தமிழக பல்கலை.களின் தொலைநிலைப் படிப்புகள் அங்கீகரிக்கப்படுமா? 3 கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே யுஜிசி அனுமதி
தொலைநிலை பட்டப்படிப்புகளை நடத்த தமிழகத்தில் 3 கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகாரம் அளித்துள்ளது
தொலைநிலை பட்டப்படிப்புகளை நடத்த தமிழகத்தில் 3 கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகாரம் அளித்துள்ளது. இதனால், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் மூலம் நடத்தப்படும் தொலைநிலை பட்டப்படிப்புகள் அங்கீகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு அங்கீகரிக்கப்படவில்லையெனில், பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனப் பேராசிரியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கும், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும் தேவையான நிதி உதவிகளை யுஜிசி வழங்கி வருகிறது. இதற்காக பல்வேறு வழிகாட்டுதல்களையும் யுஜிசி வெளியிட்டு வருகிறது.
இந்த வழிகாட்டுதலை பின்பற்றாத கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை யுஜிசி ரத்து செய்துவிடும். அவ்வாறு அனுமதி ரத்து செய்யப்பட்டால் யுஜிசி மானியம் நிறுத்தப்பட்டுவிடும் என்பதுடனழ், அந்தக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பட்டப்படிப்புகளுக்கும் அங்கீகாரம் இல்லாமல் போய்விடும். அதாவது மத்திய அரசுப் பணிகளுக்கோ அல்லது பிற மாநில பணிகளுக்கோ இந்தப் படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. மேலும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மேற்படிப்புக்கும் விண்ணப்பிக்க முடியாது.
எல்லை தாண்டக்கூடாது: இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில எல்லைக்குள் மட்டும் படிப்புகளை வழங்க வேண்டும். மாநில எல்லையைத் தாண்டி படிப்புகளை வழங்கவோ, படிப்பு மையங்களை அமைக்கவோ கூடாது. இந்த உத்தரவை பின்பற்றாத தொலைநிலைக் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க முடியாது என யுஜிசி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றம் அனுமதி: இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், யுஜிசி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், 2016-17 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி அளித்தது. இதனடிப்படையில், சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் அவற்றின் தொலைநிலைக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துள்ளன.
3 கல்வி நிறுவனங்களுக்கு மட்டும்: இந்த நிலையில், 2016-17 கல்வியாண்டுக்கான நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள் பட்டியலை யுஜிசி தற்போது வெளியிட்டுள்ளது.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னை தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார் சபா ஆகிய மூன்று கல்வி நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
அங்கீகரிக்கப்படுமா?: யுஜிசியின் இந்த புதிய பட்டியலால், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிற அரசுப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் தொலைநிலை பட்டப்படிப்புகள், முதுநிலைப் பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் அங்கீகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியது:
சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசு பல்கலைக்கழகங்களுக்கு தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள் மூலமே அதிக வருவாய் கிடைக்கிறது. யுஜிசி மானியமும் கிடைக்கிறது. இந்த வருவாயைக் கொண்டே, பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பேராசிரியர்களுக்குமான ஊதியம், பிற செலவுகள் சமாளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், யுஜிசி வெளியிட்டுள்ள பட்டியல் காரணமாக மாணவர்களிடையே பெரும் குழப்பம் ஏற்படும். அவர்களது பட்டப்படிப்பு அங்கீகாரமும் கேள்விக்குறியாகிவிடும். தமிழகத்தைத் தாண்டி பணி வாய்ப்புக்கோ அல்லது மேற்படிப்புகளுக்கோ இவர்கள் செல்ல முடியாமல் போய்விடும். இதனால், வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படும். யுஜிசி மானியமும் ரத்தாகிவிடும் என்றனர்.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் டேவிட் ஜவஹர் கூறியது:
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்துக்கு யுஜிசி அனுமதி அளிக்காததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, 2016-17 கல்வியாண்டு சேர்க்கைக்கு அனுமதி பெற்றோம். அதன் பிறகு, யுஜிசி அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கவில்லை. நீதிமன்ற அனுமதியின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையையும் நடத்தியுள்ளோம்.
இந்த நிலையில், யுஜிசி இப்போது வெளியிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைக் கல்வி நிறுவனங்களின் பட்டியல் மாணவர்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து உயர்கல்வி உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் என பெரும்பாலான மாநில அரசு பல்கலைக்கழகங்களும் இதுபோல மாநில எல்லையைத் தாண்டி தொலைநிலைக் கல்வி மையங்களை அமைத்து படிப்புகளை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.