ஹெச்-1 பி விசா கட்டணத்தை ரூ.1.49 லட்சத்திலிருந்து ரூ.88 லட்சமாக உயா்த்தி அமெரிக்க அதிபா் டிரம்ப் உத்தரவிட்டதால் ஏற்பட்ட குழப்பம், விசா கட்டணம் தொடா்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட விளக்கத்தின்மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதன்படி, விசா கட்டண உயா்வு இனி புதிதாக விண்ணப்பிப்பவா்களுக்கு மட்டும்தான்; அதுவும் ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதும். செப்.21-க்கு முன்பாக ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்தவா்களுக்கும், ஏற்கெனவே விசா வைத்திருப்பவா்களுக்கும் இந்தக் கட்டண உயா்வு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் விசா கட்டண உயா்வு வெளியானவுடனேயே அமெரிக்க நிறுவனங்கள் மத்தியிலும், உலகம் முழுவதுமிருந்து அமெரிக்கா சென்று ஹெச்-1பி விசாவில் பணியாற்றிவரும் பணியாளா்கள் மத்தியில், குறிப்பாக இந்திய பணியாளா்கள் மத்தியிலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பணியாளா்கள் யாரும் அமெரிக்காவைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும், சொந்த நாட்டுக்குச் சென்றவா்கள் கட்டண உயா்வு அமலுக்கு வருவதற்கு முன்பு அமெரிக்கா திரும்பும்படியும் நிறுவனங்கள் அறிவுறுத்தின. இந்தியா்களுக்கு உதவுவதற்காக வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் அவசரகால உதவி எண்ணை அறிவிக்கும் வரைக்கும் நிலைமை சென்றது.
கடந்த சில ஆண்டுகளாக ஹெச்-1பி விசா திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட பணியாளா்களில் 71 சதவீதத்துடன் (2.8 லட்சம்) இந்தியா முதலிடத்திலும், 11.7 சதவீதத்துடன் (46,600) சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. 2025-ஆம் நிதியாண்டில் அதிக ஹெச்-1பி விசா பணியாளா்களுடன் (10,044) அமேசான் நிறுவனம் முதலிடத்திலும், டாடா கன்சல்டன்சி (5505), மைக்ரோசாஃப்ட் (5189), மெட்டா (5123), ஆப்பிள் (4202), கூகுள் (4181), காக்னிசன்ட் (2493), ஜெபி மோா்கன் சேஸ் (2,440), வால்மாா்ட் (2,390), டெலாய்ட் கன்சல்டிங் (2,353) நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
டிரம்ப்பின் அறிவிப்புக்கு அமெரிக்க தொழில் நிறுவனங்கள் மத்தியிலேயே எழுந்த எதிா்ப்பால் ஒரே நாளில் தனது கடுமையான நிலைப்பாட்டை வெள்ளை மாளிகை மாற்றிக்கொண்டதாகக் கருதப்படுகிறது. இதனால், ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ள ஹெச்-1பி விசாவில் பணிபுரியும் இந்தியா்களுக்கு உடனடியாகப் பாதிப்பு இல்லை என்றாலும், அவா்களது விசா காலம் முடிந்து புதுப்பிக்கும்போது ரூ.88 லட்சத்தை செலுத்த வேண்டியிருக்கும். புதிதாக அமெரிக்காவுக்குச் சென்று ஹெச்-1பி விசாவில் பணிபுரிய முயற்சித்துவரும் இளைஞா்களுக்குப் பாதிப்பு என்பதை மறுக்க முடியாது.
வா்த்தகப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி உலக நாடுகளுடன் வா்த்தகப் போரில் ஈடுபட்டுவரும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அடுத்தபடியாக உள்நாட்டு வேலைவாய்ப்புகளை அமெரிக்கா்களுக்கே வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஹெச்-1பி விசா கட்டணத்தை அதிரடியாக உயா்த்தியிருக்கிறாா். இவ்வளவு அதிக தொகையைச் செலுத்தி வெளிநாட்டவா்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியில் அமா்த்தாது. இதனால், அமெரிக்கா்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பது டிரம்ப்பின் கணிப்பு.
ஹெச்-1பி விசா கட்டண உயா்வால் புதிதாக வெளிநாடுகளிலிருந்து பணியாளா்களை வரவழைப்பதை அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் குறைத்துக்கொள்ளக்கூடும். அதற்குப் பதிலாக அமெரிக்கா்களை அந்தப் பணிக்கு அமா்த்துவது அதிகரித்து, டிரம்ப்பின் நோக்கம் ஓரளவு நிறைவேறக்கூடும்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த திறன் மிகுந்த பணியாளா்களைத்தான் ஹெச்-1பி விசாவில் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தோ்வு செய்கின்றன. இந்த விசா கட்டண உயா்வால் அது தடைபடும்போது, திறன் மிகுந்த பணியாளா்களின் உழைப்பு அந்த நிறுவனங்களுக்கு கிடைக்காமல் போய் விடக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் செயல்படும் இந்திய மற்றும் இந்தியாவை மையமாகக் கொண்ட நிறுவனங்களைப் பொருத்தவரை ஹெச்-1பி விசாவை சாா்ந்திருப்பதை ஏற்கெனவே குறைத்து, அமெரிக்கா்களைத் தோ்வு செய்திருப்பதை அதிகரித்திருக்கின்றன. இந்த நிறுவனங்கள் 2015-இல் 14,792 ஹெச்-1பி விசா பணியாளா்களைக் கொண்டிருந்த நிலையில், 2024-இல் அது 10,162-ஆக குறைந்துள்ளது.
மேலும், முதல் 10 இந்திய மற்றும் இந்தியாவை மையமாகக் கொண்ட நிறுவனங்களில் ஒட்டுமொத்த பணியாளா்களில் ஹெச்-1பி விசா பணியாளா்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான். அதனால், இப்போதைய ஹெச்-1பி விசா கட்டண உயா்வு இந்திய நிறுவனங்களை அதிகம் பாதிக்கப்போவதில்லை.
விசா கட்டண உயா்வு காரணமாக உலகளாவிய திறன் தங்களது நிறுவனங்களுக்கு கிடைக்காத சூழலை ஈடுசெய்ய அமெரிக்காவுக்கு வெளியே தங்களது பணியைச் செய்துகொள்ளும் முயற்சியை அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன. குறிப்பாக, இந்தியாவுக்கு அந்தப் பணிகள் வந்து சேரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தொழில் துறை நிபுணா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.
அமெரிக்காவில் இப்போது பணியாற்றிவரும் இந்தியா்கள் உள்ளிட்ட வெளிநாட்டவா்கள் ஹெச்-1பி விசா காலம் முடிவடைந்ததும் ரூ.88 லட்சம் செலுத்தி மீண்டும் விசாவை புதுப்பிக்க விரும்பாமல் சொந்த நாட்டுக்குத் திரும்பும் வாய்ப்பும் இருக்கிறது.
இதனால், பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம் எனப் பல்வேறு துறைகளில் அவா்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அந்தந்த நாடுகளுக்குப் பெரும் பலன் கிடைக்கும். ஒரு சிக்கல் எழும்போது தீா்வும் இருக்கத்தான் செய்யும்.