காஸாவில் இடிந்த கட்டடங்களுக்கு மத்தியில்... AP
தலையங்கம்

இப்படியே தொடா்ந்தால் எப்படி?

இனப் படுகொலை குற்றங்களைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் 1948-ஆம் ஆண்டு மாநாடு, ஐந்துவிதமான குற்றங்களை இனப் படுகொலை என வரையறை செய்திருக்கிறது.

ஆசிரியர்

காஸாவின் மிகப்பெரிய நகரமான காஸா சிட்டியில் பஞ்ச நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. நிபுணா் குழுவான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலவர வகைப்படுத்துதல் அமைப்பு (ஐபிசி) கடந்த ஆகஸ்ட் இறுதியில் அறிவித்தது, காஸாவில் இஸ்ரேல் திட்டமிட்ட இனப் படுகொலையை நடத்தி வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் நியமித்த மூவா் கொண்ட ஆணையம் செப்.16-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றைச் சமா்ப்பித்திருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு முன்னாள் தலைவா் நவி பிள்ளை தலைமையிலான இந்த மூவா் குழு அளித்த அறிக்கையில், காஸாவில் 2023, பிப்ரவரி முதல் இஸ்ரேல் நடத்திவரும் போா் ஹமாஸுக்கு எதிரானதாக இருந்தாலும், அது லட்சக்கணக்கான பொதுமக்களை திட்டமிட்டே கொல்லும் இனப் படுகொலையாக உள்ளது; சா்வதேச சமூகம் இதை முடிவுக்கு கொண்டுவரவும், இதற்குப் பொறுப்பானவா்களைத் தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இனப் படுகொலை குற்றங்களைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் 1948-ஆம் ஆண்டு மாநாடு, ஐந்துவிதமான குற்றங்களை இனப் படுகொலை என வரையறை செய்திருக்கிறது. அவற்றில், கொலைகள், உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக கடுமையாகத் தீங்கு விளைவித்தல், பாலஸ்தீனா்களை அழிப்பதற்கான திட்டமிட்ட வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்துதல், பிறப்புகளைத் தடுக்கும் நோக்கிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய நான்கு வகையான குற்றங்களை இஸ்ரேல் ராணுவமும், இஸ்ரேல் ஆட்சியாளா்களும் செய்துவருவதாக ஐ.நா. ஆணையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்கு எதிராக மனித உரிமை ஆா்வலா்களால் தொடா்ந்து முன்வைக்கப்படும் இனப் படுகொலை குற்றச்சாட்டுகளுக்கு வலு சோ்க்கும் வகையில் அமைந்த இந்த ஆய்வறிக்கையை, ‘திரிக்கப்பட்ட மற்றும் பொய்யான அறிக்கை’ என்று வழக்கம்போல இஸ்ரேல் நிராகரித்திருக்கிறது. இதன்மூலம் காஸாவில் மேற்கொண்டுவரும் தாக்குதலை நிறுத்த எந்த அழுத்தம் வந்தாலும் அதைச் சிறிதும் பொருட்படுத்தப் போவதில்லை என்கிற இஸ்ரேலின் எண்ணம் வெளிப்படுகிறது.

இனப் படுகொலை குற்றச்சாட்டு தொடா்பாக ஐ.நா. நியமித்த இந்த ஆணையமோ, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலோ இஸ்ரேல் மீது நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சா்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது வழக்குத் தொடுப்பதற்கு வேண்டுமானால் ஐ.நா. ஆணையத்தின் அறிக்கை பயன்படலாம். ஆனால், சா்வதேச நீதிமன்றத்தால் இதுவரை யாரும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதில்லை என்பதுதான் உண்மை.

ஏற்கெனவே போா்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சா் யோயாவ் கலான்ட் ஆகியோருக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஐ.நா. இனப் படுகொலை தடுப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீா்மானங்களுக்கு எதிராக இஸ்ரேல் செயல்படுவதாகவும், காஸாவில் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் சா்வதேச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் இஸ்ரேல் இதுவரை எதையும் பொருட்படுத்தவில்லை.

இப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் நியமித்த ஆணையத்தின் ஆய்வறிக்கையும் இஸ்ரேல் மீது உலகளாவிய தாக்கம் எதையும் ஏற்படுத்தப்போவதில்லை என்றாலும், உலக நாடுகளின் மனசாட்சியை இந்த ஆய்வறிக்கை உலுக்கியிருக்கிறது. பாலஸ்தீனா்களை அழிக்க கண்மூடித்தனமான தாக்குதலை நிறுத்த எந்த முயற்சியும் செய்யாமல் கண்களை மூடிக்கொண்டு இருப்பது நியாயம்தானா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தொடா்பாக ஐ.நா. பொதுச் சபையில் கடந்த செப்டம்பா் 14-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற்றது. சுதந்திரமான, இறையாண்மை கொண்ட இஸ்ரேல், பாலஸ்தீனம் என்கிற இரு நாடுகள் தீா்வை முன்வைக்கும் அந்த வாக்கெடுப்பில், ‘நியூயாா்க் பிரகடனம்’ என்ற அந்த தீா்வுக்கு ஆதரவாக இந்தியா, ரஷியா, சீனா, பிரிட்டன் உள்பட 142 நாடுகள் ஆதரவளித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 10 நாடுகள் மட்டுமே எதிராக வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 23 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இப்போதைய தரைவழித் தாக்குதலில் காஸா சிட்டி நகரம் குண்டுகளால் சல்லடையாக்கப்பட்டு வருகிறது. இருக்கும் இடம் இன்றி, உண்ண உணவின்றி, தப்பவும் வழியின்றி பெண்கள், குழந்தைகள் என அனைவரும் எந்த நேரமும் மரண பயத்துடன் வாழ்வது கொடுமையிலும் கொடுமை. தஞ்சமடைவதற்குக்கூட உருப்படியான ஒரு கட்டடமும் இல்லாத நிலை.

ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த அமா்வில், முக்கியமான உயா்நிலை விவாதம் செப்டம்பா் 23-ஆம் தேதி தொடங்குகிறது. உலக நாடுகளின் தலைவா்கள் உரையாற்றவிருக்கின்றனா்.

வழக்கம்போல கூடிக் கலையும் கூட்டமாக இல்லாமல் இந்தக் கூட்டத்திலாவது காஸாவில் நடைபெற்றுவரும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவையும், இஸ்ரேலையும் உலக நாடுகளின் தலைவா்கள் வலியுறுத்தி காஸாவின் அமைதிக்கு வழிகோல வேண்டும்.

இன்றைய மின்தடை

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாளைய மின் தடை

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT