வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும் என்பதுபோல, வல்லரசுகளுக்கு என்றே எப்போதும் தனி நியாயங்கள் உண்டு. உலக அரங்கில் அமெரிக்கா, சீனாவின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன.
கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தில் இந்த இரு நாடுகளுக்குமே பங்கு உள்ளது. வடகொரியாவை ஒழித்துக் கட்டுவோம் என்று ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்த அமெரிக்கா, தென்கொரியாவுடன் இணைந்து அண்மையில் போர்ப் பயிற்சி நடத்தியது.
கொரியப் பகுதியில் உள்ள மஞ்சள் கடலில் நடத்திய இந்தப் போர்ப் பயிற்சியில், ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்கள், 75 விமானங்கள், அணு சக்தியில் இயங்கும் "ஜார்ஜ் வாஷிங்டன்' கப்பல் உள்ளிட்ட 10 போர்க் கப்பல்கள் இதில் பங்கேற்றன. இதுவரை இரு நாடுகளும் இணைந்து நடத்திய பயிற்சியிலேயே மிகப்பெரிய பயிற்சியாக இது கருதப்படுகிறது.
தென்கொரியாவுக்குச் சொந்தமான தீவின் மீது வடகொரியா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இப் போர்ப் பயிற்சியை நடத்தியதாக தென்கொரியா சொல்கிறது. ஆனால், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே தாக்குதல் நடத்தியதாக வடகொரியா சொல்கிறது.
தென்கொரியா, வடகொரியா இடையிலான மோதல் இன்று நேற்று தொடங்கியதன்று. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1948-ல் கொரியா இரண்டு நாடுகளாகப் பிரிந்தது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 1950-ல் தொடங்கிய மோதல் இன்றளவும் தொடருகிறது.
இடையில் இரு நாடுகளின் இணைப்பு முயற்சியெல்லாம் வலுப்பட்டு, இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகூட நடத்தினர். ஆனால், இரு நாடுகளும் இணைவதை வல்லரசுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா மூன்றுமே விரும்பவில்லை.
வடகொரியாவை ஆதரிக்கும் சீனா, ஒருங்கிணைந்த கொரியா தனக்கே ஆபத்தாகிவிடும் என்று அச்சப்படுகிறது. கொரியா இணைந்தால் அதன்மூலம் அமெரிக்கா தனக்கு நெருக்கடி கொடுக்கும் என ரஷியா நினைக்கிறது.
வடகொரியாவை உலக வரைபடத்திலேயே இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதே அமெரிக்காவின் குறிக்கோள். விளைவு, இன்று இரு நாடுகளும் போரில் ஈடுபடும் அளவுக்குக் கொண்டு சென்றுவிட்டது. மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியா நடத்திய அணுஆயுதச் சோதனையும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதலை அதிகப்படுத்திவிட்டது.
தென்கொரியாவின் அமெரிக்க நட்பு வடகொரியாவுக்குப் பிடிக்கவில்லை. வடகொரியாவின் அணுஆயுத பலம் தென்கொரியாவுக்குப் பிடிக்கவில்லை. இதுதான் மோதலுக்கு முக்கிய காரணம். அமெரிக்க நட்பை விட்டுவிட தென்கொரியா தயாராக இல்லை.
அமெரிக்காவைச் சமாளிக்க வேண்டுமானால் அணுஆயுத பலம் அவசியம் என்று நினைக்கும் வடகொரியா, அணுஆயுதத்தை விட்டுவிடத் தயாராக இல்லை. இப்படி இருப்பின் எப்படி தீரும் பிரச்னை?
வடகொரியாவை அடக்கி வைக்க வேண்டும் என்று அமெரிக்கா எடுத்த முயற்சியின் விளைவாக, வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா. மூலம் பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதற்குப் பணிந்து "பியாங்யானில்' உள்ள அணு உலையின் செயல்பாட்டை வடகொரியா நிறுத்திவைத்தாலும், முற்றிலுமாக அணுஆயுதத் தயாரிப்பைக் கைவிடவில்லை என்பது அமெரிக்காவின் சந்தேகம். அதற்கேற்றாற்போலவே வடகொரியத் தலைவர்களும் அணுஆயுதம் தயாரிப்பதை நியாயப்படுத்தி அவ்வப்போது பேசி வருன்றனர்.
உண்மையிலேயே இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், முதலில் வல்லரசுகள் ஒரு நாட்டுக்கு ஆதரவாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். வடகொரியாவை சீனாவும், தென்கொரியாவை அமெரிக்காவும் பகிரங்கமாக ஆதரிப்பதன் மூலம், மோதல் கொரிய நாடுகளுக்கு இடையிலா அல்லது இரு வல்லரசுகளுக்கு இடையிலா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
வல்லரசுகள் உலக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் ஒரு சோதனைக் களமாக கொரியாவை எடுத்துக் கொண்டுள்ளதாகவே கருத நேரிடுகிறது.
தென்கொரியா- வடகொரியாவைப் போலவே இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல் -பாலஸ்தீனம் போன்றவற்றின் சமாதான முயற்சிகளும் அமெரிக்காவுக்குப் பிடிக்காது போலும். அமெரிக்காவின் நடவடிக்கைகள் எப்போதுமே அப்படித்தான் அமைகின்றன. வல்லரசுகளின் விளையாட்டுக் களம்தான் தாம் என்பதை தென்கொரியாவும் வடகொரியாவும் புரிந்துகொள்ளாதவரை இரு நாட்டுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வரப் போவதில்லை.
ஆனால், வடகொரியாவுக்கு இணையாக, தென்கொரியாவும் தோள் தட்டுகிறது. அமெரிக்காவுடன் இணைந்து மஞ்சள் கடலில் நடத்திய போர்ப் பயிற்சி முடிந்துவிட்டாலும், இந்த மாத இறுதியிலேயே மீண்டும் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. மஞ்சள் கடலில் தென்கொரிய, வடகொரியாவின் சர்சைக்குரிய கடல் எல்லையை ஒட்டி அமைந்துள்ள தீவுப் பகுதியிலேயே அந்தப் பயிற்சியும் நடைபெறவுள்ளது.
வடகொரியா தாக்குவது ஒருபுறம், அந்த நாட்டை அச்சுறுத்தும் வகையில் இத்தகைய போர்ப் பயிற்சியை தென்கொரியா தொடருவது மறுபுறம் எனச் சூழ்நிலை இப்படியே இருந்தால் மஞ்சள் கடல், சிவப்புக் கடலாக மாறும் அபாயமும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.