாடு முழுவதுமுள்ள 19 மண்டலங்களில் சுமார் 13,000 பயணிகள் ரயில்களும், 11,700}க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. சுமார் லட்சக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு சுமார் 500 கோடி பேர் பயணிக்கின்றனர்.

இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மும்பையில் இருந்து தாணேவுக்கு 1853- ஆம் ஆண்டு இயக்கப்பட்டது. அது 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. இன்றைக்கு நம் நாட்டிலேயே தயாரித்து இயக்கப்படும் "வந்தே பாரத்' ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்கின்றன. "அம்ரித் பாரத்' நிலைய திட்டத்தின் மூலம் நாட்டின் 1,300 ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு நவீன வசதிகள் அளிக்கப்படுகின்றன.

இவ்வாறு நம் நாட்டின் ரயில்வே துறை அதிவேகமாக நவீனமயமாகி வருகிறது. எனினும், உலக அளவில் ஒருசில நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது ரயில்வே துறை மேலும் முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளது. அதேநேரத்தில் ரயில் விபத்துகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. 2004}14 காலகட்டங்களில், ஆண்டுக்கு சராசரியாக 171 ரயில் விபத்துகள் நிகழ்ந்தன; எனினும், அண்மைக் காலங்களில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளன.

ரயில்களின் பயண நேரத்தைக் குறைப்பது, பயணிகளுக்கு அளிக்கப்படும் சேவைகளை மேம்படுத்துவது போன்றவற்றோடு ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதும் அவசியமானது. அண்மையில், திருத்தணி ரயில் நிலையத்தில் வட மாநிலத் தொழிலாளி ஒருவர் நான்கு நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது. சம்பவத்தின்போது, அதைத் தடுக்க அங்கு ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை.

சென்னை ரயில்வே கோட்டத்தில் 7,000 பாதுகாப்புப் பணியாளர்கள் தேவைப்படும் நிலையில் தற்போது 22 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில் பயணிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வப்போது "வந்தே பாரத்' ரயில்கள் மீது சமூக விரோதிகளால் நடத்தப்படும் கல்வீச்சு சம்பவங்கள் கவலை அளிக்கக் கூடியவை. இதனால், ரயிலில் பயணிப்பவர்கள் காயமடைவதோடு, ரயில்வே சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுகின்றன. இந்தச் செயலில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் சாதாரண பயணச்சீட்டுடன் பயணிகள் பயணிப்பது, போதைப் பொருள்களை உட்கொண்டு பயணிப்பது, பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களை எடுத்துச் செல்வது உள்ளிட்டவற்றைத் தடை செய்து பயணிகள் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்.

2024-25 நிதியாண்டில் நம் நாட்டில் சுமார் 3. 61 கோடி பேர் உரிய பயணச்சீட்டு இல்லாமல் ரயில்களில் பயணித்துள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் ரூ.2,000 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. உரிய பயணச்சீட்டின்றி பயணிப்பவர்கள் ரயில்வே துறைக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு அசெüகரியத்தையும் ஏற்படுத்துகின்றனர். எனவே, பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களைக் கண்காணிக்க கூடுதல் பணியாளர்களின் நியமிக்க ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 215 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணிப்போரின் பயணக் கட்டணத்தில் கி.மீட்டருக்கு ஒரு காசு முதல் 2 காசு வரை உயர்த்தப்பட்டது. ரயில்வே பயணிகளின் நன்மைக்காகப் பல்வேறு நவீன கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் நிலையில் வருவாயையும் பெருக்க வேண்டி உள்ளது. எனவே, மக்களை அதிக அளவில் பாதிக்காத இது போன்ற சிறிய அளவிலான கட்டண உயர்வு தவிர்க்க இயலாததே.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்கள், புதிய வழித்தடங்கள், போக்குவரத்து வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ.2, 93, 030 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 7 புதிய புல்லட் ரயில் திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு 2 புல்லட் ரயில் திட்டங்கள் என்பது வரவேற்கத்தக்கது.

எனினும், கரோனா பெருந்தொற்றின்போது, ரத்து செய்யப்பட்ட முதியோருக்கான ரயில் பயண கட்டணச் சலுகை, கடந்த சில ஆண்டுகளாகவே மீண்டும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிலும் அறிவிக்கப்படாதது, மூத்த குடிமக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமே.

மேலும், மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பயணிகளுக்கான, குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துதல், ரயில்வே பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நம் நாட்டில் லாபத்துடன் இயங்கும் ஒரு சில பொதுத் துறை நிறுவனங்களில் ரயில்வே துறையும் ஒன்றாகும். இதற்குக் காரணம், தங்களின் அன்றாடப் பயணங்களுக்கு கோடிக்கணக்கானேரின் முதல் தேர்வு ரயில்களில் பயணிப்பதாகவே உள்ளது. எனவே, ரயிலில் பயணிப்போரின் பயணம் இனிதாக அமைவதற்கு உத்தரவாதம் அளிப்பது ரயில்வே துறையின் தலையாய கடமையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT