இந்திய ஹாக்கி அணியினர்.  PTI
தலையங்கம்

நம்பிக்கை கொடுக்கிறது!

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி, தான் இழந்த இடத்தையும் பெருமையையும் மீட்டெடுக்கும் முனைப்பில் இறங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆசிரியர்

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி, தான் இழந்த இடத்தையும் பெருமையையும் மீட்டெடுக்கும் முனைப்பில் இறங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிகார் மாநிலம், ராஜ்கிரில் கடந்த ஆக. 29-ஆம் தேதி தொடங்கி, செப். 7-ஆம் தேதி நிறைவடைந்த ஆடவருக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நான்காவது முறையாக சாம்பியனாகி மீண்டும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது இந்திய ஆடவர் அணி. இதன் மூலம் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, நடப்பு சாம்பியனான தென்கொரியாவை வீழ்த்தி நான்காவது ஆசிய கோப்பை கிரீடத்தை வென்றிருக்கிறது. கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் (2020 டோக்கியோ-2024 பாரீஸ்) வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி ஆசிய கோப்பை வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை போட்டியில் பங்குபெறும் தகுதியைப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1982-இல் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் தொடங்கின. இந்தப் போட்டியின் வெற்றி உலகக் கோப்பைக்கான தகுதியை வழங்குவதால் முக்கியத்துவம் பெறுகிறது. முதல் நான்கு ஆசியக் கோப்பைப் போட்டிகளிலும் இந்திய அணி இறுதிச் சுற்றுவரை சென்று கடைசியில் தோல்வியைத் தழுவியது. அதில் மூன்று முறை பாகிஸ்தானோடும், நான்காவது முறை தென்கொரியாவுடன் இறுதிச் சுற்றில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

21 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு 2003- இல்தான் முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா. 2007-இல் தென்கொரியாவை வென்று கோப்பையை தக்க வைத்தது என்றாலும்கூட அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆசிய கோப்பை போட்டிகளிலும் வெற்றி கைநழுவியது.

2017-இல் மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற இந்தியா இப்போது நான்காவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறது.

2003 ஆசிய கோப்பை வெற்றியைத் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள்; இரண்டு ஆசிய போட்டியில் தங்கப் பதக்கங்கள்; நான்கு ஆசியகோப்பை; ஐந்து ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை என்று இந்திய ஹாக்கி அணியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. கிரிக்கெட்டைப்போலவே ஹாக்கியிலும் இந்திய அணி சர்வதேச அளவில் கோலோச்சும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகவே தெரிகின்றன.

நடந்து முடிந்த ஆசியகோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா, தென்கொரியா, வங்கதேசம், சீனா, சீன தைபே, ஜப்பான், கஜகஸ்தான், மலேசியா ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில் தென்கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி சாய்த்தது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதல் இறுதி வரை தோல்வியே காணாமல் (6 வெற்றி, ஒரு டிரா) நிறைவு செய்த ஒரே அணி இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கடந்த 2023 செப். 24 முதல் அக். 6 வரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன், சீனாவில் கடந்த 2024 செப். 8 முதல் 17 வரை நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சாம்பியன், தற்போது பிகாரில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சாம்பியன் என ஒரே நேரத்தில் 3 போட்டிகளிலும் சாம்பியன் ஆன முதல் அணி என்ற பெருமையை இந்திய ஆடவர் அணி பெற்றுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் முதல் மூன்று போட்டிகளில் 22 கோல்கள் அடித்த இந்திய அணி இறுதி கட்டத்தில் 17 கோல்கள் அடித்தபோது இந்தியாவின் வெற்றி உறுதியானது. ஒன்றோ இரண்டோ வீரர்களை மட்டுமே சார்ந்திராமல் ஆல்ரவுண்டர்களான வீரர்களைக் கொண்ட அணியை கட்டமைத்திருப்பதுதான் இந்தியாவின் வெற்றிக்கு அடிப்படைக்காரணம்.

போட்டி நாயகன் அபிஷேக், சுக்ஜீத், மூத்த ஆட்டக்காரர் மன்பிரீத், சுமித், விவேக் சாகர் பிரசாத் போன்றோர் இந்திய அணியின் வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றினர். ஆறு கோல்கள் அடித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங்; நாலு கோல்கள் அடித்த தில்பிரீத்சிங், ஜக்ராஜ்சிங் ஆகியோரின் பங்களிப்புகள் தான் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணிகள்.

பிகாரில் நடைபெற்ற போட்டியில், தனது முதல் ஆட்டத்தில் சீனாவையும் (4-3), அடுத்த ஆட்டத்தில் ஜப்பானையும் (3-2) இந்திய அணி கடுமையாகப் போராடியே வென்றது. அதன் பிறகு, வலு குறைந்த கஜகஸ்தானை வென்ற பிறகே அணியின் ஆட்டம் வேகமெடுத்தது.

இந்தியா ஹாக்கியில் மீண்டும் சர்வதேச அளவில் கவனம் பெறுவதில் தமிழகத்தின் பங்களிப்பும் முன்புபோல அதிகரிக்க வேண்டும். 1980-இல் மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் தமிழகத்தின் பாஸ்கரன் தலைமையில்தான் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கிரிக்கெட் மோகம் காரணமாக தேசிய விளையாட்டான ஹாக்கியை புறக்கணிப்பது தகாது.

தடுப்பு அரண், எப்போது தாக்குதல் ஆட்டத்தை மேற்கொள்வது, பெனால்டி கார்னரை கோலாக்குவது, எதிரணிகளின் பலவீனங்களை சாதகமாக்குதல் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி சரியான உத்திகளை வகுத்தால் உலகக் கோப்பை போட்டியில் மீண்டும் இந்திய அணியால் இழந்த இடத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை பிகாரில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டி உணர்த்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT