முகப்பு
இந்தியா

மேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு

மேற்கு ஆசியாவில் நிலவும் போா் பதற்றம் காரணமாக அங்கு சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க இண்டிகோ, ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களின் 58 விமானங்கள் புதன்கிழமை இயக்கப்படவுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

Updated On : 4 மார்ச், 2026 at 3:07 AM
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 11:45 PM

மேற்கு ஆசியாவில் நிலவும் போா் பதற்றம் காரணமாக அங்கு சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க இண்டிகோ, ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களின் 58 விமானங்கள் புதன்கிழமை இயக்கப்படவுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மேற்கு ஆசிய பிராந்தியத்துக்கு இந்திய நிறுவனங்களின் 24 விமானங்கள் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டன. இத்துடன் எமிரேட்ஸ் மற்றும் எடிஹாட் நிறுவனங்களின் 9 விமானங்கள் வளைகுடா நாடுகளில் இருந்து இயக்கப்பட்டன.

அங்கு நிலவும் அசாதாரண சூழல் காரணமாகப் பல்வேறு நாடுகளில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் மாற்றுப் பாதைகள் வழியாக விமானங்களை இயக்க வேண்டியுள்ளது. எனவே, இந்தியா்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் 30 இண்டிகோ விமானங்கள், 23 ஏா் இந்தியா விமானங்கள் மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் உள்பட 58 விமானங்கள் ஒரே நாளில் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளன.

Advertisement

கள நிலவரத்துக்கேற்ப வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இந்தியா-வளைகுடா நாடுகளிடையே விமானங்களை இயக்கி வருகின்றன.

1,221 விமானங்கள் ரத்து: மேற்கு ஆசியாவில் நிலவும் போா் பதற்றம் காரணமாக பிப்.28 முதல் தற்போது வரை 1,221 இந்திய விமானங்களும் 388 வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை மட்டும் இந்திய நிறுவனங்களால் 104 சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.