சாரதா முரளிதரன் தனது கணவர் டாக்டர் வி.வேணுவுடன்..  படம் | ens
தலையங்கம்

இது​வு‌ம் ஒரு​வகை நிற‌​வெ​றி​தா‌ன்!

நிற‌​வெ​றி பற்றி கேரள தலைமைச் செயலர் சாரதா முரளிதரன் கருத்து...

ஆசிரியர்

கேரள மாநில அரசின் தலைமைச் செயலர் சாரதா முரளிதரன், நிறப் பாகுபாட்டை தான் எதிர்கொண்டதாகவும், தன் கணவரின் வெள்ளை நிறத்தையும், தனது கருப்பு நிறத்தையும் ஒப்பிட்டுக் கூறப்பட்ட விமர்சனங்களால் தான் சோர்வடைந்ததாகவும் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் காலத்திலும் நிறப் பாகுபாடு பார்ப்பவர்களைக் கண்டித்துள்ள பலர், சாரதா முரளிதரனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"என் கணவர் எந்த அளவு வெள்ளையாக இருக்கிறாரோ, அதே அளவுக்கு நான் கருப்பாக இருப்பதாக என்னை ஒருவர் விமர்சித்தார். கேரள அரசின் தலைமைச் செயலர் பதவியில் இதற்கு முன்பு இருந்தவர்களுடன் எனது நிறத்தை ஒப்பிட்டு பலர் பேசியுள்ளனர். கருப்பான பெண் என முத்திரை குத்தப்பட்டேன். அது ஏதோ அவமானம் எனக் கருதுகின்றனர். இதுதொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இதைப் பதிவிடுகிறேன்' எனவும் சாரதா முரளிதரன் கூறியிருக்கிறார்.

"ஒரு பெண் ஒரு கருத்தை வெளிப்படுத்தும்போது, அவரது எண்ணங்களை வெளிப்படுத்துவதுகூட சவாலானதாகும். அவருக்கு கருமையான சருமம் இருந்தால், அந்தப் பெண் காணாமலேயே போய்விடுவது போலாகும்' என்பது உள்பட கருப்பு நிற பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை கேள்விக்கணைகளாகத் தொடுத்திருக்கிறார், 1990 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சாரதா முரளிதரன்.

"தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களும், கடும் வறுமையில் வாடும் பெண்களும் கருப்பு என முத்திரை குத்தப்படுகின்றனர். வெளிர் நிறம் கொண்டவர்கள் அழகானவர்களாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்கவர்களாகவும், திறமையானவர்களாகவும் கருதப்படுகின்றனர்' என அவர் வெளிப்படுத்திய வார்த்தைகள் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்குகின்றன.

2024-ஆம் ஆண்டுமுதல் தலைமைச் செயலராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் வி.வேணு கேரள மாநில அரசின் தலைமைச் செயலராக இருந்தார். அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சாரதா முரளிதரனும் தலைமைச் செயலரானார்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் மட்டும்தான் நிறப் பாகுபாடு இன்னும் இருப்பதாகக் கருதினால் அது தவறு என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் உதாரணம். ஓர் ஐஏஎஸ் அதிகாரியையே இந்தச் சமூகம் நிறத்தைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கிறது என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அதுவும் கேரளம் மாதிரியான கல்வியில் முன்னேறிய மாநிலத்திலேயே இந்த நிலை என்றால், நாட்டின் பிற மாநிலங்களில் எப்படி இருக்கும் எனச் சொல்லவே வேண்டாம். சமூகத்தில் ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் பெண்களை, நிறத்தாலும் வதைப்பது மிகக் கொடுமை.

நிறப் பாகுபாட்டை ஊக்குவிப்பதில் சமூகத்தின் அனைத்துத் தரப்புக்கும் சமமான பங்கு இருக்கிறது. முற்போக்கு கருத்துகளைப் பேசும் திரைப்படங்களாகவே இருந்தாலும், அவற்றிலும் கதாநாயகிகளாக வெண்மை நிறம் கொண்டவர்களை நடிக்கவைக்கும் போக்குதான் இன்றளவும் தொடர்கிறது. கருப்பாக இருப்பவர்களைப் பார்த்து கேலி செய்து, அதை நகைச்சுவை என சித்தரிக்கும் காட்சிகள் எந்தவிதத் தயக்கமும் இன்றி திரைப்படங்களில் இடம்பெறுகின்றன.

தொலைக்காட்சிகளிலும் சோப்பு விளம்பரம் முதல் அனைத்துவிதமான பொருள்களை விளம்பரப்படுத்துவதற்கும் வெண்மை நிறம் கொண்ட நடிகைகளே தேர்வு செய்யப்படுகின்றனர். அதேபோன்று விளிம்புநிலை மக்களை திரைப்படங்களில் காண்பிப்பதற்கு, அந்தக் கதாபாத்திரத்துக்கு உரியவர் வெண்மை நிறம் கொண்டவராகவே இருந்தாலும் அவருக்கு கருப்பு ஒப்பனை செய்து நடிக்கவைக்கும் முரணும் தொடர்கிறது.

பள்ளி, கல்லூரிகளில் கலைநிகழ்ச்சிகளிலும், நடன நிகழ்ச்சிகளிலும் வெண்மை நிறம் கொண்ட மாணவிகளுக்கு முக்கியத்துவம் தருவது அனைத்து இடங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெறும் விஷயமாகிவிட்டது. பணியிடங்களிலும் இந்த நிறப் பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது. ஜாதி, இன, மத வெறுப்புபோன்று கருப்பு நிறத்துக்கு எதிரான வெறுப்பு அப்பட்டமாக வெளிப்படுவதில்லை என்றாலும் சமூகத்தின் அடிமனதில் ஆழமாகப் பதிந்துவிட்டிருப்பதை மறுக்க இயலாது.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த நவீன காலத்திலும் கருப்பு நிற பெண்கள் திருமணம் செய்துகொள்வதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பெரும் துயரமாகத் தொடர்கின்றன. "பெண் நன்றாகப் படித்திருக்கிறாள், நல்ல வேலையில் இருக்கிறாள், ஆனால், நிறம்தான் கொஞ்சம் கருப்பு' என திருமணச் சந்தையில் புறக்கணிக்கப்படும் அவலத்தை என்னவென்று சொல்வது?

"கருப்பாக இருப்பவர்கள் மீதான இந்திய சமூகத்தின் அணுகுமுறை மாற வேண்டும். இந்த மாற்றம் முதலில் வீடுகள், பள்ளிகளிலிருந்து கண்டிப்பாகத் தொடங்க வேண்டும்' என்கிற சாரதா முரளிதரனின் யோசனை வரவேற்று பின்பற்றப்பட வேண்டியதாகும். சாரதா முரளிதரனின் வெளிப்படையான கருத்துகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ள கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், கேரள சமூகத்தின் நிறப் பாகுபாடு மனப்பான்மையை அவர் அம்பலப்படுத்தியுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

நிறப் பாகுபாடு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். பிறப்பின் அடிப்படையில் எவ்வாறு ஏற்றத்தாழ்வு இல்லையோ, அதேபோன்று நிறத்தின் அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

தளவாய் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொடக்கி வைப்பு

நஜாஃப்கரில் தூய்மைப் பணியில் அமைச்சா் ஆஷிஷ் சூட்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இரு ஆசிரியா்கள் கைது

மத்திய கல்வி அமைச்சகம் முன் என்எஸ்யுஐ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT