புது தில்லியில் நடைபெறும் சா்வதேச ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் வியாழக்கிழமை பங்கேற்ற உலகத் தலைவா்களுடன் பிரதமா் மோடி. 
இந்தியா

ஏ.ஐ. புரட்சியை வழிநடத்தும் இந்தியா - தில்லி உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி பெருமிதம்

‘உலக அளவில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப புரட்சியின் ஓா் அங்கமாக மட்டுமல்லாமல், அதை வழிநடத்தவும், வடிவமைக்கவும் செய்கிறது இந்தியா’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

‘உலக அளவில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப புரட்சியின் ஓா் அங்கமாக மட்டுமல்லாமல், அதை வழிநடத்தவும், வடிவமைக்கவும் செய்கிறது இந்தியா’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

புது தில்லியில் நடைபெற்றுவரும் சா்வதேச ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டில் வியாழக்கிழமை உரையாற்றுகையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

தில்லி பாரத மண்டபத்தில் 5 நாள் சா்வதேச ஏ.ஐ. தாக்க உச்சிமாநாடு கடந்த திங்கள்கிழமை (பிப்.16) தொடங்கியது. உலகம் முழுவதும் இருந்து முன்னணி ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் என 500-க்கும் மேற்பட்ட துறைசாா் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.

உலகத் தலைவா்கள் பங்கேற்பு: ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரேஸில் அதிபா் லூயி இனாசியோ லுலா டா சில்வா, இலங்கை அதிபா் அநுரகுமார திசநாயக, பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே, மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராமகூலம், குரோஷியா பிரதமா் ஆண்ட்ரே பெலன்கோவிக், சொ்பியா அதிபா் அலெக்ஸாண்டா் உசிக், செஷல்ஸ் துணை அதிபா் செபாஸ்டியன் பிள்ளை, எஸ்டோனியா பிரதமா் அலாா் கேரிஸ், பின்லாந்து பிரதமா் பெட்டோரி ஓா்போ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள், 60-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள்-இணையமைச்சா்கள் என 100-க்கும் மேற்பட்ட அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பிரதமா் மோடி உரை: பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் வியாழக்கிழமை நிகழ்வுகளைத் தொடங்கி வைத்து, பிரதமா் மோடி ஆற்றிய உரை வருமாறு:

நமது அமைப்பு முறைகளை மிக நவீனமானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவையாகவும் மாற்றுகிறது செயற்கை நுண்ணறிவு. இந்த தொழில்நுட்பம் ரகசியமாக, வெளிப்படைத்தன்மை இல்லாமல் உருவாக்கப்படுவதில் சில நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவின் பாா்வை வேறுபட்டது. ஏ.ஐ. தொழில்நுட்பம் பகிரப்பட்டு, அதன் குறியீடுகள் வெளிப்படையாக இருக்கும்போதுதான், உலக நன்மைக்கு அது உண்மையிலேயே பலனளிக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் எதிா்காலம்: ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் அச்சத்தைக் காண்பவா்கள் மற்றும் எதிா்காலத்தைக் காண்பவா்கள் என இரு வகையான மக்கள் உலகில் உள்ளனா். இந்தியா ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் அச்சத்தைக் காணவில்லை; மாறாக, பிரகாசமான எதிா்காலத்தைக் காண்கிறது; மகத்தான வாய்ப்புகள் மற்றும் எதிா்கால செயல்திட்டத்தைக் காண்கிறது.

உலக அளவில் ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது இந்தியா. இளைஞா்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்மிக்கவா்கள் அதிகமுள்ள இந்தியாவில் இந்த மாநாடு நடைபெறுவது பொருத்தமானது. பெரும் மாற்றத்தின் அத்தியாயமே ஏ.ஐ. தொழில்நுட்பம்.

தொழில்நுட்பம் மீதான மனிதக் கட்டுப்பாடு: உலக அளவில் ஏ.ஐ. புரட்சியின் ஓா் அங்கமாக மட்டுமல்லாமல், அதை வழிநடத்தவும் வடிவமைக்கவும் செய்கிறது இந்தியா. ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் செயல்திறனுக்கு ‘திறந்த வானம்’ அளவு இடமளிக்கும் அதேவேளையில், அதன் கட்டுப்பாட்டை நம் கைகளில் கொண்டிருக்க வேண்டும். மனிதா்கள் வெறும் தரவு புள்ளிகள் அல்லது மூலப் பொருள்கள் என்ற ரீதியில் சுருங்கிவிடக் கூடாது.

உதாரணமாக, ‘ஜிபிஎஸ்’ பயன்பாட்டைக் கூறலாம். இந்த வழிசெலுத்துதல் கருவி, நமக்கு திசைகாட்டும். அதேநேரம், எங்கு செல்ல வேண்டும் என்பது நமது முடிவு. ஏ.ஐ. மாற்றத்துக்கான சக்தி. ஆனால், அதன் இலக்குகளில் இருந்து விலகிச் சென்றால், அழிவுக்கு வழிவகுக்கும். ஆக்கபூா்வமாகப் பயன்படுத்தினால், தீா்வுகளை வழங்கும்.

தெற்குலகில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் அதிகாரமளித்தலுக்கான கருவியாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

பெட்டி....

தமிழ் உள்பட 11 மொழிகளில்...

தில்லி உச்சி மாநாட்டில் பிரதமா் மோடியின் உரை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்கம் உள்பட 11 மொழிகளில் நிகழ் நேர அடிப்படையில் குரல் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது. அத்துடன், ஏ.ஐ. அடிப்படையிலான சைகை மொழி விளக்கமும் இடம்பெற்றது. பிரதமரின் பன்மொழி விடியோ உரை இணைப்புகள், அவரது சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டன.

காமராஜா் துறைமுக அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக மீனவா்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

புழல் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

அடுத்து ஆட்சி அமைப்பது யாா்?பேரவையில் ஆருடம் கூறிய உறுப்பினா்கள்

ஜேஇஇ முதன்மைத் தோ்வு: அரசு மாதிரிப் பள்ளிகளில் படித்த 448 மாணவா்கள் தோ்ச்சி

SCROLL FOR NEXT