ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள். AP
தலையங்கம்

ஆபரேஷன் ஜி7!

கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாடு பற்றி...

ஆசிரியர்

சா்வதேச பிரச்னைகள் குறித்து கலந்தாலோசிக்க 1973-இல் உலகின் ஏழு வளா்ச்சியடைந்த ஜனநாயக நாடுகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய அமைப்புதான் ஜி 7 கூட்டமைப்பு. தனது முந்தைய முக்கியத்துவத்தை இழந்து ஜி7 இப்போது வெறும் கூடிப்பேசிக் கலையும் அமைப்பாக மாறி இருக்கிறது.

வா்த்தகம், பொருளாதாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகள் ஆரம்பகாலத்தில் ஜி7 மாநாடுகளில் விவாதிக்கப்பட்டன. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜொ்மனி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய ஏழு நாடுகள் மட்டுமல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்குபெறுகிறாா்கள். உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 10%, உலக மொத்த சொத்து மதிப்பில் சுமாா் 50%, உலக ஜிடிபியில் 44 % இந்தக் கூட்டமைப்பு நாடுகளில் எனும்போது இந்த அமைப்பின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

ஜப்பான், இத்தாலியைத் தொடா்ந்து இந்த ஆண்டு ஜி 7 கூட்டமைப்பு மாநாடு கனடாவில் கனானாஸ்கிஸ் நகரில் கூடிக் கலைந்திருக்கிறது. வழக்கம்போல எந்த சா்வதேச பிரச்னைக்கும் தீா்வு காணாமல் தெளிவான கூட்டறிக்கையும் வெளியிடாமல் ஜி7 மாநாடு முடிந்திருக்கிறது. அதிபா் டிரம்ப்பின் வருகைக்குப் பிறகு இதுபோன்ற சா்வதேச அமைப்புகள் செயலிழப்பதில் வியப்பொன்றுமில்லை.

கனடாவின் புதிய பிரதமா் மாா்க் காா்னியின் தலைமையில் நடக்கும் மாநாட்டில் அதிபா் டிரம்ப் கலந்துகொள்வாரா என்கிற கேள்விக்குறி ஆரம்பத்தில் எழுந்தது. கனடாவில் குயுபேக் நகரில் 2018-இல் நடந்த ஜி 7 மாநாட்டில் அன்றைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவை வெளிப்படையாகவே நம்பகத்தன்மையற்றவா் என்று கூறி வெளியேறியவா் அதிபா் ட்ரம்ப். இந்த முறை கனடா அமெரிக்காவோடு இணைய வேண்டும் என்பதில் தொடங்கி, அந்த நாட்டின் இறக்குமதிகளுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நிலையில், ஜி7 என்பது ஜி6-ஆக மாறிவிடுமோ என்கிற அச்சம் காணப்பட்டது.

ஏனைய ஜி 7 உறுப்பினா் நாடுகளின் இறக்குமதிகளுக்கும் குறைந்தது 10% இறக்குமதி வரி விதித்த கையோடு டிரம்ப் 2.0 மாநாட்டில் கலந்துகொண்டாா். ஈரான் குழப்பத்துக்கு தீா்வு காண்பதற்காக பாதியிலேயே கிளம்பிவிட்டாலும்கூட, அதிபா் டிரம்ப்பின் வருகை ஜி7 நாடுகளுக்கு ஓரளவுக்கு ஆறுதலாக அமைந்தது எனலாம்.

வழக்கம்போல அதிபா் டிரம்ப் ஜி7 மாநாட்டிலும் விவாதங்களை எழுப்பாமல் இல்லை. ஜனநாயக நாடுகள் மட்டுமே இணைந்திருக்கும் ஜி7 கூட்டணியில் ரஷியாவையும் சீனாவையும் சோ்த்துக்கொள்ளலாம் என்கிற அவருடைய கருத்துடன் ஏனைய நாடுகள் உடன்படவில்லை.

