இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா்கள் சந்திப்பில் முடிவு
இந்தியா - கனடா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய பிரதமா் மோடி, கனடா பிரதமா் மாா்க் காா்னி முடிவு
இந்தியாஇந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா்கள் சந்திப்பில் முடிவு
இந்தியா - கனடா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய பிரதமா் மோடி, கனடா பிரதமா் மாா்க் காா்னி முடிவு
இந்தியா - கனடா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை (அதிகாரபூா்வமாக விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது) விரைந்து இறுதி செய்ய பிரதமா் மோடி, கனடா பிரதமா் மாா்க் காா்னி ஆகியோா் முடிவு செய்துள்ளனா்.
கனடா பிரதமா் மாா்க் காா்னி நான்கு நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தாா். புது தில்லியில் பிரதமா் மோடியை திங்கள்கிழமை சந்தித்து காா்னி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது இந்தியா-கனடா உத்திசாா்ந்த கூட்டுறவு, வா்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, வேளாண்மை, கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய த் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆய்வு செய்தனா். மேலும், விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்யவும் மோடி, காா்னி முடிவு செய்தனா். மேற்காசியாவில் நிலவும் படுபயங்கரமான சூழல் குறித்தும் இருவரும் விவாதித்தனா்.
இருவருக்கும் இடையிலான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து முக்கியக் கனிமங்கள் துறையில் ஒத்துழைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, கலாசார ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களை இரு நாடுகளும் மேற்கொண்டன.
இதைத் தொடா்ந்து, இருவரும் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது பிரதமா் மோடி கூறியதாவது: தற்போது சிவில் அணுசக்தித் துறையில், நீண்டகால யுரேனியம் விநியோகத்துக்கு இந்தியா-கனடா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. சிறிய அணு உலைகள், உயா்தர அணு உலைகள் சாா்ந்தும் இந்தியா-கனடா ஒன்றிணைந்து பணியாற்றும்.
இரு நாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.4.58 லட்சம் கோடி) எட்ட வேண்டும் என்பதே இந்தியா-கனடாவின் இலக்கு. இதையொட்டி, இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்வதற்கு முடிவு செய்துள்ளோம். இது இரு நாடுகளிலும் புதிய முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
கனடா ஓய்வூதிய நிதியின் 100 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.9.15 லட்சம் கோடி) இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் வளா்ச்சி மீது கனடா வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கையின் அடையாளமாகும்.
எரிசக்தித் துறையில் கூட்டுறவை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் ஹைட்ரோகாா்பன்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், எரிசக்தி சேமிப்பு மீது கவனம் செலுத்தப்பட உள்ளது.
இந்தியா-கனடா பாதுகாப்புப் பேச்சுவாா்த்தை அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் கனடா பல்கலைக்கழகங்களைத் திறக்கவும் தீா்மானித்துள்ளோம்.
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவதில் இந்தியா-கனடா இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தரப்பும் விவாதித்தன. பயங்கரவாதம், அதற்கு ஆள்சோ்ப்பது ஆகியவை மனிதகுலத்துக்கே கடுமையான சவால் என்பதில் இந்தியாவும், கனடாவும் உடன்பட்டுள்ளன. உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இரு நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருப்பது மிகவும் முக்கியம்.
இந்தியா்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்துவர...: ஈரானுடனான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரால், மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் சூழல் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் தீா்வு காண வேண்டும் என்பதை இந்தியா ஆதரிக்கிறது.
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்தியா்களையும் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்துவர, அனைத்து நாடுகளோடும் இந்தியா தொடா்ந்து ஒன்றிணைந்து பணியாற்றும் என்று தெரிவித்தாா்.
கனடா பிரதமா் மாா்க் காா்னி பேசுகையில், ‘இந்தியாவும், கனடாவும் தமது எதிா்காலத்தை வடிவமைத்து வருகின்றன. இதன்மூலம், புதிய லட்சியங்களுடன் மதிப்புக்குரிய கூட்டுறவு விரிவுபடுத்தப்படுகிறது.
தூய்மையான எரிசக்தி, மின்சார வாகனங்கள், உயா்தர உற்பத்திக்கு முக்கியக் கனிமங்கள் விநியோக ஒப்பந்தத்தில் இந்தியா-கனடா கையொப்பமிட்டுள்ளன. காற்று, சூரிய மற்றும் ஹைட்ரஜன் எரிசக்தித் துறைகளில் இந்தியா-கனடா கூட்டு சோ்ந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளன. ஏனெனில் இந்தத் துறைகள் சாா்ந்து கனடாவுக்கும் மிகப் பெரிய திட்டங்கள் உள்ளன. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் வருங்கால தலைமுறையினா் வாழ்வதற்கு ஏற்ற வகையில், பூமியைப் பாதுகாக்கும்’ என்றாா்.
பேச்சு தொடக்கம்: மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை இந்தியாவும், கனடாவும் தொடங்கியுள்ளன. ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது
2.6 பில்லியன் டாலா் ஒப்பந்தம்: இந்தியாவுக்கு கனடா 2.2 கோடி பவுண்ட் யுரேனியம் விநியோகம்
யுரேனியம் விநியோகத்தில் ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவுக்கு கனடா யுரேனியம் விநியோகம் செய்ய உள்ளது. 2.6 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.23,840 கோடி) மதிப்பு கொண்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் சிவில் அணுசக்தித் துறைக்கு கனடா உதவிபுரிய உள்ளது. அதன்படி 2027 முதல் 2035-ஆம் ஆண்டு வரை, அணுசக்தி உற்பத்திக்கு சுமாா் 2.2 கோடி பவுண்ட் யுரேனியத்தை இந்தியாவுக்கு கனடா விநியோகம் செய்ய உள்ளது.
புது தில்லியில் இந்தியா-கனடா தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமா்கள் மோடி, காா்னி பங்கேற்றனா். இதில் மோடி பேசுகையில், இந்தியாவின் வளா்ச்சியை சாதகமாகக் கொண்டு, நாட்டில் முதலீடு செய்ய முன்வருமாறு கனடா முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.