அழிவின் பிடியில் மொழியியல் துறை
ஆசிரியர், உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு மொழியியல் கல்வித் தகுதி புறக்கணிக்கப்படுவதால், அந்தத் துறை அழிந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர், உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு மொழியியல் கல்வித் தகுதி புறக்கணிக்கப்படுவதால், அந்தத் துறை அழிந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்போது ஒரு சில பல்கலைக்கழகங்களில் இந்தத் துறை உள்ளபோதும், அரசுப் பணி கிடைக்கபோவதில்லை என்பதால் படிப்புகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துவிட்டது என்கின்றனர் பேராசிரியர்கள்.
அல்ஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் கல்லூரி ஆங்கிலத் துறை, தமிழ்த் துறை பேராசிரியர் பணிகளுக்கு மொழியியல் கல்வித் தகுதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதுபோல பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இப்போது சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) மூலம் நடத்தி வரும் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்காக 84 பாடங்களின் கீழ் நடத்தும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) மொழியியல் பாடத்தையும் ஒரு பாடமாகச் சேர்த்துள்ளது.
அதுமட்டுமன்றி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மொழிபெயர்ப்புப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் மொழியியல் கல்வித் தகுதி அங்கீகரிக்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் இந்தப் படிப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், இதனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் வேலைவாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த் துறையிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் தெய்வசுந்தரம் கூறியது:
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1977-இல் எம்.ஏ. மொழியியல் படிப்பு மாலை நேரப் படிப்பாக அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 2003-ஆம் ஆண்டில் முழு நேரப் படிப்பாக எம்.ஏ. மொழியியல் கொண்டுவரப்பட்டது. ஆனால், 2010-இல் அந்தத் துறை இழுத்து மூடப்பட்டது.
ஆனால், இந்தப் படிப்புக்கு தமிழகத்தில் போதிய வரவேற்பு, விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பல்கலைக்கழகத்தில் படித்த 30-க்கும் மேற்பட்டோரில் 20-க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் எம்.ஏ. மொழியியல், மொழியியல் ஆராய்ச்சிப் படிப்புகள் இன்றைக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், தமிழக அரசுத் துறையிலும், பிற தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால் இந்தப் படிப்புகளின் மீது படிப்படியாக ஆர்வம் குறைந்து, இன்றைக்கு மாணவர் சேர்க்கையும் வெகுவாகக் குறைந்துபோயுள்ளது.
மத்திய அரசுத் துறைகளிலும், வெளி நாடுகளிலும் இந்தப் படிப்பின் மகத்துவம் அறியப்பட்டிருக்கிறது. ஏனெனில், ஒரு மொழியியை அறிவியல் ரீதியில் ஆய்வு செய்து படிப்பதே மொழியியல் ஆகும். அதாவது எழுத்து வடிவம், வாக்கிய அமைப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்து படிப்பதே இந்தத் துறையின் சிறப்பம்சமாகும்.
கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்கள் பாடத் திட்டத்தில் 40 சதவீதத்துக்கும் மேல் மொழியியல் தொடர்பாகவே படிக்க வேண்டும்.
அப்படியிருக்கும்போது, பல்கலைக்கழகங்கள், கல்லூரி ஆங்கில, தமிழ்த் துறைகளில் மட்டுமல்லாமல் அனைத்து மொழித் துறைகளிலும் மொழியியல் படித்தவர்களை நியமிப்பது அவசியமாகும் என்றார்.
இதுகுறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற மொழியியல் துறை பேராசிரியர் ராஜேந்திரன், பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தலைவர் தயாளன், ஓய்வுபெற்ற பேராசிரியர் சண்முகம் ஆகியோர் கூறிய கருத்துகளின் சாரம்சம்:
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மொழியியல் படித்தவர்களையும், மொழியியலில் ஆராய்ச்சி முடித்தவர்களையும் உதவிப் பேராசிரியர் பணிக்கு தமிழக அரசு அனுமதித்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2013-இல் வெளியிடப்பட்ட அரசாணை எண்.72-இல் மொழியியல் துறை பிஎச்.டி. படிப்பு, ஆங்கிலம் அல்லது தமிழ் பிஎச்.டி. படிப்புக்கு இணையானது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த அரசாணை காரணமாக, மொழியியல் படித்தவர்களை ஆசிரியர் பணிக்குத் தகுதியில்லாதவர்களாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) புறக்கணித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற உதவிப் பேராசிரியர் தேர்விலும், ஏராளமான மொழியியல் பட்டதாரிகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதுபோன்ற காரணங்களால் இந்தத் துறை அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்திடம் முறையிட்டுள்ளோம் என்றனர்.