மத்திய வேளாண் அமைச்சகம் ’விதைகள் சட்டம் 2025'-க்கான வரைவு மசோதாவை அண்மையில் (நவ. 13) வெளியிட்டு அதுகுறித்து பொதுமக்கள் கருத்தை டிசம்பர் 11-க்குள் கோரியுள்ளது.
இதற்கு முன்பு, இரண்டு முறை-ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கடந்த 2004-ஆம் ஆண்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் 2019-ஆம் ஆண்டும், புதிய "விதைகள் சட்டம்' கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பின்னணியில் இப்போதைய விதைகள் சட்ட மசோதா வெளியிடப்பட்டிருப்பது வரவேற்புக்கும், விமர்சனத்துக்கும் ஒருசேர வழிகோலியுள்ளது.
புதிய மசோதாவில் விவசாயிகளுக்குச் சாதகமான பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மகசூல் இழப்பால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க விதைகளின் தரம், ரகம் மற்றும் முளைப்புத் திறனை உறுதிப்படுத்தும் வகையில் வணிக ரீதியில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான விதைகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். விதை குறித்த அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்ளும் வகையில் பொட்டலங்களின் மீது விரைவு எதிர்வினை குறி (க்யூ}ஆர் கோட்) குறிக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் விற்பனையாளர்களின் பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாது விநியோக சங்கிலியைத் தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும். பொதுவாக சந்தையில் விற்கப்படும் போலியான மற்றும் தரமற்ற விதைகளால் மகசூல் இழப்பு ஏற்படுவதுண்டு. தற்போதைய "விதைகள் சட்டம்}1966' }இல் தீர்வு
இல்லாத இந்தப் பிரச்னைகளிலிருந்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய சட்ட வரைவு மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிர் வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் சட்டம் 2001}இன் படி, விதைகளைச் சேமித்து வைக்கவும், பயன்படுத்தவும், மாற்றிக் கொள்ளவும், வணிக இலச்சினை இல்லாமல் விற்பனை செய்துகொள்ளவும் விவசாயிகளுக்கு உரிமை உண்டு. தற்சார்பு மற்றும் உள்ளூர் விதை ரகங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. 2004, 2019 மசோதாக்கள் அந்த உரிமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் எதிர்ப்பு எழுந்தது. அந்த இரண்டு மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிராகவும், பெரும் வணிக நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பால் மசோதாக்கள் கைவிடப்பட்டன.
புதிய மசோதா விவசாயிகளுக்கான அந்த உரிமைகளை அப்படியே வழங்குவதால் பாதிப்பு இல்லை என்றே கருதலாம்.
விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க விதைகள் மற்றும் நடவுப் பொருள்களின் தரத்தை ஒழுங்குபடுத்துதல், போலி மற்றும் தரமற்ற விதைகள் விற்பனையைத் தடுப்பது, நியாயமான விலையில் உயர்ரக விதைகள் கிடைக்கச் செய்வது, விதை விற்பனையாளர்கள் இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்ய ஏதுவாக சிறு தவறுகளுக்கு குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் தடுப்பது உள்ளிட்ட ஷரத்துகள் இடம்பெற்றுள்ளது வரவேற்புக்குரியவை.
அதேவேளையில், போலி மற்றும் தரமற்ற விதைகளால் ஏற்படும் மகசூல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க நிறுவனங்களைப் பொறுப்பாக்குவதும் கட்டாயம். சிறு குற்றங்களுக்கு முதலில் ரூ.1 லட்சம் அபராதமும், தவறுகள் தொடர்ந்தால் ரூ.2 லட்சம் வரையில் அபராதமும், பெரிய குற்றங்களுக்கு முதலில் ரூ.10 லட்சமும், தவறுகள் தொடர்ந்தால் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கலாம். உரிமம் ரத்து செய்யப்படுவது அல்லது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவது உள்ளிட்ட அதிகபட்ச தண்டனைகளும் வழங்கலாம்; தவறில்லை. போலி மற்றும் தரமற்ற விதை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வேளாண் அமைச்சகம் அடிக்கடி கூறி வருகிறது. ஆனால், புதிய மசோதாவில் அப்படிப்பட்ட கடுமையான தண்டனைகளுக்கான ஷரத்து எதுவும் இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் விதைகள் விநியோகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த புதிய சட்டம் வழிவகுக்கும் என மசோதாவில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், வெளிநாடுகளில் உள்ள பல புதிய பயிர் ரகங்களின் விதைகளை இறக்குமதி செய்துகொள்வதற்கு ஏதுவாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்பதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது. இது விதைகள் வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கக்கூடும் என்கிற நியாயமான அச்சத்தை எழுப்புகிறது.
இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகளை சந்தையில்தான் கொள்முதல் செய்கின்றனர். அவ்வப்போது விதைத் தட்டுப்பாடு நிலவுவதும் உண்டு. விதைகளை வீடுகளில் பாதுகாத்து வைத்துப் பயன்படுத்தும் விவசாயிகள் மிகவும் குறைவு. எனவே, விதை விற்பனை பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றால் செயற்கையான தட்டுப்பாடு, அதன் மூலம் விலையேற்றம் என விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் எழலாம்.
விதைகளை விற்க விவசாயிகளுக்கு தடை இல்லை என்பதால், விவசாயிகளின் போர்வையில் நிறுவனங்கள் விதை விற்பனை செய்யலாம். எனவே, அதில் யார் விவசாயி என்பதற்கான வரையறை அவசியம். பன்னாட்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கினால்தான் விவசாயிகளை மட்டுமின்றி உள்ளூர் ரகங்களையும் பாதுகாக்க முடியும்.
சந்தடிச் சாக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் மரபணு மாற்றம் மற்றும் திருத்தப்பட்ட விதைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யாமல் தடுக்கவும் உரிய விதிமுறைகளை மசோதாவில் சேர்க்க வேண்டியது அவசியம். அப்போதுதான் மசோதாவில் கூறியுள்ளபடி விவசாயிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.