FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

பணியிடப் பாதுகாப்பில் சமரசம் வேண்டாம்

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணிநேர விபத்துகளில் பல பதிவு செய்யப்படுவதே இல்லை.

Updated On : 13 பிப்ரவரி 2026, 4:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

-பெ. நாயகி

பல்வேறு பணிகளுக்கு நிரந்தரமாக ஆட்களைப் பணியமர்த்துவது என்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதிச் சுமையாகக் கருதப்படுவதால் ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வது என்பது கொள்கை முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. சட்டபூர்வ அனுமதியுடன் வேலைநிறுத்தம் செய்ய மாட்டார்கள்; தொழிற்சங்கங்கள் அமைத்து மேலதிகாரிகளின் தவறுகளைக் கண்காணிக்க மாட்டார்கள்; இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு என சிறுசிறு ஒப்பந்தக் காலம் என்பதால், ஊதிய உயர்வு என்கிற பேச்சுக்கு இடம் இருக்காது என்பன போன்ற காரணங்களும் அந்தக் கொள்கைக்கு ஆதரவாக உள்ளன.

எத்தகைய பணிகளுக்கு அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று பட்டியல் போட்டால் குறுகிய காலப் பணிகள் ஒருபுறம் இருந்தாலும், சமூகத்தின் பொருளாதார மேலடுக்குகளில் இருப்பதாகக் கருதப்படுவோர் செய்யத் தயங்குகின்ற பணிகள்தான் அந்தப் பட்டியலில் அதிகமாக இருக்கும்.

Advertisement

Advertisement

அலுவலகங்கள், அரங்குகள், தொழிற்சாலைகள், தெருக்கள் ஆகியவற்றின் தூய்மைப் பணிகள், ஆயிரம் முறை சொன்னாலும் தன் வீட்டளவில்கூட குப்பைகளைப் பிரித்துத் தராத குடியிருப்புகளில் இருந்து அவற்றைச் சேகரித்துப் பிரித்தல், கழிப்பறைகள் பராமரிப்பு, கழிவுநீர்ப் பாதைகள், குழாய்களில் அடைப்பு எடுத்தல், சாலைப் பணிகள், தொழிற்சாலைகளில் வேதிப்பொருள்கள் உபயோகிக்கப்படும் இடங்களில் அவற்றைக் கையாள்வது, அதிக உயரங்களில் செய்ய வேண்டிய வேலைகள் போன்றவை அதில் அடங்கும்.

இத்தகைய ஒப்பந்தங்கள் மனித சக்தி தேவை ஒப்பந்தங்களாக இல்லாமல், பணிமுடிப்பு ஒப்பந்தங்களாக முடிவு செய்யப்படுவதில் நிர்வாகத்துக்கு சில வசதிகள் இருப்பதால், அவை முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

இந்த ஒப்பந்த விதிகளில் தொழிலாளர்களுக்கு இரண்டு விஷயங்கள் ஆதாரமாகக் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளன. ஒன்று, அவர்களது ஊதியம், இரண்டாவது பணி தொடர்பான பாதுகாப்பு உபகரணங்கள்.

ஒப்பந்தப் புள்ளி கோரும்போது தாமே வெற்றி பெற வேண்டும் என்கிற ஆர்வத்தில் மிகக் குறைந்த லாபம் மட்டுமே பார்க்கும் பெருந்தன்மையைக் காட்டியபடி குறைந்த தொகையை ஏல முன்மொழிவாகக் குறிப்பிட்டுக் காட்டி ஒப்பந்தத்தை பெற்று விடும் முதலாளிகளில் சிலர் அதன்பிறகு அப்படிப் பெருந்தன்மையாக இருப்பதில்லை.

ஒப்பந்தங்களில் பலவகைப்பட்ட தொழிலாளிகளுக்கு குறைந்தபட்சமாக இவ்வளவு ஊதியம் தரப்பட வேண்டும் என்று இருப்பதில்தான் முதல் சமரசம் செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கொடுக்கப்படுவதாக சொல்லப்பட்ட ஊதியத்துக்கும், கொடுக்கப்படும் ஊதியத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது தெரிய வந்தது. இதைத் தடுக்க நிர்வாகத்தின் பொறுப்பு அலுவலர் முன்னிலையில்தான் தொழிலாளர்களுக்கான ஊதியம் தரப்பட வேண்டும் என்று விதி கொண்டு வரப்பட்டது. முழுத் தொகையையும் அவர் முன்னிலையில் கொடுத்து விட்டு, பின்பக்கமாக அதில் பாதியைப் பறித்துக் கொள்ளும் தந்திரம் ஒப்பந்த முதலாளிகளால் பின்பற்றப்பட்டது அதன்பிறகு தெரிய வந்தது.

அதிலிருந்தும் தொழிலாளிகளைக் காப்பாற்ற அவர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்பட வேண்டும்; அதன் அத்தாட்சி ஒப்பந்ததாரர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகும் நிம்மதி என்று எண்ண முடியவில்லை. ஏனென்றால், தொழிலாளர்களின் (குறிப்பாக வட இந்தியத் தொழிலாளர்களின்) ஏடிஎம் அட்டைகளை சில ஒப்பந்த முதலாளிகள் தம்மிடமே வைத்துக் கொண்டார்கள்.

அலுத்துப் போய், வேலையில்லாமல் இருப்பதைவிட ஏதோ கிடைக்கிறதே என்கிற சமரசம் தொழிலாளர்களின் மனதில் ஏற்பட்டு விட்டதால், இப்போதெல்லாம் இது குறித்த புகார்கள் எழுவது குறைந்து விட்டது.

தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படும் பணிகளுக்கு அவசியமான குறைந்தபட்ச பாதுகாப்பு உபகரணங்களாவது முழுமையாக வழங்கப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான். விதிகளின் அடிப்படையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்களைப் பணி செய்ய அனுமதிக்கக் கூடாது; ஆனால், மிகப் பெரிய அளவில் சமரசத்துக்கு உள்ளாவது இந்த விதிதான்.

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததற்காக ஒப்பந்த முதலாளிகளுக்கான அபராதம் என்பது மிகச் சொற்ப அளவாகவே இருக்கும். அந்த உபகரணங்களுக்குச் செலவழிக்க வேண்டிய தொகையுடன் ஒப்பிட்டால், அது ஒன்றுமே இல்லை என்று இருக்கும்.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணிநேர விபத்துகளில் பல பதிவு செய்யப்படுவதே இல்லை. தரவுத் தளங்களில் முரணான தகவல்களும் நம்ப இயலாத அளவுக்குக் குறைவான விபத்து விவரங்களும்தான் கிடைக்கின்றன.

தொழிலாளர்களுக்கு பணி குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது பயிற்சி அளிக்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் ஒப்பந்ததாரர்களால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களின் பணியிடப் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டால் ஒப்பந்தம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுவதுடன், அந்த ஒப்பந்ததாரர் செலுத்தி இருக்கும் வைப்புத் தொகை முழுவதும் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர் அடுத்த சில ஆண்டுகளுக்கு எந்த நிறுவனத்திலும் ஒப்பந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்யப்படும் வகையில் ஒப்பந்த நிபந்தனைகள் கடுமையாக்கப் படவேண்டும்.

இதை மத்திய அரசின் தொழிலாளர் நலத் துறை உறுதி செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். அதுவரை ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியிடப் பாதுகாப்பு என்பது பெயரளவில் மட்டுமே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments