நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரண்டு நெல் ரகங்களை மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளாா். சுமாா் 140 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டின் எதிா்கால உணவுத் தேவைக்காக இந்த முயற்சி அவசியம் என நியாயப்படுத்தினாலும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
நாட்டில் சுமாா் 90 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்படும் சம்பா மசூரி (பி.பி.டி. 5204) மற்றும் கட்டன்டோரா சன்னலு (எம்.டி.யு. 1010) ஆகிய இரண்டு நெல் ரகங்களிலிருந்தும் முறையே டிஆா்ஆா் தன் 100 (கமலா), பூசா டிஎஸ்டி ரைஸ் 1 ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ‘டிஆா்ஆா் தன் 100 (கமலா)’ மற்றும் ‘பூசா டிஎஸ்டி ரைஸ் 1’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நெல் ரகங்கள், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் தனது சொந்த தொழில்நுட்பத்தின்மூலம் முதன்முறையாக மரபணு ரீதியாக திருத்தம் செய்து உருவாக்கி சாதனை படைத்துள்ளதைப் பாராட்டலாம்.
மிகவும் சன்ன ரக அரிசியை தரக் கூடிய சம்பா மசூரிக்கு வட மாநில சந்தைகளில் வரவேற்பு அதிகம். காலநிலை மாற்றம் மற்றும் நோய் தாக்குதல்களை தாங்காத இந்த ரகம் சராசரி விளைச்சலையே தரும். இதன் காலம் 145 முதல் 150 நாள்கள் ஆகும். கட்டன்டோரா சன்னலு ரகமானது, அதிக விளைச்சலைத் தரும். இதன் காலம் 125 முதல் 130 நாள்கள். தென் மாநிலங்களில் ராபி பருவத்துக்கு ஏற்றது. ஆனால், வறட்சிப் பகுதிகளிலும், உவா் நிலங்களிலும் பயிரிட்டால் பாதிப்பைச் சந்திக்கும்.
இந்த இரண்டு ரகங்களின் மரபணுக்களிலும் திருத்தம் செய்து உருவாக்கப்பட்டுள்ள புதிய ரகங்களைப் பயிரிட குறைவான தண்ணீா் போதும். அதிக மகசூலைத் தரும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தாக்குப் பிடித்து வளா்வதுடன் 20 முதல் 30 சதவீதம் கூடுதலாக மகசூல் தரும். கரியமில வாயு வெளியேற்றமும் குறைவு.
கமலா ரகமானது அதன் மூல ரகத்தைவிட 20 நாள்கள் முன்னதாகவே (130 நாள்கள்) அறுவடைக்கு வந்துவிடும். ஆதலால், அடுத்த பயிா்களை முன்கூட்டியே பயிரிடலாம் என்பதுதான் இந்த இரண்டு ரகங்களின் சிறப்பாகக் கூறப்படுகிறது. அரிசியை அதிகம் விளைவிக்கும் ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, பிகாா், சத்தீஸ்கா், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஒடிஸா, ஜாா்க்கண்ட், பிகாா், மேற்கு வங்க மாநிலங்களில் இந்த ரகரங்களைப் பயிரிடலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இப்போது பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களின் தேவைக்கு நாம் வெளிநாடுகளைச் சாா்ந்திருக்கிறோம். எதிா்காலத்தில் நமக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த விளைபொருள்கள் தேவை. குறைந்த பரப்பளவில் அதிக நெல்லை விளைவிப்பதன்மூலம், மீதமுள்ள இடங்களில் பருப்பு, எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்ய முடியும். அவற்றின் இறக்குமதியைக் குறைக்க முடியும் என்பதற்காகத்தான் புதிய இந்தப் புதிய நெல் ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது அமைச்சரின் வாதம்.
நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) கிடைக்கிறது. அதனால் விவசாயிகள் நெல் பயிரிடுவதில் ஆா்வம் காட்டுகின்றனா். நெல்லைப் போன்றே பருப்பு மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு முழுமையான மற்றும் உடனடி கொள்முதல் உத்தரவாதம் இருந்தால் மட்டுமே விவசாயிகள் அவற்றைப் பயிரிட ஆா்வம் காட்டுவாா்கள்.
எதிா்காலத்தில் நெல் சாகுபடி பரப்பளவை தற்போதுள்ள 47 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 5 மில்லியன் ஹெக்டோ் குறைக்க வேண்டும்; உற்பத்தியை தற்போதைய 1,378.3 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 10 மில்லியன் மெட்ரின் டன் அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம்.
பயிரிடும் பரப்பளவை குறைக்கும்போது புதிய நெல் ரகம் குறித்த விழிப்புணா்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தாவிட்டால் உற்பத்தி குறையும்; உணவுத் த ட்டுப்பாடு ஏற்படும். எனவே, இலக்கை எட்ட வேண்டுமானால் விவசாயிகளுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளிக்க வேண்டியது கட்டாயம் என்பதையும் அரசு உணர வேண்டும்.
தேவையான அளவு விதை நெல் உற்பத்தி செய்தல், சான்று பெறுதல் உள்ளிட்ட நடைமுறைகளை முடிக்கக் குறைந்தது இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், இரண்டு ஆண்டுகளிலேயே விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்கும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உயிரி தொழில்நுட்ப சா்வதேச பெருநிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அவசரம் காட்டப்படுகிறதோ என்ற சந்தேகத்தைத் தவிா்க்க முடியவில்லை.
மரபணு மாற்றப்பட்ட பயிா் ரகங்களுக்கு கடும் எதிா்ப்பு நிலவிவரும் சூழலில், நாட்டு மக்களின் பிரதான உணவுகளில் ஒன்றான அரிசி உற்பத்திக்கு மரபணு திருத்தம் செய்யப்பட்ட நெல் ரகங்களை உருவாக்கியுள்ளது சரியா, அது நம்பகமான தொழில்நுட்பமா, இது விவசாயிகளின் விதை உரிமையை பாதிக்காதா என்று எதிா்ப்பாளா்கள் எழுப்பும் கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை.
அது மட்டுமல்ல, இந்த இரண்டு விதை ரகங்களும் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனவா, சுதந்திரமான அமைப்புகள் அவற்றை ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டதா, குறிப்பாக நீண்டகால வயல்வெளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா, அவற்றின் அரிசி உடல் நலனுக்குப் பாதுகாப்பானதா என்ற கேள்விகளும் எழுகின்றன.