பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவின்படி ரூ.57,000 ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 175 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் சுமார் 15,000 பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. இதில் 4,700 பணியிடங்களில் மட்டுமே நிரந்தரப் பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மீதமுள்ள பணியிடங்களில் 8,000-த்துக்கும் அதிகமான கௌரவ விரிவுரையாளர்கள் ரூ.25,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
பல்வேறு பாடப் பிரிவுகளுக்காக 2,708 உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான தேர்வு கடந்த டிச. 27-இல் நடைபெற்றது. அதன் முடிவு இதுவரை வெளியாகவில்லை.
பேராசிரியர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களும் தொடர்ந்து 37 நாள்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"கடந்த 1.6.2009-க்கு முன்பு மற்றும் பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே அடிப்படை ஊதியத்தில் மாதம் சுமார் ரூ.3,170 முரண்பாடு உள்ளது. ஒரே பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்' என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது, பெரம்பலூர் மாவட்டம் நெய்க்குப்பை அரசு உயர்நிலைப் பள்ளி பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் வார்னிஷ் அருந்தியதில் உயிரிழந்தார்.
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர் ஆகியோருடனான பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஊதிய முரண்பாடு தொடர்பாக மூவர் குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்ததை ஏற்று கடந்த ஜன. 31-ஆம் தேதி போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, தையல் பயிற்சி போன்ற சிறப்புப் பாடங்களைக் கற்பிப்பதற்காக தொகுப்பூதிய அடிப்படையில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரம் கோரி அவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்களுக்கான ஊதியம் ரூ.12,500-லிருந்து ரூ. 15,000-ஆக கடந்த மாதம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலை என்றில்லை. புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஒப்பந்த கௌரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பால சேவிகாக்கள் ஆகியோர் பணி நிரந்தரம் கோரி கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, சாலை மறியல், துணைநிலை ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம், சிறை நிரப்பும் போராட்டம் எனத் தொடர்ச்சியாக இப்போதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓராண்டு மட்டும் பணி நீட்டிப்பு செய்ய அதிகாரிகள் ஒப்புக்கொண்டாலும் அதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை.
ஆசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்க கௌரவ ஆசிரியர்கள், சிக்ஷா மித்ரா போன்ற பல்வேறு பெயர்களில் 1990-களில் இருந்தே உத்தர பிரதேசம், பிகார், தில்லி, ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதுபோன்று, நாடு முழுவதும் 16 லட்சம் ஆசிரியர்கள் ஒப்பந்த ஆசிரியர்களாகப் பணியாற்றுவதாக மத்திய அரசின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் புள்ளிவிவரங்களில் இருந்து தெரியவருகிறது. இது மொத்த ஆசிரியர்களில் 16 சதவீதம் ஆகும்.
அரசின் புள்ளிவிவரம் இப்படி இருந்தாலும், நாடு முழுவதும் உள்ள 1.50 லட்சத்துக்கும் அதிகமான அரசு, தனியார் பள்ளிகளில் ஒப்பந்த அல்லது பகுதிநேர ஆசிரியர்களே 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர் என்று மற்றோர் ஆய்வு தெரிவிக்கிறது.
நிரந்தர ஆசிரியர் செய்யும் அதே பணியை இவர்கள் செய்தாலும், நிரந்தர ஆசிரியருக்கு கொடுக்கப்படும் ஊதியத்தில் நான்கில் ஒரு பங்குதான் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது என உலக வங்கி 2009-இல் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சண்டீகரில் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் கடந்த நவ.14-இல் உத்தரவிட்டது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் பணியைத் தவிர மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்குவது, ஆவணப் பராமரிப்பு, மாணவர்களின் தரவுகளை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்தல், காலை மற்றும் மதிய உணவுத் திட்ட கண்காணிப்பு, மாணவர்களுக்கான விலையில்லா பொருள்களை வழங்குதல், 100 சதவீத வருகையை உறுதி செய்தல், மாணவர் பள்ளிக்கு வராவிடில் நேரடியாக வீட்டுக்கே சென்று காரணத்தைக் கண்டறிதல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆசிரியப் பணி என்பது மற்ற பணிகளைப்போல அல்ல. மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சீரிய பணியாகும். சில பத்தாண்டுகளுக்கு முன்னர், படிக்காத, கட்டுப்பாடு இல்லாத மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பதுண்டு. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.
எனவே, பணிச்சுமை, பணிச்சூழல் போன்றவை முற்றிலும் மாறியும், கடினமாகவும் ஆகி உள்ள நிலையில் சம ஊதியம், பணி நிரந்தரம் போன்ற ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.