உலகளாவிய புலிகளின் எண்ணிக்கையில் 75% இந்தியாவில் உள்ளன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மாநிலங்களுடன் இணைந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பை நடத்துகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு 126 புலிகள் இறந்த நிலையில், கடந்த ஆண்டு புலிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
புலிகள் அதிகமாக உள்ள மாநிலம் என்கிற வகையில் மத்திய பிரதேசம் 'புலி மாநிலம்' என அழைக்கப்படுகிறது. அங்குள்ள வனப் பகுதிகளில் 785 புலிகள் இருப்பதாக 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தெரியவந்தது. 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அந்த மாநிலத்தில் புலிகள் எண்ணிக்கை 60%உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்துக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 563, உத்தரகண்டில் 560, மகாராஷ்டிரத்தில் 444 புலிகள் உள்ளன. புலிகள் அதிகமாக உள்ள காரணத்தால் அவற்றின் உயிரிழப்பும் மத்திய பிரதேசத்தில்தான் அதிகமாக நிகழ்கிறது.
கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில்தான் அதிகபட்சமாக 55 புலிகள் உயிரிழந்தன. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 38, கேரளத்தில் 13, அஸ்ஸôமில் 12 புலிகள் உயிரிழந்தன. கடந்த ஆண்டு உயிரிழந்த 166 புலிகளில் 31 குட்டிகளும் அடங்கும்.
இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது மொத்தம் இருந்த புலிகளின் எண்ணிக்கை 1867. அந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது 9 சரணாலயங்கள் இருந்தன. இப்போது 58 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 2.5%. புலிகள் பாதுகாப்புக்காக வாழ்விடப் பாதுகாப்பு, வேட்டையாடுதல் தடுப்பு, சமூக அடிப்படையிலான பாதுகாப்பு ஆகிய மூன்று அம்சத் திட்டத்தை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவில் புலிகள் வேட்டையாடப்படுவது பெரும்பாலும் தடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு தண்டனை பெற்றுத் தருவதில் வனத் துறை முனைப்பாகச் செயல்படுகிறது. பெரும்பாலான புலிகள் உயிரிழப்பு இயற்கையானது என்று வனத் துறையினர் தெரிவிக்கின்றனர். புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வனத்தில் தங்கள் ஆதிக்க எல்லையை நிலைநாட்டுவதில் ஏற்படும் சண்டை, வயது மூப்பு, நோய்கள் ஆகியவை புலிகள் உயிரிழப்புக்கு பொதுவான காரணங்கள்.
புலிக் குட்டிகள் பிறந்ததுமுதல் சுமார் 20 மாதங்கள் தாயுடன் இருக்கும். அதன் பிறகு, அவற்றில் குறிப்பாக ஆண் புலிகள், தாயைவிட்டுப் பிரிந்து வனத்தில் தனக்கு என ஆதிக்க எல்லையை நிர்ணயிக்க முயலும்போது, நன்கு வளர்ந்த பிற புலிகளுடன் அவற்றில் சில மோதலில் ஈடுபட்டு உயிரிழக்க நேர்கிறது.
மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு உயிரிழந்த 55 புலிகளில் 11 புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் மரணமடைந்தவை என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. அவற்றில் 8 புலிகள் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தன. வனப் பகுதியை விட்டு வெளியேறிய இந்தப் புலிகள், விவசாயப் பயிர்களை காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வற்றிலிருந்து காக்கும் நோக்கில் விவசாயிகள் அமைத்த மின்வேலியில் சிக்கி இறந்துள்ளன.
இயற்கைக்கு மாறான மரணம் என்ற வகையில், புலிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது பிரதான காரணம் என்றால், பாதுகாக்கப்பட்ட பகுதியைவிட்டு வெளியேறும் புலிகள் மனிதர்களுடனான மோதலிலும், மின் வேலியில் சிக்கியும் உயிரிழப்பது ஏனைய காரணங்கள்.
பாதுகாப்பான, குறைந்த மின் சக்தி கொண்ட மின் வேலிகளுக்குப் பதிலாக விவசாயிகள் சிலர் பாதுகாப்பற்ற முறையில், சட்டவிரோதமாக நேரடி மின் இணைப்பு மூலம் மின் வேலி அமைக்கின்றனர். இதனால் புலிகள் மட்டுமன்றி, சிறுத்தைகள், யானைகளும் உயிரிழக்க நேரிடுகிறது.
புலிகளின் இயற்கையான மரணத்தைத் தடுக்க முடியாது. ஆனால், அவை வனப் பகுதியில் ஆதிக்கத்தை நிலைநிறுத்த சக புலிகளுடன் சண்டையிட்டு இறப்பதைத் தடுக்க முடியும் அதற்கு வன எல்லையை விரிவுபடுத்த வேண்டும்.
புலிகள்- மனிதர்கள் மோதலைத் தடுப்பதற்கான நடவடிக்கையையும் வனத் துறை மேற்கொண்டுதான் வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் இருந்து விலங்குகள் ஊருக்குள் நுழையும் இடங்கள் கண்டறியப்பட்டு, பல்வேறு இடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களில் பதிவாகும் காட்சிகள்மூலம் விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவை வனப் பகுதியை விட்டு வெளியேறினால் மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டி அடிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது; இந்தத் திட்டம் மிகச் சிறந்த பலனை அளித்துள்ளது.
புலிகள் காப்பகங்களுக்காக வனப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் ஏராளமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். புலிகள் பாதுகாப்பு என்கிற பெயரில் வனப் பகுதியில் அல்லது வனத்தையொட்டிய பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே புலிகள் காப்பகங்கள் அதிகமாக உள்ள நிலையில், அதை மேலும் விரிவுபடுத்த முடியாது.
காட்டில் உணவுச் சங்கிலியை சீராகப் பராமரிப்பதில் புலிகளுக்கு முதன்மையான இடம் உண்டு. அதன் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை. அதே வேளையில், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை வனப் பகுதியையொட்டிய கிராமங்களில் வாழும் மக்களையும் பாதிக்கக் கூடாது. இந்த நீண்ட கால பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.