எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியரின் பணி முக்கித்துவம் வாய்ந்தாகும்; ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்
எதிர்காலத்தில் நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்தாகும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்தாகும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.
விருதுநகர் கேவிஎஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசியதாவது: மாதா, பிதா, குரு, தெய்வம் என முன்னோர்கள் வரிசைப் படுத்தியுள்ளனர். அவ்வகையில் கடவுளை விட ஒரு படி மேலாகவே ஆசிரியர்களை போற்றியுள்ளனர். இதன் மூலம் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற கூற்று உண்மையாகிறது. அந்தளவிற்கு சிறப்பு வாய்ந்தது ஆசிரியர் பணி. ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், அந்நாடு கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும்.
இப்பணி புத்தகத்தை பார்த்து கற்றுக் கொடுப்பது மட்டும் கிடையாது. அதைவிட மேலாக வாழ்க்கை தத்துவம், ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியைவயுடன் கல்வி அறிவையும் ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். ஒரு குழந்தை பெற்றெடுத்த அன்பாக வளர்த்து பள்ளியில் சேர்ப்பது தான் பெற்றோர்களின் வேலை. அதையடுத்து, அந்த குழந்தைக்கு தொடக்க கல்வி முதல், உயர் கல்வி வரையில் நல்ல தாயாகவும், தந்தையாகவும், நல்லாசிரியருமாக இருந்து நல்வழிப்படுத்துகின்றனர். அதேபோல், எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதிலும் ஆசிரியரின் பணி முக்கியத்துவம் வாய்ந்தாகும்.
Advertisement
ஆசிரியர்கள் அனைவருக்கும் டாக்டர்.ராதாகிருஷ்ணன் முன்மாதிரியாக இருக்கிறார். படித்து தெளிய வேண்டும், தெளிந்து அதன் படி நடக்க வேண்டும். நாம் கற்றதை நம்மைச் சுற்றிருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் படைத்தவர். சாதரண ஆசிரியராக இருந்து தன்னுடைய கடுமையான உழைப்பினால் முதல் துணைக்குடியரசு தலைவராகவும், அதையடுத்து குடியரசு தலைவராகவும் சிறப்பாக பணிபுரிந்து ஆசிரியர் சமுதாயத்திற்கு பெருமையைத் தேடி தந்தவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன். எனவே அவரது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக இதேநாளில் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், அவரது நினைவை போற்றும் வகையில் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக மாவட்ட அளவில் சிறப்பாக பணிபுரிந்து மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்த 9 முதுகலை ஆசிரியர்களுக்கும், 6 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளையும் ஆட்சியர் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ச.பால்ராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமச்சந்திரன்(விருதுநகர்) சங்கரநாராயணன்(அருப்புக்கோட்டை), விஷ்ணுதாஸ்(ஸ்ரீவில்லிபுத்தூர்), மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் விஜயராணி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.