தலையங்கம்

தகரும் தடைகள்!

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்துக்கு, ஏனைய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மாற்றாக அமைந்து விடாது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்!

ஆசிரியர்

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே இறுதி செய்யப்பட்டிருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை, சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய ஒப்பந்தம் என்று வர்ணிப்பதில் தவறே இல்லை. 2025-ஆம் ஆண்டு உருவாக்கி இருந்த சர்வதேச நிலையற்ற தன்மை என்கிற கும்மிருட்டுக் குகையில் இருந்து, இந்தியா மிகவும் ராஜதந்திர சாமர்த்தியத்துடன் வெளியில் வந்து கொண்டிருப்பதன் அறிகுறிதான் இது.

சென்ற ஆண்டில் வர்த்தக விதிகள் திருத்தி எழுதப்பட்டன; உலக வர்த்தக நிறுவனம் ஏற்படுத்திய உடன்பாடுகள் புறம்தள்ளப்பட்டன; நாடுகளுக்கு இடையேயான உதவிகள் சீர்குலைந்தன; அண்டை நாடுகளில் ஏற்பட்ட குழப்பங்கள் தேசத்தின் பொறுமையைச் சோதித்தன. இத்தனைக்கு நடுவிலும் புயலில் சிக்கித் தவிக்கும் கப்பலாக இல்லாமல், நம்மால் தொடர்ந்து பயணிக்க முடிந்திருக்கிறது என்பதேகூட மிகப் பெரிய வெற்றி என்றுதான் கூறவேண்டும்.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் ஏற்பட்ட விரிசலை எதிர்கொள்ள முன்னெடுத்த நடவடிக்கைகளில் முக்கியமானது, பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளவுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள். பிரதமர் மோடியின் பிரிட்டனுக்கான அரசுமுறைப் பயணம் கடந்த ஆண்டின் முதலாவது திருப்புமுனையாக அமைந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டபோது, ஒட்டுமொத்த உலகமும் வியப்புடன் பார்த்தது. பல ஆண்டு பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரிட்டனுடன் ஒப்பந்தம் கையொப்பமானது என்றால், பத்தே மாதங்களில் இந்தியா- நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் டிசம்பர் மாதம் கையொப்பமானது.

கடந்த நான்கு ஆண்டுகளில், இப்போதைய ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்துடன் ஒன்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. இதுவரையில் 19 நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால், ஆறு நாடுகளுடன் சிறப்பு வர்த்தக ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தையும்விட, இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இறுதி செய்யப்பட்டிருக்கும் ஒப்பந்தம் வர்த்தகத்தின் மதிப்பில் மட்டுமல்லாமல், இந்தியப் பொருளாதாரத்தின் வருங்காலம் கருதியும் பெரிதும் முக்கியமானது.

உலக நிலைமை முற்றிலும் வேறாக இருந்த 2007-இல் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தை இத்தனை ஆண்டுகள் இழுத்தடித்து, இப்போதுதான் ஒரு முடிவை எட்டியிருக்கிறது. உலகமயம் என்கிற, சர்வதேச அளவிலான தடையற்ற வர்த்தகம் என்கிற இலக்கை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின.

2008 சர்வதேசப் பொருளாதாரப் பின்னடைவைத் தொடர்ந்து, 2013-இல் பேச்சுவார்த்தைகள் தடைபட்டன. கோவிட் -19 கொள்ளை நோய்த் தொற்றின் தாக்கத்தால் உலகப் பொருளாதாரம் மீண்டும் தடுமாறத் தொடங்கியதைத் தொடர்ந்து 2022-இல்பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கின.

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளும், பிரச்னைகளும் முற்றிலும் அகன்று விட்டதால் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. அதிபர் டிரம்ப்பின் இறக்குமதி வரிவிதிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியும், சீனாவை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தமும், தங்களது பொருளாதாரங்களை நிலைகுலையாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உலக நாடுகளைத் தள்ளியிருக்கின்றன. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டு, நடைமுறைச் சாத்தியங்களின் அடிப்படையில் இணைய நாடுகள் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றன.

200 பில்லியன் டாலருடன், இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியம். ஏற்றுமதிகள், சேவைகள் இரண்டிலுமே வர்த்தகம் இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கிறது என்பது முக்கியமான அம்சம். நமது மொத்த ஏற்றுமதியில் 17%, அதாவது 76 பில்லியன் டாலர், மதிப்புடன்கூடிய வர்த்தக உறவு ஐரோப்பிய ஒன்றியத்துடன் நமக்கு உண்டு. இப்போதைய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 2031-க்குள் நமது ஏற்றுமதிகள் மேலும் 50 பில்லியன் டாலர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் சாதகமானது என்பதைக் குறிப்பிட வேண்டும். இந்தியாவும் ஐரோப்பாவும் சர்வதேசச் சந்தையில் எந்தவொரு பொருளுக்காகவும் போட்டியில் இல்லை. இந்தியா அதிக வேலைவாய்ப்புத் தேவைப்படும் ஆயத்த ஆடைகள், காலணிகள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், அடிப்படைக்கூறு மருந்துகள், பட்டை தீட்டிய வைரக் கற்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறது என்றால், ஐரோப்பிய ஒன்றியம் இயந்திரங்கள், விமானங்கள், மின்னணு உதிரி பாகங்கள், மருந்து உபகரணங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கின்றன.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தப்படி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் 90% பொருள்களுக்கு நாம் இறக்குமதி வரி விலக்கு அளிக்கிறோம் என்றால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 93% பொருள்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டிருக்கிறது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இருப்பதாலேயே உடனடியாக நடைமுறைக்கு வந்துவிடாது என்பதையும் நாம் உணரவேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்களும் அதை அங்கீகரித்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தால் ஒரு நன்மை இருக்கிறது. இந்தியாவுடன் நடந்துகொண்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை டிரம்ப் நிர்வாகம் விரைவுபடுத்தக்கூடும். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்துக்கு, ஏனைய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மாற்றாக அமைந்து விடாது என்பதையும் இங்கேகுறிப்பிட்டாக வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலையை விடுங்க.. இதுதான் முக்கியம்! கவனியுங்கள்!!

கதாநாயகனாகும் தனுஷ் மகன்?

கண்ணீர் வருகிறது... வெங்காயமல்ல, தங்கத்தை நினைத்து!

தனியார் பேருந்தில் அதிக கட்டணம்! தனி ஆளாக மறியலில் ஈடுபட்ட நபர்!

வேகமாக செல்லும் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்...! பட்ஜெட் குறித்து மோடி!

SCROLL FOR NEXT