கல்வி

பி.இ. கலந்தாய்வு: மாணவியுடன் வரும் தந்தையும் தங்க அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு

DIN

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு வெளியூர்களிலிருந்து மாணவிகளுடன் வரும் தந்தையும் தங்குவதற்கான ஏற்பாட்டை அண்ணா பல்கலைக்கழகம் செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு, ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்குத் தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு பிரிவு என மொத்தம் 8 பிரிவுகளாக நடத்தப்பட்டு வந்தது. கடைசிப் பிரிவு மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
இவ்வாறு இரவு வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் காரணத்தால், வெளியூர்களிலிருந்து கலந்தாய்வுக்கு வரும் மாணவிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், தாயுடன் வரும் மாணவிகள் மட்டும் பல்கலைக்கழக விடுதியில் தங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நிகழாண்டில் நீட் தேர்வு இழுபறி மற்றும் தமிழக எம்.பி.பி.எஸ். சேர்க்கை தொடர்பான வழக்குக் காரணமாக, பி.இ. கலந்தாய்வு கால தாமதமாகத் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்தில் பி.இ. கலந்தாய்வு முடிக்கப்படுவதால், நாள் ஒன்றுக்கு 8 பிரிவுகளாக நடத்தப்பட்டு வந்த கலந்தாய்வு, இந்த ஆண்டு 9 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
இதனால், முதல் பிரிவு காலை 7 மணிக்குத் தொடங்கும். கடைசிப் பிரிவு இரவு 7 மணிக்குத் தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெறும். இதனால், வெளியூர்களிலிருந்து கலந்தாய்வில் பங்கேற்க தாயுடன் வரும் மாணவிகள் மட்டுமின்றி, தந்தையுடன் வரும் மாணவிகளும் பல்கலைக்கழக விடுதியில் தங்கிக் கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாட்டை அண்ணா பல்கலைக்கழகம் செய்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன், கலந்தாய்வுக்கு மாணவிகளுடன் வரும் தாய் அல்லது தந்தை இருவரும் பல்கலைக்கழக விடுதியில் தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் இடத்திலிருக்கும் பல்கலைக்கழக ஊழியர்கள் அல்லது பல்கலைக்கழக காவலாளிகளிடம் விவரத்தைத் தெரிவித்தால், பல்கலைக்கழக வாகனம் மூலம் விடுதிக்கு அழைத்துச் சென்று விட்டுவிடுவர் என்றார்.
ஒரே பெயரில் உள்ள கல்லூரிகள் விவரம்: கலந்தாய்வில் பி.இ. இடங்களைத் தேர்வு செய்ய வரும் மாணவர்கள், கல்லூரிகளின் பெயரில் குழப்பம் அடையாமல் இருக்கும் வகையில் ஒரே பெயரில் உள்ள கல்லூரிகள் குறித்த விவரம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்து கல்லூரிப் பெயர்களை மாணவர்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்பதோடு, கல்லூரி குறியீட்டு எண் அடிப்படையிலேயே இடங்களைத் தேர்வு செய்வதுதான் சிறந்தது என்றனர் பொறியியல் சேர்க்கை அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT