மது ஒழிப்பே மாநில வளர்ச்சி
மது மற்றும் போதைப் பழக்கத்தால் புதிய நோய்களையும் சமுதாயப் பிரச்னைகளையும் மனித உயிர்களுக்கான ஆபத்துகளையும் நாம் எதிர்கொண்டு வருகிறோம்.
மது மற்றும் போதைப் பழக்கத்தால் புதிய நோய்களையும் சமுதாயப் பிரச்னைகளையும் மனித உயிர்களுக்கான ஆபத்துகளையும் நாம் எதிர்கொண்டு வருகிறோம். குடும்பங்களும் சிதைகின்றன. குழந்தைகளின் எதிர்காலமும் சூனியமாகிறது. மதுவுக்கு அடிமையான சில தலைமுறைகள் உருவாக்கி விட்டன. சமுதாயத்தின் நல விரும்பிகள் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் மதுவிலக்கு தமிழ்நாட்டில் இன்னும் கைகூடவில்லை.
இந்தியாவைப் பொருத்தவரை குஜராத், நாகாலாந்து , மிசோரம், பிகார் ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான லட்சத் தீவிலும் மதுவிலக்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 47-ஆவது பிரிவு மதுபானங்களைத் தடைசெய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது. மருத்துவ தேவைகளை தவிர மதுபானங்கள் உட்கொள்வதைத் தடை செய்வது தொடர்பான சட்டங்களை இயற்றும் முழு அதிகாரத்தையும் மாநில அரசுகள் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை மக்கள் பிரதிநிதிகளால் பெரிதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு அவர்களது கவனக் குவிப்பில் இருக்கிற மதுவிலக்கு, தேர்தலுக்குப் பிறகு அனைவருக்கும் கவனச்சிதறலாக மாறிவிடுகிறது. இந்த கசப்பான உண்மையிலிருந்து நமது மக்கள் பிரதிநிதிகள் மிக எளிதாக வெளியேறி விடும் சூழல் நமக்குப் புதிதான ஒன்று அல்ல.
Advertisement
Advertisement
தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே உள்ள 717 மதுக்கடைகளை மூடியுள்ள நடவடிக்கை ஒரு நல்ல முயற்சி. தமிழ்நாட்டில் எண்ணற்ற ஏழை, எளிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்த அரக்கனாகிய லாட்டரியை கடந்த 2003-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா துணிச்சலாகத் தடைசெய்து நம்பிக்கை ஒளியேற்றினார். அதுபோல பொது சுகாதாரத்தைப் பொது அமைதியை மேம்படுத்துவதற்காக மது விற்பனையை அரசு முழுமையாகத் தடை செய்யலாம்.
ஆனாலும், மது விற்பனையைத் தடை செய்வதில் மாநில அரசுகள் தயக்கம் காட்டுகின்றன. அதற்கான காரணங்களில் முதன்மையாக விளங்குவது மாநில அரசின் வருவாயில் குறிப்பாக தமிழ்நாட்டில் சுமார் 6-இல் ஒரு பங்கு வருமானம் மது விற்பனையின் மூலம் வருகிறது. இரண்டாவது காரணம் சட்ட விரோத மது விற்பனை அதிகரிப்பதுடன் அதனால் விளையும் தீங்குகளும் பெருகும் என மாநில அரசு நம்புகிறது. வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிகழ்கின்றன என்பதற்காக வாகனம் ஓட்டுவதை யாரும் விட்டு விடுவதில்லை.
தமிழ்நாடு அரசின் வருவாயில் சுமார் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான வருவாய் வணிக வரித் துறை மூலம் வருகிறது. இதற்கு அடுத்த நிலையில் முத்திரைத்தாள் விற்பனை மற்றும் பத்திரப்பதிவு மூலமாக அரசுக்கு வருவாய் ஈட்டப்படுகிறது. மூன்றாவதாக மது விற்பனையின்மூலம் உள்ள வருவாய் அமைந்துள்ளது.
