தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2023-க்கான தனது வருடாந்திர அறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டிருக்கிறது.
ஒன்றரை ஆண்டுகள் தாமதமாக அறிக்கை வெளியானதற்கு வழக்கம்போல அரசுத் துறைகள் மெத்தனமாகச் செயல்பட்டதுதான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
ஆண்டுதோறும் எல்லா மாநிலங்களும் ஒன்றிய பிரதேசங்களும், 53 பெருநகர மாநகராட்சிகளும் தங்களது புள்ளிவிவரங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும். அதைச் சரிபார்த்து தொகுத்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வருடாந்திர அறிக்கை வெளியிடும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு காலதாமதம் ஏற்பட்டதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவிக்கு வந்ததுமுதல் எண்மத் தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை வழங்கி இருக்கிறது. அப்படி இருக்கும்போது குற்றங்கள் குறித்த தகவல்களை முறையாக ஆவணப்படுத்தவும், வெளியிடவும் தாமதமாவதும் ஏன் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. திட்டமிடலில் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் கொள்கைகளை வகுக்க முடியும். அதனால்தான் ஒன்றரை ஆண்டுகள் தாமதம் என்பது மிகப்பெரிய குறைபாடு என்று சொல்லத் தோன்றுகிறது.
2023-க்கான அறிக்கையில், முன்புபோலவே சிலவகைக் குற்றங்கள் அதிகரிப்பது இந்த முறையும் வெளிப்படுகிறது. காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் 2022-ஐவிட 2023-இல் 7.2% அதிகம், 2022-இல் ஒரு லட்சம் பேருக்கு 422.2 என்ற அளவில் குற்ற விகிதம் காணப்பட்டது என்றால், 2023-இல் அதுவே 448.3 என்று அதிகரித்திருக்கிறது.
நகர்ப்புறக் குற்றங்கள் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. 2023-இல் நகரங்களில் பதிவான குற்றங்கள் 10.6% அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது; நகரங்களில் குற்றம் அதிகரிப்பது என்பது மாஃபியா கும்பல்களும், சட்டவிரோத செயல்பாடுகளும் அதிகரிப்பதன் வெளிப்பாடு.
மகளிருக்கு எதிரான குற்றங்கள் மிகப் பெரிய அளவில் பதிவாகவில்லை என்று தெரிகிறது. கணவன்மார்கள், கணவரின் உறவினர்கள் தொடர்பான மகளிருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பதிவுகள் அவற்றில் மூன்றில் ஒரு பகுதி. மொத்தமாகப் பார்க்கும்போது, மகளிருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பதிவுகள் 0.7% மட்டுமே அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.
அதிர்ச்சி அளிப்பதாக இருப்பது அதிகரித்துவரும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் பாலியல் தொந்தரவுகளும்தான். 2022 உடன் ஒப்பிடும்போது 2023-இல் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 9.2 % அதிகரித்திருக்கிறது. அவற்றில் போக்úஸô எனப்படும் பாலியல் தொடர்பான குற்றங்கள் 32.2% .
மகளிருக்கும், குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகள் தடுக்கப்படுவது முன்னுரிமை பெற வேண்டும். பெரும்பாலான வழக்குகள் இவற்றில் பதிவு செய்யப்படுவது இல்லை என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் மகளிருக்கும், குழந்தைகளுக்கும் எதிரான தாக்குதல்கள் மிகப் பெரிய அளவில் நடைபெறுவதை நாம் உணரலாம்.
2023 அறிக்கையின்படி சைபர் குற்றங்கள் முந்தைய ஆண்டைவிட 31.2% அதிகரித்திருக்கிறது. 2022-இல் ஒரு லட்சம் பேருக்கு 4.8 குற்றங்கள் என்றால் 2023-இல் அதுவே 6.2% என்று அதிகரித்திருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்த அதிகரிப்பு குறித்த தகவலை மிகத் தாமதமாக வழங்குகிறது என்பதுதான் வருத்தமளிக்கிறது. ஏற்கெனவே இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் தனது இணையதளத்தின் மூலமும் ஏனைய வழிமுறைகள் மூலமும் அவ்வப்போது புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. அப்படி இருக்கும்போது ஆவணக் காப்பகம் தாமதமாக ஏன் செயல்படுகிறது என்கிற கேள்வியை எழுப்பத் தோன்றுகிறது.
இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகளின்படி 2024-இல் 22.68 லட்சம் சைபர் குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதாவது, 2023-ஐ விட 42% அதிகரித்திருக்கின்றன.
சைபர் குற்றங்கள் மூலம் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு 2023-ஐவிட 206% அதிகம். உத்தேசமாக 2024-இல் ரூ.22,845.73 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
அகில இந்திய அளவில் தேசிய சைபர் குற்ற இணையதளத்தின் மூலம் பெறப்பட்ட 1.9% புகார்களில் மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தமாக 2023-இல் அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் 407 மட்டுமே. அதாவது, பெரும்பாலான சைபர் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதில்லை; விசாரிக்கப்படுவதில்லை; ஆவணப்படுத்தப்படுவதும் இல்லை; தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் வருடாந்திர அறிக்கையிலும் இடம்பெறுவதும் இல்லை.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை விரைவாகவும், தெளிவாகவும், துல்லியமாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் ஒவ்வோர் ஆண்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். அதற்கு ஒத்துழைக்காத மாநில அரசுகள் குறித்த விவரங்களைப் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும்.
தரவுகள் இல்லாமல் கொள்கை முடிவுகள் எடுக்க முடியாது; கொள்கை முடிவுகள் எடுக்காதவரை நடவடிக்கை எடுக்க முடியாது; நடவடிக்கை எடுக்காவிட்டால் குற்றங்கள்அதிகரிக்கும்; குறையாது.
இதையெல்லாம் அதிகார வர்க்கத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இனியாவது ஆண்டுதோறும் தவறாமல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் விரைந்து செயல்பட்டு தனது துல்லியமான அறிக்கையை அனைத்துத் தரவுகளுடனும் வெளியிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.