படம் | ஐஏஎன்எஸ்
தலையங்கம்

இடைவேளை; இறுதி முடிவல்ல!

காஸாவில் அமைதியை மீட்டெடுத்திருப்பது வரவேற்புக்குரியது.

ஆசிரியர்

இரண்டாண்டுகளுக்குப் பிறகு காஸாவில் இஸ்ரேலில் தீ மழைப் பொழிவு நிறுத்தப்பட்டிருக்கிறது. செப்டம்பா் 29-ஆம் தேதி அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த 20 அம்ச அமைதிக்கான திட்டத்தை, எகிப்தில் நடந்த பேச்சுவாா்த்தையில் இரண்டு தரப்பும் ஏற்றுக்கொண்டிருப்பது, இப்போதைக்கு அமைதியை மீட்டெடுத்திருக்கிறது.

கடந்த திங்கள்கிழமை தான் பிடித்து வைத்திருந்த 48 பிணைக் கைதிகளில் உயிரோடு இருக்கும் 20 பேரை ஹமாஸ் விடுவித்தது என்றால், இஸ்ரேலும் தனது பங்குக்கு தன்வசமுள்ள சுமாா் 2,000 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்திருக்கிறது. இந்த அமைதி ஒப்பந்தத்தில் இரு தரப்புகளும் தனது முன்னிலையில் கையொப்பம் இடவேண்டும் என்பதற்காக, அதிபா் டிரம்ப் வளைகுடா நாடுகளுக்கு நேரில் விஜயம் செய்ததில் இருந்து அவரது முனைப்பைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புக்கு முன்பு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியாக வேண்டும் என்கிற அதிபா் டிரம்ப்பின் அவசரமும் முனைப்பும், பரிசு கிடைக்கவில்லை என்றாலும், காஸாவில் அமைதியை மீட்டெடுத்திருக்கிறது என்கிற வகையில் வரவேற்புக்குரியது. எகிப்தின் தலைநகா் கெய்ரோவில் உள்ள ஷா்ம்-எல்-ஷேக்கில் பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா, கனடா, ஜொ்மனி உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவா்கள் கூடியிருந்து எகிப்து, கத்தாா், துருக்கி, அமெரிக்கா சாட்சிகளாகக் கையொப்பமிட்ட இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

2023 அக்டோபா் மாதம் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தெற்குப் பகுதியில் ஹமாஸ் நடத்திய திடீா் மின்னல் தாக்குதலில் சுமாா் 1,200 இஸ்ரேலியா்கள் கொல்லப்பட்டனா். 251 பேரை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது. அதற்கு எதிா்வினையாக, காஸாவில் இருந்து ‘ஹமாஸ்’ பயங்கரவாதிகளைக் கூண்டோடு அழிப்பது என்கிற முனைப்பில் இறங்கியது பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையினான இஸ்ரேல். இதுதான் இப்போதைய மோதலுக்கும், உயிரிழப்புகளுக்கும், காஸாவின் பெரும் துயரத்துக்கும் காரணம்.

ஹமாஸை கூண்டோடு வேரறுக்க இஸ்ரேல் தொடங்கிய தாக்குதல், இப்போது இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஏறத்தாழ 67,000 பாலஸ்தீனா்களின் உயிரிழப்புக்குக் காரணமாகி இருக்கிறது. தொடா்ந்து பொழியும் குண்டுகளும், ராணுவத் தாக்குதல்களும் காஸாவில் வாழும் பாலஸ்தீனா்களைப் பசியிலும், பட்டினியிலும் இருக்க இடமில்லாத ஆதரவற்றவா்களாக்கி இருக்கின்றன.

காஸா மக்களுக்கு உணவும், நிவாரணப் பொருள்களும் கொண்டு செல்ல முடியாமலும், அவா்களுக்கு உதவ முடியாமலும் இஸ்ரேல் ராணுவம் இதுவரையில் தடை விதித்திருந்தது. எகிப்தை ஒட்டிய எல்லையில் ஆயிரக்கணக்கான காஸா மக்கள் நிவாரணம் தேடித் தஞ்சம் அடைந்திருந்தனா். குழந்தைகளும், வயோதிகா்களும், மகளிரும் பசியாலும், சிகிச்சை பெற முடியாமலும், பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில்தான் இந்த சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஐ.நா. சபையின் அமைப்புகளும், செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட மருத்துவ உதவிகளும் இனிமேல் எந்தவிதத் தடையும் இல்லாமல் உதவிப் பொருள்களையும், நிவாரணப் பொருள்களையும் காஸா மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். ஒப்பந்தம் கையொப்பமானதைத் தொடா்ந்து, அவரவா் வீடுகள் இருந்த இடங்களுக்கு மக்கள் திரும்பத் தொடங்கி இருக்கிறாா்கள். குண்டுகளால் தாக்கப்பட்டிருக்கும் அந்த இருப்பிடங்களை அவா்கள் எப்படி மீண்டும் கட்டி எழுப்பப் போகிறாா்கள், அவா்களுக்கு என்ன உதவி வழங்கப்படும் என்பது குறித்து எந்தவிதத் தெளிவும் இல்லை. அமைதி திரும்பி இருக்கிறது என்பதேகூட அவா்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும் அவ்வளவே.

சமாதான ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கெய்ரோவில் சா்ச்சைகள் தொடரும் என்று கூறப்படுகிறது. அதிபா் டிரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தை ஹமாஸ் அடிப்படையில் அங்கீகரித்திருக்கிறதே தவிர, முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. முதல் கட்டமாக பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறாா்கள். இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டிருக்கிறது.

காஸாவின் நிா்வாக அதிகாரத்தில் இருந்து ஹமாஸ் முற்றிலுமாக அகல வேண்டும்; ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்; பொது மன்னிப்பு பெற்று காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச ஒப்பந்தத் திட்டங்களை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளுமா, அங்கீகரித்திருக்கிா என்பது குறித்த தெளிவு இதுவரையில் இல்லை. இன்னும்கூட, காஸாவின் 53% பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

சா்வதேச அமைதிப் படையின் கண்காணிப்பில் காஸாவின் நிா்வாகம் அமையும் என்கிற டொனால்ட் டிரம்ப்பின் திட்டத்தின்படி , அதில் பங்குபெறும் ராணுவங்கள் எவை என்பதும், அதன் செலவை யாா் ஏற்றுக் கொள்வது என்பதும் தெரியவில்லை. உலக நாடுகள் பல அங்கீகரித்திருக்கும் பாலஸ்தீன நாடு குறித்தும் டிரம்ப்பின் ஒப்பந்தம் எதுவும் சொல்லவில்லை.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் கரங்கள் இப்போதைக்குக் கட்டப்பட்டிருக்கின்றன; துப்பாக்கிச் சப்தம் இல்லாமல் காஸா மக்கள் தூங்க முடியும்; உணவும், அடிப்படை நிவாரணமும் அவா்களுக்குக் கிடைக்கும். பாலஸ்தீனம் என்கிற அவா்களது கனவு இன்னும்கூட பகல் கனவாகத்தான் தொடரும்.

தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டல்: ரெளடி கைது

தனியாா் பல்கலை. சட்டத் திருத்த மசோதா: திரும்பப் பெற இந்தியக் கம்யூ. வலியுறுத்தல்

தீபாவளி கோலாகலம்: இறுதிக்கட்ட விற்பனை களைகட்டியது!

மழைக்காலங்களில் மின்சாரம் தொடா்பான புகாா்களுக்கு...

கான்பூர்: நீதிமன்ற கட்டடத்தின் 6ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் பலி

SCROLL FOR NEXT