கரூர் நெரிசல் பலிக்கு அரசுப் பணி ஈடல்ல; வாழ்வதற்கான ஆதரவு: ஜோதிமணி எம்.பி
கரூர் பலிக்கு அரசுப் பணி வாழ்வதற்கான ஆதரவு என ஜோதிமணி எம்.பி தெரிவித்திருப்பது...
கரூரில் நடைபெற்ற அந்த கொடுந்துயரமான சம்பவத்தில் உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அரசுப் பணி என்பது அவர்களின் இழப்பை ஈடு செய்யும் ஒன்று அல்ல; ஆனால், அவர்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சிறிய நம்பிக்கையும், பாதுகாப்பும் அளிக்கும் ஒரு ஆதரவாகும் என்று கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கரூரில் நடைபெற்ற அந்த கொடுந்துயரமான சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களின் வலி என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
Advertisement
Advertisement
அன்புக்குரியவர்களை இழந்த அந்த குடும்பங்களின் கண்ணீருக்கு எந்த நிவாரணமும் ஈடாகாது. ஒரு பணி நியமனம் மட்டும் அவர்கள் இழந்த வாழ்க்கையை மீட்டுத் தர முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால், அந்த குடும்பங்கள் இன்று எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களில் பலர் தங்கள் குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தவர்கள். எளிய, விளிம்புநிலை மக்கள். பல குடும்பங்களில் பெண்கள் இன்று தனியாக குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அந்த நாளில் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் ஒரு நிகழ்வைக் காணவும், தாங்கள் விரும்பும் ஒருவரை சந்திக்கவும் வந்த சாதாரண மக்களே. இது பொதுவாக எங்கும் நிகழக்கூடியதுதான். இவ்வளவு பெரிய ஒரு துயரம் நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
இந்த நிலையில், அந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரசுப் பணி என்பது அவர்களின் இழப்பை ஈடு செய்யும் ஒன்று அல்ல; ஆனால், அவர்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சிறிய நம்பிக்கையும், பாதுகாப்பும் அளிக்கும் ஒரு ஆதரவாகும்.
வழங்கப்படும் பணி நியமனங்கள் எந்த விதிமுறைகளையும் மீறாமல், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே வழங்கப்படும்
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட எமது மக்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடமும், சி.பி.ஐ. விசாரணையிலும் தங்களது வாக்குமூலங்களை ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். இதனால் எமது மக்களின் மனநிலையில் புதிதாக எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடாது.
நீதிக்கான விசாரணை முறையாக நடைபெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான ஆதரவும் தொடர வேண்டும்.
துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கான இந்த எளிய ஆதரவை அரசியல் கண்ணோட்டத்தோடும், கடுமையான விமர்சனப் பார்வையோடும் அணுகாமல், கருணையோடும், மனிதநேயத்தோடும் அணுக வேண்டும் எனறு எமது மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அந்த குடும்பங்களின் துயரத்தை உணர்ந்து, அவர்களின் எதிர்காலத்திற்கு துணை நிற்போம் என்று அவர் கூறியுள்ளார்.
A government job cannot compensate for the loss of life in Karur; it is merely support for livelihood says Jothimani MP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.