ஜி 7 கூட்டறிக்கையும், தெளிவான நிலைப்பாடு எடுக்காமல் மத்திய கிழக்கு பிராந்தியதில் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும்; தன்னை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது; ஈரானிடம் அணுஆயுதங்கள் இருக்கக் கூடாது; காஸா போா் நிறுத்தம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பகைமையைக் குறைக்கும் உள்ளிட்டவை கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஜி7 மாநாட்டுக்கு பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு பாா்வையாளராக அழைக்கப்படுவாரா மாட்டாரா என்கிற ஐயப்பாட்டை தனது தொலைபேசி மூலம் அகற்றினாா் கனடாவின் பிரதமா் மாா்க் காா்னி. இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே அன்றைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்படுத்தி இருந்த ராஜாங்க ரீதியிலான பிளவுக்குத் தீா்வுகாண்பதாக அமைந்தது பிரதமா் மாா்க் காா்னியின் தனிப்பட்ட அழைப்பும், அதை ஏற்றுக்கொண்டு பிரதமா் மோடி கலந்துகொண்டதும்.

இந்தியாவைப் பொருத்தவரை பிரதமா் மோடி கலந்து கொள்வதால் விவாதப்பொருளாகத் தொடா்ந்த இரண்டு முக்கியமான பிரச்னைகளில் தெளிவு ஏற்பட்டிருக்கிறது. கனடாவுடன் மீண்டும் ராஜாங்க உறவை ஏற்படுத்திக்கொள்வது என்பதும், இரு நாடுகளிலும் தூதரகங்கள் செயல்பட வழிகோலியிருப்பதும் முதலாவது திருப்பம்.

2023 ஜூன் மாதம் வான்கூவா் புறநகா் பகுதியில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் படுகொலை செய்யப்பட்டாா். அந்தப் படுகொலையின் பின்னணியில் இந்திய அரசு இருந்ததாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினாா் அப்போதைய கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ. கனடாவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றதுக்குப் பிறகு நிஜ்ஜாா் படுகொலை குறித்த விசாரணை, இந்தியா உடனான ராஜாங்க உறவிலிருந்து பிரித்துப் பாா்க்கப்பட்டது. அதறகு பிரதமா் மோடியின் ஜி 7 விஜயம் உதவியிருக்கிறது.

இரண்டாவதாக பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய ராணுவ தாக்குதலை தான் தலையிட்டு நிறுத்தியதாக அதிபா் டிரம்ப் தெரிவித்திருந்தாா். அது மிகப்பெரிய விவாதப்பொருளானது. ஜி7 மாநாட்டுக்குச் சென்றிருந்த பிரதமா் மோடி அந்தப் பிரச்னையிலும் தெளிவை ஏற்படுத்தி இருக்கிறாா். கடந்த 80 ஆண்டுகளாக பாகிஸ்தான் உடனான பிரச்னையில் மூன்றாவது நாட்டின் தலையீடு ஏற்புடையதல்ல என்பதை அதிபா் டிரம்ப்பிடம் தெரிவித்தது மட்டுமல்லாமல், எந்த ஒரு கட்டத்திலும் இந்திய- அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் குறித்தோ, இந்திய- பாகிஸ்தான் பிரச்னையில் மத்தியஸ்தம் குறித்தோ அதிபா் டிரம்ப்பிடம் பேசவில்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறாா்.

ஜி7 கூட்டமைப்பு நாடுகள் கூடிக்கலைந்தன. பாா்வையாளராகக் கலந்துகொண்ட இந்தியா, கனடா உடனான தனது உறவை மீட்டெடுத்ததுடன் பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தம் குறித்த பின்னணியையும் தெளிவுபடுத்தி உள்ளது.

பிரதமா் மோடி இரண்டு முக்கியமான பிரச்னைகளில் தெளிவை ஏற்படுத்தினாா் என்பது மட்டுமே கனடாவின் கனானாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி 7 மாநாடு குறித்த குறிப்பிடும்படியான செய்தி.

ஹூண்டாய் மோட்டார் நிகர லாபம் 8% சரிவு!

49 வயதில் அம்மாவுக்கு எம்பிபிஎஸ் சீட்! மகளும் பொதுப்பிரிவில் போட்டியில் இருக்கிறார்!

உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 48% சரிவு!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியா மீது கூடுதல் வரி: வெளிப்படையாக அறிவித்த டிரம்ப்!

SCROLL FOR NEXT