மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 
தலையங்கம்

நிதியமைச்சரின் சவால்!

கடந்த ஆண்டில் 6.5% ஜிடிபியுடன் ஒப்பிடும்போது, நிகழாண்டின் முன்கூட்டிய மதிப்பீடான 7.4% உயர்ந்துள்ளதைப் பற்றி...

ஆசிரியர்

தேசிய புள்ளிவிவர அலுவலகம் (நேஷனல் ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆஃபீஸ்), கடந்த நிதியாண்டுக்கான ஜிடிபியின் முன்கூட்டிய மதிப்பீட்டைக் கடந்த புதன்கிழமை வெளியிட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால், எதிர்பார்த்ததைப் போலவே, 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.4% உயர்வை எட்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கணிப்பின்படி, இந்தியப் பொருளாதாரம் நிகழ் நிதியாண்டில் 7.3% வளர்ச்சியை எட்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. நிதியாண்டின் முதல் அரையாண்டில் 8% வளர்ச்சி அடைந்திருந்த நிலையில், இரண்டாவது அரையாண்டில் அதைவிடச் சற்று குறைவான வளர்ச்சிதான் காணப்படும் என்கிற எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. ஒரு வகையில், தேசிய புள்ளிவிவர அலுவலகமும், ரிசர்வ் வங்கியும் அதிக வேறுபாடில்லாத கணிப்பை வெளியிட்டிருப்பதால், இந்த வளர்ச்சி விகிதத்தின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது.

கடந்த ஆண்டில் 6.5% உடன் ஒப்பிடும்போது, நிகழாண்டின் முன்கூட்டிய மதிப்பீடான 7.4% வளர்ச்சி என்பது வரவேற்புக்குரியது. சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகள் பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொள்ளும் நிலையில், எத்தனையோ அழுத்தங்களுக்கு இடையேயும் இந்தியப் பொருளாதாரம் தனது வளர்ச்சிப் பாதையில் தொடர்வது மிகப் பெரிய ஆறுதல்.

2025-26 பட்ஜெட்டில் கணித்திருந்ததைவிட இப்போதைய முன்கூட்டிய மதிப்பீடு என்பது அதிகம் . இந்தியப் பொருளாதார மதிப்பு ரூ. 357.14 டிரில்லியனை எட்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. இதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஆனால், இந்த வளர்ச்சிக்கு ஏற்ற நிதிவருவாய் வளர்ச்சி காணப்படுமா என்பது சற்று சந்தேகமாக இருக்கிறது. வளர்ச்சிக்கு ஏற்ப அரசின் நிதி வருவாய் அதிகரிக்காவிட்டால், நிதிப் பற்றாக்குறையை ஜிடிபியில் 4.4% அளவில் கட்டுக்குள் வைத்திருப்பது சவாலாக இருக்கும்.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், நமது ஏற்றுமதிகள் 6%-க்கும் அதிகமான வளர்ச்சி அடையும் என்பது ஆறுதலான தகவல். அதே நேரத்தில், வேளாண் துறையின் வளர்ச்சி 3.1% என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டின் 4.6%-ஐ விடக் குறைவு என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஏற்கெனவே பல விளைபொருள்களின் சந்தைவிலை கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், வேளாண் துறையில் ஏற்படும் பின்னடைவுகள் கவலையளிக்கின்றன.

கிராமப்புற வருவாய் பாதிக்கப்படுவதுடன், இதனால் பரவலான பொதுமக்கள் நுகர்வும் பாதிக்கப்படும். தனியார் நுகர்வும் (ப்ரைவேட் கன்சம்ப்ஷன்) கடந்த நிதியாண்டைவிடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் நுகர்வை அதிகரிக்க அரசு பல முயற்சிகளை எடுத்தும்கூட நிகழ் நிதியாண்டில் அதன் வளர்ச்சி 7%தான் என்பது யோசிக்க வைக்கிறது. வருமான வரியில் கணிசமான சலுகை, ஜிஎஸ்டி வரம்பில் சீர்திருத்தம், குறைந்த வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகும்கூட குடும்பங்களின் நுகர்வு கணிசமாக அதிகரிக்காதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

பண்டிகைக்கால நுகர்வு அதிகரிப்பு அதேபோலத் தொடராதது வியப்பளிக்கவில்லை. ஆனால், ஓரளவுக்காவது அதிகரித்த பணப்புழக்கம் நுகர்வை நிலைநிறுத்தும் என்கிற எதிர்பார்ப்பு ஏனோ நிகழவில்லை. அதனால்தான், நிகழ் நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.9% என்று கணிக்கப்படுகிறது. கடந்த (2024-25) நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி 9.85% என்றால், நிகழ் நிதியாண்டில் (2025-26) அதுவே 10%-ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது 8% என்று மறு மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. வரி வருவாயில் ஏற்படும் குறைவை, இதர வருமானங்கள் மூலம் ஈடு செய்து, 4.4% நிதிப் பற்றாக்குறை அளவை நிலைநிறுத்துவது என்பது நிதியமைச்சரின் சாமர்த்தியத்தில்தான் இருக்கிறது.

நிதியமைச்சரின் கரங்கள் கட்டிப்போடப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி, இந்தியப் பொருளாதாரம் தடுமாறாமல் பாதுகாக்க அவரால் முடிந்தது என்பது பாராட்டுக்குரியது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அதுபோன்ற சலுகைகளை வழங்க முடியாது என்பதுடன், வழங்கிய சலுகைகளைத் திரும்பப் பெறவும் முடியாத தர்மசங்கடம் அவருக்கு உண்டு. அது மட்டுமல்ல, முதலீட்டுச் செலவினங்களை அதிகரிக்கவும் நிதி நிலைமை அவரை அனுமதிக்காது.

இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், சர்வதேசக் காரணிகளின் மூலம் உருவாகி இருக்கிறது. பல மாதங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதேபோலத்தான், ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தமும். இவை இரண்டுமே மிகவும் இன்றியமையாதவை. அவை தாமதமாகும்போது, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து, ரூபாய் நாணயத்தின் மதிப்பு மேலும் அழுத்தத்தை எதிர்கொள்ளும்; அது மட்டுமல்லாமல், அந்நிய முதலீடுகளும் பாதிக்கப்படும்.

இந்த நிதியாண்டைவிட, அடுத்த நிதியாண்டு (2026-27) நிதியமைச்சருக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. அதை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் வெளிப்படும். அதுவரை நாம் பொறுத்திருப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT