தேசிய கல்விக் கொள்கையை கடந்த 2020 ஜூலையில் மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்கதமிழக அரசு 2022-இல் நீதிபதி டி. முருகேசன் தலைமையில் 13 பேரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு கடந்த ஆண்டு ஜூலையில் அளித்த 550 பக்க அறிக்கை இன்னமும்கூட அதிகாரபூர்வமாக பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. நுழைவுத் தேர்வுக்கான தனிப் பயிற்சி மையங்களைத் தடை செய்ய வேண்டும் என்கிற பரிந்துரை அண்மையில் கசிந்துள்ள அறிக்கையின் கூறுகளில் ஒன்று.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி காண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்), பொறியியல் படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜேஇஇ), மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு (காட்) ஆகியவற்றுக்காக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தனிப் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயில்கின்றனர். இந்தத் தனிப் பயிற்சி மையங்கள் பெரும்பாலானவற்றில் தகுதியான ஆசிரியர்கள் கிடையாது. அதிகமான கட்டணம், முறையற்ற ஒப்பந்தங்கள், பயிற்சியை இடையில் கைவிட்டால் செலுத்திய பணத்தை திரும்பப் பெற முடியாது, மையங்களில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை உள்ளிட்டவை குறித்து கேள்வி கேட்பாரில்லை. அது மட்டுமல்லாமல், மாணவர்களையும், பெற்றோர்களையும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களும், மாணவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் வகையிலான பயிற்சி முறையும், அதனால் மாணவர்கள் தற்கொலையும் தடுக்கப்படாத அவலங்கள்.
தனிப் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு ஜனவரியில் மத்திய கல்வித் துறை சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது. அந்த நெறிமுறைகளின்படி தனிப் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டது. கோவா, உத்தர பிரதேசம், பிகார் போன்ற ஒரு சில மாநிலங்கள் தனிப் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், இதர மாநிலங்களில் முனைப்பான முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள தனிப் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை குறித்து பதிவு எதுவும் இல்லாததால் துல்லியமான தகவல் இல்லை. எனினும், சிறியதும், பெரியதுமாக 500-க்கும் மேற்பட்ட மையங்கள் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், பெரும்பாலான தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் தனிப் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அகில இந்திய அளவில் செயல்பட்டுவரும் பயிற்சி மையங்களுக்கு பெரிய நகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும்கூட கிளைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மொத்த ஆண்டு வருமானம் சுமார் ரூ. 6,000 கோடி வரையில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வணிக நோக்கத்துடன் மட்டுமே நடத்தப்படும் தனிப் பயிற்சி மையங்களால் கல்வியில் அனைவருக்குமான சம வாய்ப்பு இல்லாமல் போகிறது. எதிர்காலத்தில் வழக்கமான பள்ளிக்கூடங்களே தேவை இல்லை; பயிற்சி மையங்களே போதும் என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சம் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதன் விளைவுதான் அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்கிற கருத்து பரவலாக உருவாகக் காரணம்.
மாநில கல்விக் கொள்கை வரையறைக் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அரசு ஒரே நாளில் செயல்படுத்திவிட முடியாதுதான். முதலில் அவற்றை வெளியிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்து கருத்துக் கேட்க வேண்டும். அதன் பிறகு அமைச்சரவை ஒப்புதல் பெற்று விதிமுறைகளை உருவாக்கி சட்டம் இயற்ற வேண்டும்; அதன் பிறகே அமல்படுத்த முடியும். இந்த நடைமுறைகளை மேற்கொள்ள ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள்கூட ஆகலாம்.
கல்வி பொதுப் பட்டியலில் உள்ளதால், மாநில அரசு சட்டம் இயற்றினாலும் அதை எதிர்த்து அரசமைப்பின் 19-ஆவது பிரிவு குடிமக்களுக்கு அளிக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தொழில் செய்யும் உரிமையைச் சுட்டிக்காட்டி தனியார் பயிற்சி மையங்கள் நீதிமன்றத்தை அணுகக்கூடும். நீதித்துறையும் கருப்புத்துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு சட்டப் புத்தகத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களுக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கக்கூடும்.
சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்து பயிற்சி மையங்களைத் தடை செய்வது என்பது நீண்டதொரு சிக்கலான நடைமுறை . அதனால் தடை விதிப்பதற்கு மாற்றாக, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி முதலில் கடுமையான விதிமுறைகளை உருவாக்கி ஒழுங்குபடுத்துதலை தொடங்குவதுதான் உடனடித் தீர்வாக இருக்கும்.
பயிற்சி மையங்களைப் பதிவு செய்தல், ஆசிரியர்களுக்கான தகுதிகளை வரையறுத்தல், உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தல், தனியானதொரு அமைப்பை ஏற்படுத்தி கண்காணித்தல், கட்டணங்களை வரைமுறை செய்தல், தவறான விளம்பரங்களைத் தடை செய்தல் போன்றவற்றை மாநில அரசு தாமதம் இன்றிச் செயல்படுத்த வேண்டும்.
பள்ளிக்கூட வகுப்பறைகளில் முறைப்படி ஆசிரியரிடம் பாடம் படித்தால் மட்டும் போதாது; தனிப் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி படித்தால்தான் உயர் கல்வி நிலையங்களில் சேர்க்கைக்கான இடம் கிடைக்கும் என்ற நிலைமைக்கு தீர்வுகாண வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.