FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியது பற்றி...

Updated On : 20 ஏப்ரல் 2026, 12:41 pm IST
குளச்சல் பிரசாரத்தில் ராகுல் காந்தி... - congress
பகிர்:

ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர்கள் தமிழர்கள் என குளச்சலில் ராகுல் காந்தி பேசினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று(ஏப்.20) பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார்.

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலுக்கு வந்தார்.

Advertisement

Advertisement

அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,

"இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கென தனித்துவமான பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மேலும் அந்தந்த மாநிலங்களை அந்தந்த மாநில மக்களே ஆள வேண்டும் என்றும் கருதுகிறோம்.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி இத்தகைய சிந்தனையைக் கொண்டிருக்கவில்லை. ஒரே மரபு, ஒரே மொழி, ஒரே வரலாறு என்ற கொள்கையுடன் மற்ற அனைத்து மரபுகளையும், மொழிகளையும், வரலாறுகளையும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மேலோங்கி நிற்க வேண்டும் என்று பாஜக நம்புகிறது. நமது போராட்டம், இந்த அடிப்படை முரண்பாட்டை எதிர்த்துதான் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டைத் தமிழ்நாட்டு மக்களே ஆள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம், தமிழ்நாட்டின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமே இருக்க வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை இருப்பது போலவே, தமிழ்நாட்டிற்கும் அந்த உரிமை உண்டு. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் இந்த உண்மையை பாஜக ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, பல்வேறு மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைத்து பலவீனப்படுத்தவே அது விரும்புகிறது. தமிழ்நாட்டைத் தலைநகர் தில்லியிலிருந்து கொண்டே ஆள வேண்டும் என்று பாஜக துடிக்கிறது.

தமிழ்நாட்டை தில்லியிலிருந்து ஆள வேண்டும் என்ற விருப்பத்தைத் தமிழ்நாட்டு மக்களிடம் நேரடியாகச் சொல்லும் துணிவு பாஜகவிற்கு இல்லை. எனவே, அவர்கள் என்ன தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அரசியல் கட்சிகளில் ஒன்றைக் கைப்பற்றியிருக்கிறார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் பங்காற்றிய, தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரதிநிதியாகத் திகழ்ந்த அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் இன்றோ, அதிமுக என்பது வெறும் ஓடாக, சக்கையாக மாறிவிட்டது. தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான ஒரு கருவியாகவே மட்டுமே பாஜகவிற்குப் பயன்பட்டு வருகிறது. அதிமுகவின் தலைமை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து பாஜகவிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டது. இதன் மூலம், மறைமுகமாகத் தமிழ்நாட்டை ஆள பாஜக திட்டமிட்டு வருகிறது.

நாம் இப்போது தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும், தமிழ் வரலாற்றையும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து வருகிறோம். அவர்கள் திராவிடக் கருத்தியலைத் தாக்குகிறார்கள. ஏனெனில் அவர்களுக்குத் தெரியும். ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை எதிர்த்து நிற்கக் கூடியவர்கள் தமிழர்களே. அவர்களுக்கு சவால் விடக்கூடியவர்கள் தமிழர்கள். பாஜக - ஆர்எஸ்எஸ்ஸை எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர்கள் தமிழர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். மேலும், தமிழ் மண்ணில் வாழும் தமிழ் மக்கள் ஒருபோதும், தெரிந்தே தங்களுக்கு அடிபணிய மாட்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் அதிமுக வாயிலாக ஊடுருவும் இந்தப் புதிய உத்தியை கையாள முயல்கிறார்கள். சில நாள்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில், பிரதமர் மிகவும் ஆபத்தான ஒரு செயலைச் செய்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க முற்பட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள் இணைந்து அதனை முறியடித்துள்ளோம்.

எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் தில்லியில் இருந்து ஆட்சி செய்ய விரும்புகிறது பாஜக. அமைதியான மாநிலமான மணிப்பூர் இன்று பற்றி எரிகிறது. ஆர்எஸ்எஸ் - பாஜகவின் திட்டத்தை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டை மோடியிடம் ஒப்படைக்கும் ஆர்எஸ்எஸ் - அதிமுக திட்டத்தை நாம் முறியடிப்போம்" என்றார்.

ராகுல் காந்தி தனது உரைக்கு முன்னதாக, விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

summary

Tamils with the courage to oppose the RSS and the BJP: Rahul speaks in Colachel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments