பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் யார் அதிகம் பதிவு போடுவது என்ற போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் கைகலப்பில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் சில மாணவிகள் ஒன்றுசேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு தொடங்கி தாங்கள்தான் "கெத்து' என்ற ரீதியில் பதிவிட்டு வந்துள்ளனர். திருப்பூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பல்லடம் ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளும் இதுபோன்ற குழு அமைத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்ததில் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த திருப்பூர் பள்ளி மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் 15 கி.மீ. பேருந்தில் சென்று பல்லடம் ஒன்றிய அரசுப் பள்ளி மாணவிகளுடன் சாலையிலேயே வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டு தாக்கிக் கொண்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தில் இருந்து தச்சூருக்குச் சென்ற பேருந்தில், காலை நேரத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களும், மாணவிகளும் கல்வி ஆண்டின் கடைசி நாளைக் கொண்டாடுவதற்காக பொதுமக்கள் பலரும் இருந்த நிலையில் மது அருந்தினர். பெற்றோர், ஆசிரியர்கள், சமூகத்தினர் என யார் குறித்தும் கொஞ்சமும் அச்சமோ, கூச்சமோ இல்லாமல் அதைக் கைப்பேசியில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பதிவும் செய்தனர்.
இதுபோன்றே, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூரில் உள்ள தனியார் கலை-அறிவியல் கல்லூரியில் வகுப்பறையில் அமர்ந்தபடி பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கூட்டமாக அமர்ந்து மது அருந்தினர். இந்தச் சம்பவங்களும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாயின.
பல்வேறு எண்ணங்களைச் சுமந்துகொண்டு, பரபரப்பான காலை வேளையில் பொதுமக்கள் வேலைக்கும் மாணவர்கள் பள்ளிக்கும் செல்லும் நேரத்தில் பேருந்துகளிலும் ரயில்களிலும் தொங்கிக் கொண்டும், பேருந்துகளின் கூரையில் ஏறியும் மாணவர்கள் சிலர் செய்யும் அடாவடிகள் முகம் சுழிக்க வைப்பதுடன் பெண் பயணிகளுக்குப் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக அமைகின்றன.
கணிதமேதை ராமானுஜன், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன் உள்ளிட்ட பலர் படித்த சென்னை பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, நந்தனம் கல்லூரி போன்ற கல்லூரிகளின் மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது நெடுநாள்களாகவே தொடர்கிறது. இதுபோன்ற மோதல்கள் சில நிகழ்வுகளில் கொலை வரை சென்று விடுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் கடந்த ஆண்டு அக். 4-ஆம் தேதி கொடூரமாகத் தாக்கப்பட்ட மாநிலக் கல்லூரி மாணவர் சில நாள்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கின்போது, கடந்த 10 ஆண்டுகளில் இரு கல்லூரிகளைச் சேர்ந்த 231 மாணவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர். கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதைத் தடுக்க மனநல நிபுணர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள், கல்வித் துறை உயரதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அப்போது அறிவுறுத்தியது.
பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மெட்ரிக். பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே கடந்த ஏப்ரலில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு மாணவர் புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வகுப்பறையிலேயே மற்றொரு மாணவரை வெட்டியுள்ளார். தடுக்க வந்த ஆசிரியையையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார் என்பது வியப்பளித்த நிகழ்வாகும்.
தெலுங்கில் இரண்டு பாகங்களாக வெளிவந்து சில ஆயிரம் கோடிகளைக் குவித்த திரைப்படத்தின் தாக்கம் குறித்து தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள யூசுப்குடாவில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் பேசியது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
"திரைப்படம் பார்க்கும் மாணவர்கள், அந்த கதாநாயகன் போன்று ஆக நினைக்கிறார்கள். மாணவர்கள் கண்டபடி "ஹேர் ஸ்டைல்' (சிகை அலங்காரம்) வைத்து பள்ளிக்கு வருகின்றனர். எங்களால் அவர்களைத் தண்டிக்கக்கூட முடியாது. நல்லது என நினைத்து தண்டித்தால் மாணவர்கள் தற்கொலை வரை போகும் நிலை உள்ளது. இதற்கு சமூக வலைதளங்களும் ஒரு காரணம். மாணவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்தால் ஒரு குருவாக நான் தோற்றுவிட்டதாகவே தோன்றுகிறது' என்று தேசிய கல்வி ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது உள்ளக்குமுறலைக் கொட்டினார் அவர்.
புகைப் பிடித்தல், மது அருந்துதல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாதல், பள்ளிப் பருவத்திலேயே காதலித்தல், பேருந்து, ரயில்களில் அட்டூழியம் செய்தல், ஜாதி ரீதியாகப் பகை வளர்த்தல் போன்றவை விதிவிலக்குகள் என்று சமாதானம் கூறிக் கடந்து செல்லாமல், பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.
கற்பித்தல் தவிர மற்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதால் கடும் பணிச் சுமை ஏற்படுகிறது என்பது ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
மதிப்பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவில் நன்னெறி வகுப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இந்த நிலைமை இப்படியே தொடர்வதை சமுதாயம் அனுமதித்தால், தமிழர்கள் நாம் என்று தலைநிமிர்ந்து சொல்லிக்கொள்ள முடியாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.