நாட்டிட்டிலேயே முதல்முறையாக மூத்த குடிமக்களுக்கான ஆணையத்தை கேரள அரசு அமைத்துள்ளது. மாநில சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட கேரள மூத்த குடிமக்கள் ஆணைய சட்டம் 2025-இன்படி இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யான கே.சோமபிரசாதை தலைவராகக் கொண்ட இந்த ஆணையத்தில் ஏ.ராமகிருஷ்ணன், இ.எம்.ராதா, கே.என்.கே.நம்பூதிரி, லோபஸ் மேத்யூ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூத்த குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், அவர்கள் புறக்கணிக்கப்படுவது, சுரண்டப்படுவது, ஆதரவற்று கைவிடப்படுவது போன்ற இன்னல்களை எதிர்கொள்வதற்கான தீர்வுகளை இந்த ஆணையம் வழங்கும் என்று கேரள உயர்கல்வி மற்றும் சமூக நீதித் துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான கொள்கைகளை இந்த ஆணையம் பரிந்துரைக்கும்; இழிவுபடுத்தப்படுதல், சொத்துப் பிரச்னை போன்றவற்றில் சட்ட உதவி அளிக்கும்; மூத்த குடிமக்களின் அறிவையும் அனுபவத்தையும் சமூகத்துக்குப் பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்தும்; மூத்த குடிமக்களின் உரிமைகள், குடும்பத்தினரின் பொறுப்புகள் குறித்து ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
சுதந்திரத்துக்குப் பிறகான 79 ஆண்டுகளில் சுகாதாரக் கட்டமைப்பு ஓரளவுக்கு மேம்பட்டுள்ளதால் இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 1951-ஆம் ஆண்டில் 1.98 கோடியாக இருந்த 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2001-ஆம் ஆண்டில் 7.6 கோடியாக இருந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2026-ஆம் ஆண்டில் 17.3 கோடியாக இருக்கும் என்று மத்திய அரசின் மதிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 40-50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிறிது சிறிதாக சிதைந்து இப்போது குடும்பம் என்றாலே கணவன், மனைவி, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என்றே சுருங்கிவிட்டது.
ஒருவேளை சேர்ந்து இருந்தாலும் மேம்பட்ட வாழ்க்கை வசதி தேவைகள் காரணமாக பெற்றோர்களை தேவையில்லாத பாரமாகக் கருதும்போக்கு அதிகரித்து வருகிறது. அவர்கள் இகழ்ச்சிக்கு உள்ளாகின்றனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த செப். 1-ஆம் தேதி நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்த 80 வயது முதியவர் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை விசாரித்தபோது, தனக்குச் சொந்தமான 20 சென்ட் அளவிலான 8 கடை கள், வீடு மற்றும் 4 ஏக்கர் விவசாய நிலத்தை தனது மகன் எழுதி வாங்கிக் கொண்டு தன்னைச் சரிவரக் கவனிப்பதில்லை என்று கூறியுள்ளார்; இது விதிவிலக்கான சம்பவம் அல்ல; நாடு தழுவிய அளவில் இதுபோன்ற புகார்கள் பரவலாக அதிகரித்து வருகின்றன.
உணவுப் பழக்கம் உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள், மதுப் பழக்கம் போன்றவற்றால் 60 வயதுக்குள்ளாகவே பலரும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுப் பிரச்னை, பார்வை மங்குதல் போன்ற பலவிதமான நோய்களுக்கு உள்ளா கிறார்கள். மருத்துவச் செலவு பல லட்சங்களைத் தாண்டுவதால் முதியவர்கள் குடும்பத்துக்குப் பாரமாகக் கருதப்படுகின்றனர்.
ஓய்வூதியம் என்பது இன்னமும் நாட்டில் கோடிக்கணக்கானோருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. அதனால், சாதாரண செலவுகளுக்குக்கூட வாரிசுகளை அண்டி வாழ வேண்டிய நிலையே உள்ளது. நோய், குடும்பத்தினரின் செயல்பாடுகள் காரணமாக முதியவர்கள் பலரும் விரக்திக்கு உள்ளாகின்றனர்.
தனியாக வசிக்கும் முதியவர்கள் பணத்துக்காக குறிவைத்துக் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட் டம், பல்லடம் அருகே முதிய தம்பதி, அவர்களது மகன் ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பரிலும், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே முதிய தம்பதி கடந்த ஏப்ரலிலும் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் இந்தியா முழுவதுமே அதிகரித்து வருகின்றன.
மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோன்று, மாநில அரசுகளின் பங்களிப்புடன் மூத்த குடிமக்களுக்கு இந்திரா காந்தி தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ரூ. 200 முதல் ரூ. 1000 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. மாநில அரசுகள், நகராட்சி அமைப்புகள் மூலம் 'அடல் வயோ அப்யுதய் யோஜனா' என்ற திட்டத்தைச் செயல்படுத்தினாலும் அது இன்னும் பரவலாக பொதுமக்களைச் சென்றடையவில்லை. அரசுத் துறை வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி சேவை வழங்குகின்றன. ஓய்வூதியம் பெறுவதில் காணப்படும் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. தமிழக அரசின் வீடுதேடி மருத்துவம், வீடுதேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் 'தாயுமானவர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூத்த குடிமக்களின் மீதான அரசின் அக்கறையை வெளிப்படுத்துகின்றன.
70 வயதான மூத்த குடிமக்களுக்கான பிரதமர் காப்பீட்டுத் திட்டமும் (ரூபாய் ஐந்து லட்சம்), பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டமும் முதியோர்களின் சிகிச்சைச் செலவையும், மருந்துகளுக்கான செலவையும் கணிசமாகக் குறைத்திருக்கின்றன. தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசு மருத்துவமனைகளில் முதியோருக்கான 'ஜெரியாட்ரிக்' பிரிவு இயங்குவது பெரிய அளவில் உதவியாக இருக்கிறது.
மாறியுள்ள வாழ்க்கைச் சூழலில் முதியோர் பராமரிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமாகியுள்ளது. கேரள அரசின் முன்னெடுப்பு, அறிவிப்புடன் நின்றுவிடாமல் ஆக்கபூர்வமாகக் கடைசி குடிமகன் வரை செயலாக்கம் பெற வேண்டும். மற்ற மாநிலங்களும் கேரளத்தைப் பின்பற்றி மூத்த குடிமக்களுக்கான ஆணையம் அமைக்க முற்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.