தற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசின் வரி வருவாய் ஆண்டுக்கு சுமார் ரூ. 3.5 லட்சம் கோடி ஆகும். வருவாய் செலவினம் சுமார் ரூ. 4 லட்சம் கோடியாகவும், வருவாய் பற்றாக்குறை சுமார் ரூ. 50 ஆயிரம் கோடியாகவும் உள்ளது. செலவினங்களைப் பொருத்தவரை கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, சுகாதாரம் ,
நெடுஞ்சாலை மற்றும் ஆற்றல் உற்பத்தி ஆகிய துறைகளுக்கான ஒதுக்கீடு ஒட்டுமொத்த செலவில் 50% சதவீதமாக அதாவது சரி பாதியாக உள்ளது.
மகளிர் உரிமைத் தொகைக்கான ஒதுக்கீடு ஆண்டுக்கு சுமார் ரூ. 15,000 கோடியாக உள்ளது. ஒருவேளை தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு கூறியுள்ளபடி, மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ. 2,500 என உயர்த்தினால் ஆண்டுக்கு இன்னும் கூடுதலாக ரூ. 20 ஆயிரம் கோடி செலவினம் அதிகரிக்கும். மேலும் ஆண்டுக்கு ஆறு எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கினால் தோராயமாக ரூ. 8,000 கோடி முதல் ரூ. 10,000 கோடி வரை நிதித் தேவை அதிகரிக்கலாம். இவை தவிர்த்து முன்னரே அறிவித்துள்ள மின் கட்டணச் சலுகைகள் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற வகைகளில் நிதித் தேவை ஈடுகட்ட முடியாத அளவுக்கு அதிகரிக்கக்கூடும். இத்தகைய காரணங்களால் பூரண மதுவிலக்கு என்பது தெளிவற்ற இலவச வாக்குறுதிகளால் சாத்தியப்படாமல் போய்க்கொண்டே இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.
மேற்கண்ட வாக்குறுதிகளை தவிர்த்து விட்டு தமிழ்நாடு அரசு மூன்று முக்கிய வருவாய் உள்ள துறைகளில் மட்டுமே கவனம் செலுத்தினால்கூட வருவாயைப் பெருக்கி இந்தச் சமுதாயத்தின் சாபக்கேடாக விளங்குகிற மதுவின் மூலம் வருகிற வருவாயை முற்றிலும் நிராகரித்துவிட்டு பூரண மதுவிலக்குச் சட்டத்தை இயற்றி லட்சிய சமுதாயத்துக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கத்தை முன்னெடுத்துச் செல்லலாம். கட்டுப்பாடற்ற போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் நுகர்வு போன்றவை பொது அமைதிக்கும் மக்களின் நலவாழ்வுக்கும் சட்டம் ஒழுங்கு மேலாண்மைக்கும் கடுமையான சவாலாக மாறிவிட்டது என்பதை அரசு நிர்வாகம் உணர்வதில் இனியும் தாமதம் கூடாது. அரசின் வருமானப் பற்றாக்குறையை குறைப்பதற்காகவோ ஈடுகட்டுவதற்காகவோ மது விற்பனையை ஒரு பிரதான வருவாயாக எடுத்துக்கொள்ளும் போக்கு உறுதியாக நிராகரிக்கப்படவேண்டும். மதுவால் வருகிற வருமானம் இல்லாமல் அரசு இயங்க முடியாது என்ற நிலையை மாற்றுவதற்கு இதர வருவாய் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் தருணமாக நெருக்கடியான இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தி மாற்று செயல் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.
தனது சிறுநீரகத்தை ஒருவர் விற்றுவிட்டு ஆபரணங்களையும் அணிகலன்களையும் வாங்கி தன்னை அழகு செய்து கொள்வது எவ்வாறு பேதமையோ, அதுபோல உடல் நலனுக்குக் கேடு செய்கிற மதுவுக்கும் போதைப்பொருள்களுக்கும் அடிமையாகி, வாழ வேண்டிய வயதில் மரணத்தின் விளிம்பில் நிற்கிறவர்களுக்கு அரசு மதுவிற்பனையையும் அனுமதித்து விட்டு இலவசங்களையும் வழங்குவது ஆகும்.
