தன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மாணவ, மாணவிகள் எளிதில் சாதிக்கலாம்
தன்னால் முடியும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் மாணவ, மாணவிகள் எளிதாக வெற்றி பெறலாம் என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வே.பொன்ராஜ் தெரிவித்தார்.
தன்னால் முடியும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் மாணவ, மாணவிகள் எளிதாக வெற்றி பெறலாம் என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வே.பொன்ராஜ் தெரிவித்தார்.
விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 10, 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கான வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக அப்துல்காலமின் அறிவியல் ஆலோசகர் வே.பொன்ராஜ் கலந்து கொண்டு பேசியதாவது: மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்களுக்கு அடு்த்தாக வாழ்க்கை கல்வியையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக் தருகிறவர்களாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். இந்த வகுப்புகளில் கற்கும் பாடம் தான் உயர் கல்விக்கு அடித்தளம் என்பதை உணர்ந்து படிக்க வேண்டும்.
ஒவ்வொருவரிடமும் கற்பனைத்திறன், நல்லொழுக்கம், திறமை ஆகியவை இருந்தால் வாழ்க்கையில் வெற்றிதான். ஆசிரியர்கள் தான் வருங்கால நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறார்கள். நீங்கள் என்னவாக விரும்புவதன் அடிப்படையில் மிகப்பெரிய லட்சியம் கொள்ளவேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் அறிவைத் தேடித்தேடி பெறவும், வேர்வை சிந்த கடின உழைப்போடு விடாமுயற்சியும் வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை பார்க்க வரும் மாணவ, மாணவிகளிடம் எடுத்துக் கூறுவார். அதேபோல், நீங்களும் தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெற வேண்டும். மேலும், என்னால் முடியாது என்று சொல்லவே கூடாது. தன்னால் முடியும் என்று சொன்னவர்களின் சரித்திரங்கள் சாதனை ஆக்கப்பட்டிருக்கிறது.
Advertisement
அதனால், தன்னால் முடியும் என்ற மிகப்பெரிய லட்சியம், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியும் வேண்டும். பெரிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருந்தவர்கள் எல்லாம், தனக்குள் என்னை இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பின் தான் விஞ்ஞானிகளாகி உள்ளனர். அதேபோல், மாணவ, மாணவிகள் அனைவரும் தன்னால் முடியும் என்கிற நம்பிக்கையோடு இருந்தால் எளிதில் சாதிக்க முடியும் என்றார். அதையடுத்து, மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கேள்விகளை கேட்டனர். அதற்கு அறிவியல் ஆலோசகர் வே.பொன்ராஜ் விளக்கமும் அளித்தார். பின் தன்னுடன் இதேபள்ளியில் படித்த இரண்டு ஆசிரியர்களை மாணவ, மாணவிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அலுவலர் அதிகமான், தலைமையாசிரியர் நல்லதம்பி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.