ஸோரான் மம்தானி (கோப்புப்படம்) AP
தலையங்கம்

மம்தானியின் வெற்றி!

பராக் ஒபாமா என்கிற கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் அதிபரானதும், கமலா ஹாரிஸ் என்கிற இந்திய அமெரிக்கர் துணை அதிபரானதும்தான், அதிபர் டிரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் செல்வாக்குப் பெறக் காரணமாக அமைந்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!

ஆசிரியர்

ஒட்டுமொத்த உலகத்தையும் மகிழ்ச்சியிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும், அவரது ஆதரவாளர்களையும் அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தி இருக்கிறது நியூயார்க் மேயர் தேர்தல் முடிவு. சில மாகாணங்களில் ஆளுநர்களுக்கான தேர்தலிலும்

அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியைத் தழுவி இருப்பது, கடந்த ஓராண்டாக அவர் எடுத்துவரும் அதிரடி முடிவுக்கு அமெரிக்காவில் அதிகரித்துவரும் எதிர்ப்பின் வெளிப்பாடு.

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பிறந்த தெற்காசிய வம்சாவளியரான 34 வயது ஸோரான் மம்தானி, மிகக் குறைந்த வயதில் அமெரிக்காவின் வர்த்தகத் தலைநகரான நியூயார்க்கின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இரண்டாவது நபர். நியூயார்க் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் முதலாவது இந்திய வம்சாவளியினர்; இஸ்லாமியர் உள்ளிட்ட தனித்துவம் அவரைச் சாரும். அந்த நகரின் 111-ஆவது மேயராக அவர் ஜனவரி மாதம் பதவி ஏற்பார்.

சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் ஆளுநரான ஆண்ட்ரூ குவோமோவைவிடவும், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவாவைவிடவும், பதிவான வாக்குகளில் 50.4% பெற்று மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மம்தானி. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, அவர் மேயர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தபோதே, அமெரிக்க அரசியலில் சலசலப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால்,

நியூயார்க்கிற்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைப்பேன் என்று அதிபர் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்த நிலையிலும், மக்கள் அவருக்குப் பெருமளவில் வாக்களித்து வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளி இஸ்லாமியரான அஃப்தாப் புரேவல் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார் என்றால், அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாண துணை ஆளுநர் தேர்தலிலும் மற்றொரு இந்திய வம்சாவளி இஸ்லாமியரான கஜாலா ஹாஷ்மி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வர்ஜீனியா மாகாண ஆளுநராக அபிகயில் ஸ்பான் பர்கர், நியூ ஜெர்சி ஆளுநராக மிகி ஷெரில் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இருவருமே ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

மம்தானியின் வெற்றிக்கு மூன்று காரணங்களைக் குறிப்பிடலாம். நியூயார்க் என்பது உலகில் பல பகுதிகளில் இருந்தும் குடியேறிய இனச் சிறுபான்மையினர்களை வரவேற்று ஏற்றுக்கொண்ட நகரம். உழைக்கும் வர்க்கத்தினர், இனச் சிறுபான்மையினர், அமெரிக்க அரசியல் மீது வெறுப்புடையவர்கள் ஆகியோருக்குத் தனது தலைமையில் சமநீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையை மம்தானி ஏற்படுத்தியது முதல் காரணம்.

இரண்டாவதாக, வாடகை அதிகரிப்புக்குத் தடை, அனைவருக்கும் குழந்தைகள் பராமரிப்பு காப்பகம், இலவச பொதுப் போக்குவரத்து வசதி உள்ளிட்ட வாக்குறுதிகள் அடித்தட்டு மக்களையும், நடுத்தர வர்க்கப் பிரிவினரையும் மம்தானிக்கு ஆதரவுதரத் தூண்டின. 'அனைவரும் வாழத் தகுந்த நகரமாக நியூயார்க்கை மாற்றுவோம்' என்கிற வாக்குறுதி அவர்களைக் கவர்ந்தது.

மூன்றாவதாக, இளம் வாக்காளர்கள் மம்தானியை மாற்றத்தின் அடையாளமாகப் பார்த்தனர். அரசியல் எதிரிகள் அவரது வயதையும், அனுபவத்தையும் ஏளனம் செய்தது, ஒரு வகையில் இளைஞர்களை அவருக்குச் சாதகமாக ஈர்த்தது. தனது சமூக ஊடகப் பிரசாரத்தின் மூலம் மட்டுமல்லாமல், இந்திய பாணியில் அவர் நியூயார்க் நகரத்தின் பல பகுதிகளிலும் நடத்திய 'பாத யாத்திரையும்', ரோட் ஷோக்களும் ஆறே மாதங்களில் அவரை மக்களிடையே பிரபலமானவராக மாற்றின.

குடியேற்றத்துக்கும், பாலஸ்தீனத்துக்கும் ஆதரவான, வாரிசு அரசியலுக்கும், கோடீஸ்வரர்களுக்கும் எதிரான மம்தானியின் இடதுசாரி அரசியல் இளைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், அனைத்துப் பிரிவினர் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவுதான், அவரது நியூயார்க் மேயர் தேர்தல் வெற்றி.

நியூயார்க் மேயர் தேர்தல் முடிவும், ஏனைய ஆளுநர் தேர்தல் முடிவுகளும் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்த மக்களின் அதிருப்தியின் வெளிப்பாடு என்று கொள்வதில் தவறில்லை. அவரது குடும்பத்தினரின் அரசியல் தலையீடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால், டிரம்ப்புக்கான ஆதரவு குறைந்து வருகிறது என்பது உண்மை. ஆனால், அதுவே மம்தானியை தேசிய அளவிலான தலைவராக உயர்த்துமா, ஜனநாயகக் கட்சியின் ஆதரவை அதிகரிக்குமா என்பதையெல்லாம் இப்போதே கூறிவிட முடியாது.

தில்லியில் அரவிந்த் கேஜரிவாலின் திடீர் அரசியல் பிரவேசமும், வெற்றியும் போலத்தான் ஸோரான் மம்தானியின் வெற்றியையும் இப்போதைக்கு நாம் பார்க்க வேண்டும். வெள்ளை மாளிகையைப் பகைத்துக்கொண்டும், நிதியாதாரம் இல்லாமலும் நியூயார்க் நகர மேயராக எந்தவித வாக்குறுதியையும் அவரால் நிறைவேற்ற முடியாது. நிறைவேற்ற அதிபர் டிரம்ப் அனுமதிக்க மாட்டார்.

கடந்த ஆண்டு அதிபர் டிரம்ப்பின் அலையால் வீழ்ச்சி அடைந்த ஜனநாயகக் கட்சி வர்ஜீனியா, நியூஜெர்சி வெற்றிகள் மூலம் மீண்டெழத் தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில், இந்த வெற்றிகளைச் சுட்டிக்காட்டி அதிபர் டிரம்ப் குடியேற்றத்துக்கு எதிரான தனது குரலை மேலும் உயர்த்த மாட்டார் என்பது என்ன நிச்சயம்?

பராக் ஒபாமா என்கிற கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் அதிபரானதும், கமலா ஹாரிஸ் என்கிற இந்திய அமெரிக்கர் துணை அதிபரானதும்தான், அதிபர் டிரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் செல்வாக்குப் பெறக் காரணமாக அமைந்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!

ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!

அங்கம்மாள் டீசர்!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

SCROLL FOR NEXT