பொருளாதார நிலைத்தன்மையை நோக்கிய நீண்ட மற்றும் கடினமான பாதையில் பயணிக்க வேண்டிய நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதிலும் இந்த அரசு எதிர்கொண்டுள்ள உடனடி சவாலாக தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ள மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துதல் மற்றும் எரிவாயு உருளைகளை வழங்குதல் ஆகியவை உள்ளன. இந்தச் செலவினங்களை எதிர்கொள்ள வருவாயைப் பெருக்குதல் மூலம் தீர்வு உண்டு என்பதை உறுதிபடக் கூறுவதற்கு இல்லை.
இருப்பினும், வருவாயை உயர்த்துவதற்குரிய சாத்தியக் கூறுகள் இல்லாமல் இல்லை. எடுத்துக்காட்டாக , 2024-25-ஆம் ஆண்டு முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் இருந்த வருவாய் 2025-26-ஆம் ஆண்டில் பல்வேறு சீர்திருத்தங்களின் மூலம் சுமார் ரூ. 7,000 கோடி வரை உயர்த்தி அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர். எனவே, பொருத்தமான அதிகாரிகளை சரியான துறையில் பயன்படுத்துவதன் மூலம் அரசின் வருவாயை நீண்ட மற்றும் குறுகிய காலத் திட்டங்களின் மூலம் உயர்த்த முடியும்.
குறிப்பாக வணிக வரித் துறையில் இன்னும் வரி வலைக்குள் கொண்டுவரப்படாத ஆனால் கொண்டுவர வேண்டிய தொழில் பிரிவுகளை அடையாளம் கண்டும் வரி ஏய்ப்பு நிகழ்கிற கூறுகளை ஆராய்ந்தும் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி முதல் 35 ஆயிரம் கோடி வரை கூடுதல் வருவாயை மாநில அரசு ஈட்ட முடியும். தற்போது தமிழ்நாடு வணிக வரித் துறை சிறப்பாக சீர்திருத்தப்பட்டுள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
ஆகவே, வருவாயைப் பெருக்குவதற்கான சாதகமான கூறுகளை ஆராய்வதில் இந்த அரசு உடனடிக் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு மூன்று காரணிகள் மிகவும் முக்கியமானவை. முதலாவது அடையாளம் காணப்பட்ட வருவாயை அதிகரிக்க வாய்ப்புள்ள துறைகளில் நேர்மையும் திறமையும் துறை சார்ந்த அனுபவமும் புத்தாக்கச் சிந்தனையும் உள்ள அதிகாரிகளை நியமிப்பது. இரண்டாவது அவர்களை அத்துறையில் சுதந்திரமான முடிவுகளை எடுத்துச் செயல்பட அனுமதிப்பது. மூன்றாவது வரிக் கொள்கைகள் தெளிவாகவும் எளிமையாகவும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
போதைப் பொருள்கள் மற்றும் மதுப் பழக்கத்தால் சமுதாயம் சிக்கல் நிறைந்ததாக மாறி வருகிறது. ஆரோக்கியம் தொடங்கி அமைதி வாழ்வு வரை சமுதாயத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே இது உலுக்கி வருகிறது.
மதுப் பழக்கம் என்பது வறுமைக்கும் குடும்ப மற்றும் சமுதாய அமைதியின்மைக்கும் அடிகோலுகிறது என்பது மட்டுமல்ல, அதை நாம் ஓர் சமூக அநீதிக்கான குறியீடாகப் பார்க்க வேண்டும். அதற்கு முடிவுரை எழுதுவதில் மக்கள் பிரதிநிதிகள் முழு மனதுடனான உறுதியுடன் செயல்பட வேண்டும்.
மது ஒழிப்பே மாநில வளர்ச்சி என்ற தார்மிக இலக்குடன் மதுவால் வருகிற வருமானத்துக்கு அப்பால் வாக்களித்த மக்களின் எதிர்கால நலவாழ்வு குறித்த அக்கறை உணர்வு அரசுக்கு அவசியம் தேவை.
கட்டுரையாளர்:
கல்வியாளர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.