நிறுவனங்களுக்கிடையே போட்டி நிலவுவதுதான் சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை. பல நிறுவனங்கள் தங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்த போட்டி போடும்போது, நுகர்வோர் பலனடைகிறார்கள் என்பதால்தான் தனியார் மூலம் முன்னெடுக்கப்படும் சந்தைப் பொருளாதாரம் வரவேற்கப்படுகிறது.
சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை வர்த்தகப் போட்டி எனும்போது, பொருள்களின் தரமும் விலையும் நுகர்வோரின் தேர்வாக இருக்கின்றன. "கீரைக் கடையாக இருந்தாலும், எதிர் கடை வேண்டும்' என்கிற அடிப்படையில் இயங்குவதால்தான், அனைத்தும் அரசின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கும் பொதுவுடைமைக் கொள்கையை நிராகரித்து உலக நாடுகள் சந்தைப் பொருளாதாரத்தில் முனைப்புக் காட்டுகின்றன.
ஒரு சில தனியார் நிறுவனங்களின் மொத்தக் குத்தகை (மோனோபொலி) சந்தைப் பொருளாதாரத்தை சாதகமாக்கிக் கொள்ளும் போக்கு, அதன் அடிப்படை இலக்கணத்தையே கேள்விக்குறியாக்குகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் இதுபோன்ற போக்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் அது வானூர்தித் துறையாக இருந்தாலும், தொலைத் தொடர்புத் துறையாக இருந்தாலும் அவை ஒரு சில தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிலை காணப்படுகிறது. அண்மையில் இண்டிகோ வானூர்தி நிறுவனம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஸ்தம்பிக்க வைத்த நிகழ்வு, தனியார் துறையின் மொத்தக் குத்தகையின் கோரமுகத்தின் வெளிப்பாடு.
இந்தப் பின்னணியில்தான் உச்சநீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா தகவல் தொடர்பு நிறுவனம் தனது சேவையைத் தொடர மத்திய அரசு வழிகோலியிருக்கிறது. 2016-17-ஆம் நிதியாண்டு வரையிலான வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆர் எனப்படும் மொத்த வருவாயிலான பங்கை ஐந்தாண்டுகளுக்கு இடைக்கால நிறுத்தம் செய்ய முடிவெடுத்திருக்கிறது. மார்ச் 2026-க்குள் அரசுக்குத் தரவேண்டிய ரூ. 87,695 கோடியை 2031-32 முதல் 2040-41- க்குள் திருப்பிச் செலுத்தினால் போதும் என்கிற சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், நிறுவனத்தை வலுப்படுத்தும் விதத்தில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல்- எம்டிஎன்எல் உள்ளிட்ட எல்லா தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அரசுக்கு உரிமக் கட்டணமும் (லைசென்ஸ்), அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணமும் வழங்க வேண்டும். ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வந்தது கைவிடப்பட்டு, 1999 முதல் வருவாயில் ஒரு பங்காக மாற்றப்பட்டது.
ஏற்கெனவே வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் ஏஜிஆர் மற்றும் அலைக்கற்றை கட்டண நிலுவையான ரூ.36,950 கோடியை தனது பங்காக மாற்றி, அரசு அதைக் காப்பாற்றி இருக்கிறது. இப்போது 49% பங்குகளுடன் வோடஃபோன் நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக அரசு இருந்து வருகிறது.
2019 முதல் அரசின் நிறுவனங்களான பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை இழப்பிலிருந்து மீட்பதற்காக ரூ.3.2 லட்சம் கோடி வழங்கி அந்த நிறுவனங்களை அரசு காப்பாற்றி இருக்கிறது. அப்படி இருந்தும்கூட, அந்த இரண்டு நிறுவனங்களும் தொடர்ந்து இழப்பை எதிர்கொள்வதுடன், சந்தாதாரர்களையும் இழந்து கொண்டிருக்கின்றன.
வோடஃபோன் ஐடியா நிறுவனத்தையும், பிஎஸ்என்எல் -எம்டிஎன்எல் அரசு நிறுவனங்களையும் மக்கள் வரிப் பணத்தை வழங்கி, அரசு காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன என்கிற நியாயமான கேள்வி எழுகிறது. அரசு தலையிடாமல் இந்த நிறுவனங்களின் செயல்பாடு முடங்கினால், ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு துறையும் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களின் குத்தகையாக மாறிவிடும். அதைத் தடுப்பதற்காகத்தான் இந்த இரண்டு நிறுவனங்களையும் அரசு காப்பாற்றும் முயற்சியில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
மொத்த தகவல் தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களில் 75% பேர் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் சந்தாதாரர்களாக இருக்கின்றனர். வோடஃபோன் ஐடியா 16.5% சந்தாதாரர்களுடன் அரசின் மூலதனம் உள்ள தனியார் நிறுவனமாகத் தொடர்கிறது. மீதமுள்ள 8.5% பேர் அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் வாடிக்கையாளர்கள். புதிதாக நிறுவனங்கள் களமிறங்குவதும், வோடஃபோன் ஐடியாவும் பிஎஸ்என்எல்-லும் முனைப்புடன் வாடிக்கையாளர்களை ஈர்த்து போட்டியை அதிகப்படுத்துவதும் அத்தியாவசியத் தேவையாகின்றன.
பெரும்பாலான நாடுகளில் தகவல் தொலைத் தொடர்புத் துறை தனியார் சேவையாகத்தான் செயல்படுகின்றன. எந்தவொரு மேலை நாட்டிலும் அரசுத் துறையாக அவை இல்லை. பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே தனியார்மயத்துக்கு மாறிவிட்டன. அங்கெல்லாம் பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தொலைத் தொடர்பு சேவை வழங்குவதால், வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் சேவைகளைப் பெறுகிறார்கள்.
தொலைத்தொடர்புத் துறை எண்மப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. வோடஃபோன், பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் நிறுவனங்களை இழப்பிலிருந்து காப்பாற்றுவது மட்டுமே அரசின் நோக்கமாக இருக்கக் கூடாது. அந்த நிறுவனங்கள் புதிதாக மூலதனங்களை ஈர்த்து ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுடன் ஆரோக்கியமான வர்த்தகப் போட்டியில் இறங்குவதற்கு வழிகோலுவதும், புதிதாகப் பல நிறுவனங்கள் களமிறங்குவதும் அரசால் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.