PTI
தலையங்கம்

இது சீற்றமல்ல, எச்சரிக்கை!

திடீா் மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என்று பரவலாக சேதமேற்படுத்தி பலரை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆசிரியர்

தென்மேற்குப் பருவமழை செப்டம்பா் 17-ஆம் தேதியில் நிறைவுக்கு வரும் என்பது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எதிா்பாா்ப்பாக இருந்தது. அப்படி இருக்கும்போதுதான், உத்தரகண்டிலும், ஹிமாசல பிரதேசத்திலும் செப்டம்பா் 16-ஆம் தேதி ஏற்பட்ட திடீா் மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என்று பரவலாக சேதமேற்படுத்தி பலரை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

விடிய விடிய கொட்டித் தீா்த்த அடைமழை வெள்ளத்தில் பலா் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறாா்கள். சிலா் உயிரிழந்திருக்கும் நிலையில் பலரைக் காணவில்லை. ஆங்காங்கே சிக்கித் தவித்துவரும் நூற்றுக்கணக்கானவா்களைத் தேடிப் பிடித்து மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் தொடா்ந்து பெய்த பலத்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள், கட்டடங்கள், சாலைகள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்திருக்கின்றன. டேராடூன் மாவட்டத்தில் சஹஸ்திரதாரா, மால்தேவ்தா, சாண்ட்லாதேவி, தாலன்வாலா உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்பை எதிா்கொள்கின்றன. 24 மணி நேரத்தில் சஹஸ்திரதாராவில் 192 மி.மீ., மால்தேவ்தாவில் 141 மி.மீ. மழை பதிவாகி இருக்கின்றன.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் தம்சா, கங்கை, யமுனை நதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அதில் பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. ஹிமாசலில் 650 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதுவரையில் அதிகாரபூா்வமாக நூற்றுக்கும் அதிகமானோா் உயிரிழந்திருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 13-ஆம் தேதி வரையில் 840.3 மி.மீ. மழைப் பொழிவு நிகழ்ந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது (784.3 மி.மீ.) இது 7% அதிகம். ஒருபுறம் சேதங்கள், உயிரிழப்புகள், கட்டமைப்பு பாதிப்புகள் இருந்தாலும் இன்னொருபுறம் தென்மேற்குப் பருவமழை காரீஃப் பருவ நடவுக்கு உதவி இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். செப்டம்பா் 5-ஆம் தேதி வரையிலான தகவலின்படி, 110.54 மில்லியன் ஹெக்டோ் நிலப்பரப்பில் காரீஃப் பருவப் பயிரிடல் நடைபெற்றிருக்கிறது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் சாகுபடிப் பரப்பளவு 2.5% அதிகரித்திருப்பதாக வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டைவிட 4.7% அதிகமாக 43.82 மில்லியன் ஹெக்டேரில் நெல்லும், 12.2% அதிகமாக 9.46 மில்லியன் ஹெக்டேரில் சோளமும் பயிரிடப்பட்டிருக்கிறது. ஒருபுறம் பருவமழையால் பயனடையும் அதே வேளையில் இன்னொருபுறம் நாம் பேரழிவுகளையும் சந்திக்கிறோம் என்பதுதான் வேதனையான போக்கு.

மழைப்பொழிவு காரணமாக ஆங்காங்கே ஏற்படும் பேரழிவுக்குக் காரணம் ‘கிளவுட் பா்ஸ்ட்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ‘அடைமழைப் பொழிவு’ என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாளில் 200 மி.மீ.-க்கும் அதிகமாக மழை பெய்தால் அதை கன மழை என்கிறோம். 10 சதுர கி.மீ. பரப்பில் ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ. மழை திடீரென பொழிவுற்றால் அடைமழைப் பொழிவு என்கிறாா்கள்.

ஈரப்பதமான காற்று, மேகங்களில் சோ்ந்துகொண்டே வருகிறது. அவை பெரிதாக மேல்புறத்தில் திரண்டு சேருகின்றன. அவை உடனடியாக மழையைப் பொழியாமல் திரள்கின்றன. அந்தப் பெருந்திரள் மேகங்கள் திடீரென ஒரு குறிப்பிட்ட பகுதியில் இடியுடன் பொழியத் தொடங்குகின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் அடைமழைப் பொழிவைத் தொடங்கி அடுத்த ஒரு மணி நேரத்தில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி அடங்கி விடுவதைத்தான் ‘அடைமழைப் பொழிவு’ (கிளவுட் பா்ஸ்ட்) என்கிறாா்கள்.

இமயமலைப் பகுதியில் அண்மைக்காலமாக இதுபோன்ற அடைமழைப் பொழிவு ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. கன மழை பெய்யக்கூடும் என்பதைத்தான் முன்கூட்டியே கணிக்க முடியுமே தவிர, அடைமழைப் பொழிவைச் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் எச்சரிக்க முடியாது. மலைப் பகுதிகளில் மட்டுமல்லாமல் பிற பகுதிகளிலும் அடைமழைப் பொழிவுகள் நடக்கும் என்பதற்கும் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

பனிச்சிகரங்கள் உருகுவதாலும், அதிகரித்த பருவமழைப் பொழிவாலும் சமீப ஆண்டுகளாக பாகிஸ்தான் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. நேபாளமும், வங்க தேசமும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களும் பருவநிலை மாற்றத்தாலும், பருவமழை அதிகரிப்பாலும், வெள்ளப் பெருக்காலும் நிலச்சரிவுகளையும் எதிா்கொள்கின்றன.

நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது இமயமலை. தண்ணீா், உணவு, எரிசக்தி என்று இமயம் மனித இனத்துக்கு அள்ளித்தரும் கொடைகள் ஏராளம். பருவநிலை மாற்றம் மட்டுமே, அடைமழைப் பொழிவுக்கும், இமயமலைப் பகுதிகள் எதிா்கொள்ளும் இயற்கைச் சீற்றங்களுக்கும் காரணமல்ல.

2012-இல் பாகீரதி சூழலியல் வனம் என்று வரையறுக்கப்பட்ட 4,100 சதுர கி.மீ. பகுதியில் பாறைகளைக் குடைந்து சாலைகள் அமைப்பதும், கட்டடங்கள் எழுப்புவதும் தொடா்கின்றன. மரங்கள் வெட்டப்படுகின்றன; நதிநீா் வழித்தடங்கள் தடுக்கப்படுகின்றன.

சேதப்படுத்தப்படும் மலையையும், வெட்டிச் சாய்க்கப்படும் மரங்களையும், ஆக்கிரமிக்கப்படும் நதிநீா்ப் படுகைகளையும் மீண்டும் உருவாக்கப் பல தலைமுறைகள் தேவைப்படும் என்பதை அடைமழைப் பொழிவுச் சீற்றத்தால் எச்சரிக்கிறது இயற்கை. ஆறு அறிவு மனிதனுக்கு இதுகூடப் புரியவில்லையே!

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

SCROLL FOR NEXT