ஜனநாயகத்தில் தேர்தல் என்றால் அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடம் பரப்புரை செய்து வாக்கு சேகரிக்கும் காலம் மாறி இப்போது இலவசங்களை மையப்படுத்தி தேர்தலைச் சந்திப்பதிலேயே முனைப்புக் காட்டுகின்றன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஐந்தாறு மாதங்களே இருக்கும் நிலையில் களம் இப்போதே இலவச அறிவிப்புகளால் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்ட மக்களை உள்ளரங்கு ஒன்றில் அண்மையில் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றால் அனைவருக்கும் நிரந்தர வீடு; வீட்டுக்கு ஒரு இரு சக்கர வாகனம், பட்டப் படிப்பு, குடும்பத்துக்கான நிரந்தர வருமானத்துக்கு வேலைவாய்ப்பு என்பதோடு மேலும் பல அறிவிப்புகளை அங்கு கூடியிருந்தவர்களின் மிகுந்த ஆரவாரத்துக்கிடையே அறிவித்துள்ளார்.
இத்தகைய இலவசங்களைத் தனது முந்தைய திரைப்படங்களில் விமர்சித்தவர், இப்போது புதிதாக ஏற்றுக்கொண்டிருக்கும் அரசியல் வேஷத்துக்காக புதுவசனம் பேசத் தொடங்கியிருப்பதில் வியப்பில்லை. அரசியல்வாதிகள் நடிக்கும்போது, நடிகர்கள் அரசியல் வேஷமேற்கக் கூடாதா என்ன?
தமிழ்நாட்டில் 1950-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கல்வி, மதிய உணவு போன்றவற்றிலிருந்து இந்த வரலாறு தொடர்வதாகக் கொள்ளலாம். ஆனால், அவை வாக்கு வங்கியை உள்நோக்கமாகக் கொண்டவை அல்ல. அன்றைய தலைவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டின் வளர்ச்சிக்கான பெரிய திட்டங்களை செயல்படுத்தினர். உபரியாக சிறுசிறு இலவசங்களையும் இணைத்துக் கொண்டனர். அவை அத்தியாவசிய தேவையைக் கருத்தில் கொண்டவை என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்றைய இலவச அறிவிப்புகள் எல்லாம் வாக்கு வங்கியை உள்நோக்கமாகக் கொண்டவையே என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தொலைநோக்கு திட்டங்கள் எல்லாம் இரண்டாம்பட்சமாகவே இருக்கின்றன. எந்தவித திட்டமிடலோ, பொருளாதார அடிப்படையோ இல்லாமல் 'மக்கள் நல்வாழ்வு' என்கிற பெயரில் வாக்குகளுக்கு வீசப்படும் வலைகளாகத்தான் இவற்றை நாம் பார்க்க முடிகிறது.
1967 தேர்தலில் அறிஞர் அண்ணா 'ரூபாய்க்கு 3 படி (அரிசி) லட்சியம்; ஒரு படி நிச்சயம்' என்று அறிவித்து கண்ட வெற்றியே இதற்கெல்லாம் முன்னோடி என்று கொள்ளலாம். அதைத் தொடர்ந்து 1971-இல் முதல்வரான கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் இலவசங்கள் வரிசைகட்டத் தொடங்கின. அதன் பிறகு திமுகவும், அதிமுகவும் தேர்தல் வெற்றிக்காக இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டி, மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, இலவச சைக்கிள், மடிக் கணினி, தாலிக்கு தங்கம் என ஒன்றையொன்று விஞ்சும் வகையில் இலவசங்களை வாரி வழங்கின.
கடந்த 2021 தேர்தல் பிரசாரத்தின்போது, மகளிருக்கு மாதம் ரூ. 1,000, இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகளை திமுக அறிவித்து வெற்றி பெற்றது. அந்த 'திராவிட மாடல்'இலவசங்களை கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ஹரியாணா, தில்லி, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வெற்றி 'இலவச மாடலாக' அங்கீகரித்து நிலை நிறுத்தி இருக்கின்றன.
எஸ். சுப்பிரமணியம் -எதிர்- தமிழக அரசு தொடர்பான வழக்கு (2013) ஒன்றில், இலவச அறிவிப்புகள் தேர்தல் நடைமுறைகளைச் சீர்குலைப்பதாக இருக்கக் கூடாது என்றும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி போட்டியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம வாய்ப்பை இலவச கலாசாரம் பாதிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நீதிமன்றம் ஆலோசனைதான் வழங்க முடியும். சட்டம் இயற்றவா முடியும்?
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு வாக்காளர்களுக்கு இலவசமாக பொருள்களையோ, பணத்தையோ கொடுப்பதைத்தான் தேர்தல் ஆணையம் தடுக்கிறது. இலவசங்களைத் தடுப்பது குறித்து பொதுவெளியில் அவ்வப்போது விவாதங்கள் எழுந்தாலும்கூட அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் இதுவரையில் இல்லை. கடந்த 1974 முதல் 2010 வரையில் தேர்தல் சீர்திருத்த விதிமுறைகளை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட 6 குழுக்களில் எதுவும் இலவச அறிவிப்புகளை தடுப்பது குறித்து பரிந்துரைக்கவில்லை.
சட்ட ஆணையம் கடந்த 2015 மார்ச்சில் சமர்ப்பித்த 255-ஆவது அறிக்கையில் தேர்தல் நடைமுறையில் தற்காலத்துக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய பல்வேறு சீர்திருத்தங்களை விரிவாகப் பேசுகிறது. ஆனால், இலவச கலாசாரத்தை ஒழிப்பதற்கான பரிந்துரைகள் எதுவும் கூறப்படவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது.
இலவச கலாசாரம் மாநிலத்தின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது என நிபுணர்கள் அடிக்கடி சுட்டிக் காட்டுகின்றனர். தமிழ்நாட்டின் மொத்த கடன் நிகழ் நிதியாண்டின் இறுதியில் சுமார் ரூ. 9.30 லட்சம் கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எல்லையற்ற இலவசங்கள் மாநிலத்தின் நிதிநிலையைப் பாதிக்கும்போது கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்புகள், வளர்ச்சித் திட்டங்கள், நீண்ட கால முதலீடு போன்றவற்றுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்பது ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் அறியாதது அல்ல. ஆளத் துடிக்கும் கட்சிகளும் அறிந்து கொள்ள வேண்டும்.
போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவிப்பது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்பதை அரசியல் கட்சிகள் உணர்ந்து செயல்பட வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்தால் போதும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள், வருங்காலம் குறித்து ஏன் சிந்திக்கப் போகிறார்கள்? வாக்காளர்கள் இதுகுறித்து சிந்திக்காமல் இருப்பதுவரையில் இலவசங்கள் தொடரும் என்பது மட்டுமல்ல, தேர்தலுக்குத் தேர்தல் அதிகரிக்கும். கூடவே மாநிலத்தின் கடன் சுமையும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.